Published : 06 Jul 2019 09:56 AM
Last Updated : 06 Jul 2019 09:56 AM
வீடு என்பது பலருக்கும் அழகிய கனவு. அதற்காகச் செலவிடுவதற்குச் சிலர் தயங்க மாட்டார்கள். ஆனால் கட்டுமானச் செலவுகள், கடனுக்கான மாதத் தவணைகள் என்பதெல்லாம் சிலருக்கு மன உளச்சலைத் தரக்கூடியவை. அப்படிப்பட்டவர்களுக்கு பட்ஜெட் என்பது மிக முக்கியம். அவர்களுக்கு உதவக்கூடிய சில ஆலோசனைகள்:
நமக்குத் தெரிந்தவர்களுக்கு ஒழுங்காக வீட்டைக் கட்டிக் கொடுத்த கட்டிட ஒப்பந்ததாரரை நாமும் தேர்நதெடுப்பதில் தப்பில்லை. ஆனால், இப்படி ஒருவரை மட்டுமே சட்டென்று தேர்ந்தெடுக்காமல் கட்டிட ஒப்பந்ததாரர்கள் இன்னும் சிலர் குறித்த தகவல் சேகரித்து அவர்களில் குறித்த நேரத்தில், குறைவான தொகைக்கு வீடு கட்டித் தந்தவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பணத்தை மிச்சம் பிடிக்கலாம்.
பொதுவாக, நமககுத் தேவைப்படும் அறைகளோடு விருந்தினர்களுக்கான ஒரு அதிகப்படி அறை போதுமானது. சிலர் இஷ்டத்துக்கு அறைகளை அதிகமாகக் கட்டிவிட்டு மாதத் தவணைகளைக் கட்ட முடியாமல் விழி பிதுங்கி இருப்பதைக் கண்டதுண்டு.
வழக்கமான நீள சதுர அளவு கொண்ட வீடுகள்தான் விலை குறைவானவை. மாறாக நடுநடுவே அறுகோண, வட்டவடிவ கட்டுமானங்கள் என்றெல்லாம் அமைத்துக் கொண்டால் செலவு அதிகமாகும்.
கூரையிலுள்ள கோடுகளும் வளைவுகளும் முப்பரிமாண அமைப்புகளும் கட்டுமான விலையை உயர்த்தும். அதுமட்டுமல்ல விதவிதமான கூரை அமைப்புகள் வருங்காலத்தில் கசிவுக்கு வழிவகுக்க வாய்ப்பு உண்டு. அதற்கு வேறு தண்டம் அழுதாக வேண்டும்.
வீட்டில் சிலவற்றை ஒருமுறைதான் பொருத்துவோம். சிலவற்றை அவ்வப்போது மாற்றுவோம். ஷவர், குளியலறைத் தொட்டி, ஃப்ளஷ் அவுட், உணவு மேஜை, அலங்கார விளக்குகள் போன்ற ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள். இவற்றில் எவையெல்லாம் ஒருமுறை மட்டுமே பொருத்தப்படும் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.
இத்தகைய பொருள்களை நல்ல தயாரிப்பு பார்த்து அதிகச் செலவானாலும் வாங்குங்கள். ஆனால் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் மாற்ற வாய்ப்பு உள்ள பொருள்களை அதிக விலை கொண்டதாக வாங்க வேண்டாம். இதன் மூலம் செலவை மிச்சப்படுத்தலாம்.
தரைப்பரப்பின் மீது பளிங்குக் கற்களோ செராமிக் ஓடுகளோ பொருத்துவதற்குப் பதிலாக சிமெண்ட் தளம் என்றால் செலவு குறையும். பராமரிப்புச் செலவும்தான். கான்க்ரீட் தளத்துக்கு மொசைக் கற்களை எல்லைப் பகுதிகளில் பதித்தால் வீடு பளிச்சென்றும் காட்சி தரும்.
பைப்கள், ஒயர்கள் போன்றவை மறைக்கப்பட்டு இருக்க வேண்டுமென்றால் அதற்குச் செலவு அதிகம் பிடிக்கும். பின்னாளில் கசிவு போன்றவை ஏற்படும்போது சரி செய்யவும் அதிகத் தொகை தேவைப்படும்.
எந்தப் பெயிண்ட் பூசுவது என்பதைத் தீர்மானிக்கும்போது பலரையும் ஆலோசனைகள் கேட்காதீர்கள். அப்புறம் கழுதையை நடத்திச் சென்ற தாத்தா-பேரன் கதை ஆகிவிடும். கடைசியில் மிக விலையுயர்ந்த பெயிண்டைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படலாம். நியாயமான, குறைந்த விலையில் என்னென்ன நிறப் பெயிண்ட்கள் உள்ளன என்பதைப் பாத்து அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.
ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு கட்டுகிறீர்கள் என்றால் மொத்தமாக ஆயிரம் சதுர அடியைத் தரைப்பரப்பாக வைத்துக் கொள்ளாமல் கீழே ஐநூறு அடி, முதல் மாடியில் ஐநூறு அடி என்று கட்டிக் கொண்டால் செலவு குறையும். பொதுவாக ஒரு கட்டிடத்தை மேலே மேலே கட்டும்போது செலவு விகிதம் என்பது குறையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT