Last Updated : 13 Jul, 2019 11:07 AM

 

Published : 13 Jul 2019 11:07 AM
Last Updated : 13 Jul 2019 11:07 AM

வண்ணங்கள் தரும் உணர்வுகள்

பொதுவாக, நம் வீட்டுக் கதவுகளுக்குச் சிவப்பு வண்ணம் பூசுவதில்லை. ஆனால், கட்டிடச் சாஸ்திரங்களில் ஒன்றான ஃபெங் சுயி (Feng shui) இதை வரவேற்கிறது. இது ஒரு சீனப் பாரம்பரிய வழக்கம். சிவப்பு வண்ணத்தை வீட்டுக் கதவுக்குப் பூசினால் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு அது வரவேற்பு உணர்வை அளிக்கும் என ஃபெங் சுயி சொல்கிறது.

பாரம்பரிய அமெரிக்க வழக்கப்படி சிவப்பு வண்ணம் பூசப்பட்ட கதவை களைப்புடன் அந்தப் பகுதியை தாண்டிச்செல்லும் பயணிகள் தட்டலாம். அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்வதற்காக அந்த வீட்டின் ஒரு பகுதியை அவர்களுக்கு தற்காலிகமாக அளிப்பதில் உரிமையாளருக்கு எந்தவித மனத்தடையும் இல்லை எனப் பொருள். ஆனால், ஸ்காட்லாந்தில் சிவப்பு வண்ணக் கதவுக்கு அர்த்தம் வேறு மாதிரி.

அந்த வீட்டுக்கான வங்கிக் கடன் முழுவதும் அடைக்கப்பட்டு விட்டால் தங்கள் வீட்டின் கதவுக்குச் சிவப்பு வண்ணம் அடித்து மகி​ழ்வது அவர்களின் வழக்கம். பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தன் வீட்டுக் கதவுக்குச் சிவப்பு வண்ணம் அடித்திருந்தார். இதற்காக அவர் கூறிய காரணம் வித்யாசமானது, “அப்போதுதான் அது என் வீடு என்பது மறந்து விடாமல் இருக்கும்’’.

வண்ணம் எதுவாக இருந்தாலும் அது பளிச்சென்று இருக்கும் ஒன்றாகத்தான் கதவுக்குத் தேர்ந்​தெடுக்க வேண்டும். உங்கள் வீட்டைப் பற்றிய முதல் கருத்தைப் பதிய வைப்பதில் கதவுக்கும் அதன் வண்ணத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. வெளிர் ஊதா (purple) வண்ணம் தீட்டப்பட்டால் அது நவீனத்துவத்தைக் குறிக்கிறது. கதவுக்கு ஆரஞ்சு வண்ணம் என்றால் அது நட்பு, வேடிக்கை, உற்சாகம் ஆகிய உணர்வுகளை அளிக்கிறது.

கதவுக்கான வண்ணம் என்பது உங்கள் வீட்டுக்கான வெளித்தோற்றத்தை அளிப்பது மட்டுமல்ல உங்கள் ஆளுமைத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. நீங்கள் ஒரு வண்ணத்தைக் கற்பனையில் கொண்டு அதைத் தேர்ந்தெடுத்து விடாதீர்கள். வரவேற்பு அறையின் சுவர்கள் வெள்ளையில் இருந்து சிறிது மாறுபட்ட வண்ணத்திலே இருக்கட்டும். இதன் காரணமாக வரவேற்பு அறை கொஞ்சம் அகலமாகத் தோற்றம் அளிக்கும்.

பூஜை அறைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் மிதமானதாக இருப்பது நல்லது. அழுத்தமான பளீரென்ற வண்ணங்களைத் தவிர்த்து விடுங்கள். பூஜை செய்யும்போது மனம் அமைதியாக இருப்பதே நல்லது. அதற்கு மென் வண்ணச் சுவர்கள்தாம் ஏற்றவை சிலருக்குத் தங்கள் வீடு தனித்துத் தெரிய வேண்டும் என்று ஆசை இருக்கும்.

வேறு சிலர் அதையே சமூகத்தோ​டு ஒன்றிப் போகாமல் தான்தோன்றித்தனமாக இருப்பதாகக் கருதக் கூடும். வீட்டின் பிற பகுதிகளுக்கு எந்த வண்ணத்தில் பெயிண்ட்டை செய்திருக்கிறீர்களோ அதற்குப் பொறுத்தமாக இருக்கும்படி கதவின் வண்ணம் இருப்பது நல்லது. வெளியில் நிறைய பசுமை காணப்பட்டால் அதையும் மனத்தில் கொண்டு கதவுக்கான வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x