Last Updated : 13 Dec, 2014 03:25 PM

 

Published : 13 Dec 2014 03:25 PM
Last Updated : 13 Dec 2014 03:25 PM

சுற்றுச்சூழலுக்கு உகந்த உலர் சுவர்

வீடு என்பது பல்லாண்டுக் காலத்துக்கு நீடித்து நிலைக்கும் ஒரு விஷயம். அதனால் வீட்டைப் பார்த்துக் கட்டுவார்கள். ஒவ்வொரு அறையையும் திட்டமிட்டுக் கட்டுவார்கள். ஆனால் என்னதான் பார்த்துப் பார்த்துக் கட்டினாலும் சில தவறுகள் ஏற்பட்டுவிடும். அது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீட்டை இன்றைய நிலையில் இருந்து பார்க்கும்போது சில மாறுதல்கள் செய்யத் தோன்றும்.

உதாரணமாகப் படுக்கையறையை மாற்றத் தோன்றும். சமையலறையை மாற்ற நினைப்போம். வரவேற்பறையை மறித்து வேறு ஒரு புதிய அறையை உருவாக்க நினைக்கலாம். முந்தைய கட்டிட பாணிகளில் இம்மாதிரி அறைகளை மாற்றியமைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதற்காக வந்த தொழில்நுட்பம்தான் உலர் சுவர் தொழில்நுட்பம்.

இது நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம். ஆனால் 1920 வாக்கில்தான் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தும் வகையில் செறிவாக்கப்பட்டது. பிறகு இங்கிலாந்திலும் மேற்கு நாடுகளிலும் இந்தத் தொழில்நுட்பம் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவில் சமீப காலமாகத்தான் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது வீட்டின் உள்புறச் சுவர்கள் மட்டும் பாரம்பரிய முறைப்படி செங்கற்களைக் கொண்டு கட்டிவிட்டு மீதி உள்ளே அறைகள் முழுவதையும் உலர் சுவர் கொண்டு அமைக்கலாம். உலர் சுவர்களை அமைப்பதன் மூலம் கட்டிடத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டிவிட முடியும். கூலியாள்களும் குறையும்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் கட்டுமானப் பொருள்களில் இருந்தும் அதிக அளவிலான கரியமில வாயு வெளியேறுகிறது. இது சுற்றுச்சூழலுக்குக் கேடானது. அதனால் இதைத் தடுக்க இப்போது புதிய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அனல் மின் நிலயைக் கழிவுகளைக் கூட இந்த வகையில் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்த வழி பிறக்கும்.

உலர் சுவர் தயாரிப்பிலும் இப்போது புதிய நுட்பங்கள் வந்துவிட்டன. தொழிற்சாலைக் கழிவுகளையே 85 சதவீதம் வரை மூலப் பொருளாகக் கொண்டு உலர் சுவர் தயாரிக்கப்படுகிறது. எரிசாம்பல், உலைக்களத் தூசி, கசடு, ஆலைக் கழிவுகள் போன்றவற்றையே மூலப் பொருளாகப் பயன்படுத்தலாம். இவற்றைத் தண்ணீருடன் கலந்து அச்சுக்களில் வார்த்துத் தகடு வடிவில் உற்பத்தி செய்யலாம். இவ்வாறு தயாரிக்கப்படும் முறையில் எந்த விதத்திலும் வெப்பம் தேவைப்படாது. அதேபோல மின்சக்தி அவ்வளவு தேவைப்படாது.

ஜிப்சம் முறையில் தயாரிக்கும்போது அதிக அளவில் கரியமில வாயு வெளியேறும். மேலும் ஜிப்சத்தை அரைத்துச் சூடேற்றி செல்லுலோஸ், ஸ்டார்ச் ஆகிய தாவரப் பொருள்களைக் கலப்பார்கள். இதனால் பூச்சிகள் வரும் வாய்ப்பிருக்கிறது. இதனால் கட்டுமானச் செலவும் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x