Published : 13 Dec 2014 03:24 PM
Last Updated : 13 Dec 2014 03:24 PM
பத்துப் பன்னிரெண்டு வருஷத்திற்கு முன்பு வீடு கட்ட நான் பட்ட பாடு ஒரு குறுங்கதைதான். சிறு வியாபாரத்தை நம்பிப் பிழைப்பு நடத்திவருபவன் நான். என் அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் எல்லோரும் ஒரே சிறிய வீட்டில் ஒன்றாக வாழ்ந்துவந்தோம். உண்டு, உறங்குவதற்கான இடம் மட்டுமே அந்த வீட்டில் இருந்தது. அதுவும் வாடகை வீடு. அதன் பிரச்சினைகளைச் சொல்லவா வேண்டும்? இந்த இடநெருக்கடியில் வசித்து வந்ததால் தனியாகச் சொந்த வீடு கட்டிய பிறகு தான் திருமணம் செய்வது என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கான பொருளாதர வசதிகளை ஓரளவு சம்பாதித்தும் வைத்திருந்தேன். ஆனாலும் வீடு கட்டுவதில் இடையூறுகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன.
வீடு கட்டுவதில் சிக்கல்
நான் எவ்வளவோ முயன்றும் வீடு கட்டாமலேயே திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திருமணத்துக்குப் பிறகு சீக்கிரத்திலேயே சொந்த வீடு கட்டிவிட வேண்டும் என நினைத்தேன். ஆனாலும் அந்த முயற்சிகளில் தடைகள் தொடர்ந்துவந்தன. திருமணத்துக்கு முன் 1997-ல் காலி மனை வாங்கி வீடு கட்டுவதற்குத் திட்டமிட்டிருந்தேன். கால வளர்ச்சி ஏற்பட்ட மாற்றத்தால் அந்த இடம் தொழிற்சாலைப் பகுதியாக மாறி வீடு கட்ட முடியாமல் ஆகிவிட்டது.
அந்த இடத்தை விற்று வேறு இடம் வாங்கி வீடு கட்டலாம் என நினைத்தேன். அதிலும் முடியாமல் போய்விட்டது. 2010-ல் குடியிருப்புப் பகுதியில் ஓர் இடம் வாங்கி வீடு கட்டுவதற்கு முயற்சி எடுக்கும்போது அந்த இடம் ரயில்வே பகுதியின் அருகில் உள்ளது என்று ப்ளான் அப்ரூவல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
காலால் வந்த தடை
நீண்ட கால அலைச்சலுக்குப் பிறகு ஒருவழியாக வீடுகட்ட அனுமதி கிடைத்தது. உடனே வீட்டுக் கட்டிடப் பணியையும் தொடங்கினோம்.மெல்ல மெல்ல வீட்டுப் பணி எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் நல்ல படியாக நடந்தது. செண்ட்ரிங் போடும் வரை உயர்ந்தது. செண்ட்ரிங் போடுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பு போர்ட்டிகோ செண்ட்ரிங் போடப்பட்டது. மறுதினம் தண்ணீர் நனைப்பதற்காக நான் மேலே ஏறினேன். ஏணியில் கால் தவறிக் கீழே விழுந்தேன். கரண்டைக் கால் துண்டாக ஒடிந்துவிட்டது. எழவே முடியாத நிலை. உறவினர் உதவியுடன் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றேன்.
ஆனால் அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மருத்துவர் ஒருவர்கூட இல்லை. அதனால் வேறு வழியில்லாமல் ஒரு வைத்தியரிடம் சென்று காலுக்குக் கட்டுப் போட்டோம். இரு தினங்கள் கழித்து மருத்துவரிடம் காட்டினேன். எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றார். எனக்குக் கொஞ்சம் பயம் வந்தது. பெரிய சிகிச்சை ஏதும் செய்ய வேண்டியிருக்குமோ, அப்படியானால் வீடு கட்ட வைத்திருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டியதாகிவிடுமோ என நினைத்தேன். அப்படி ஏதும் வரக் கூடாது என நினைத்தேன். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?
தாமதமான கட்டிடப் பணி
எக்ஸ்ரேயைப் பார்த்த பிறகு மருத்துவர், சிகிச்சைக்கு 2 லட்சம் வரை செலவு ஆகும் என்றார். இனி எந்தவிதத்திலும் வீடு கட்டும் பணி தடை படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் வேறு வழியில்லாமல் கட்டுப் போட்ட வைத்தியரிடமே காட்டி இரு மாதங்கள் நடக்காமல் வீட்டில் இருந்தேன். எனக்கு உடல் நிலை சரியில்லாததால் ஆறு மாதத்தில் முடிய வேண்டிய கட்டிடப் பணி, ஒரு வருஷம் வரை இழுத்தது. ஆனாலும் நான் இல்லை என்றால் மேஸ்திரி பொறுப்புடன் செயல்பட்டு வீட்டுக் கட்டிடப் பணிகளைக் கவனித்துக்கொண்டார்.
மனைவியின் உறுதுணையும், நண்பர்களின் உதவியும் இறைவனின் கிருபையாலும் வீட்டுப் பணி ஒருவழியாக நிறைவடைந்தது. கனவு இல்லம் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் சொல்லும் அடையாளமாக என் வீடு இன்று எழுந்துநிற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT