Last Updated : 22 Nov, 2014 03:19 PM

 

Published : 22 Nov 2014 03:19 PM
Last Updated : 22 Nov 2014 03:19 PM

வீட்டுக் கடன் தொகை அதிகம் பெற வேண்டுமா?

நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடனை நம்பியே வீடு வாங்கும் திட்டத்தில் இருப்போம். என்னதான் சேமிப்பு இருந்தாலும், வீட்டுக் கடன்தான் நம் கனவு கவிழ்ந்துவிடாமல் கரை சேர்க்க உதவும். மனை வாங்கி வீடு கட்டுவதாக இருந்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதாக இருந்தாலும் நடுத்தர மக்கள் பெரும்பாலானோரின் நிலை இதுதான். இன்றைய பொருளாதார சூழலில் நம் சேமிப்பை மட்டும் நம்பி நம் கனவை நனவாக்க நினைப்பது கஷ்டத்தில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். நம் சேமிப்பு ஆரம்பத் தொகைக்கு மட்டுமே பயன்படும். உதாரணமாகச் சிலர் மனையை மட்டும் தங்கள் சேமிப்பைக் கொண்டு வாங்குவார்கள். வீடு கட்ட வங்கிக் கடனைச் சார்ந்திருப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க இருப்பவர்கள் ஆரம்பத் தொகைக்குச் சேமிப்பைப் பயன்படுத்துவார்கள்.

வீட்டுக் கடனைப் பொறுத்தவரை நாம் கட்டப் போகும், வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் சுமார் 80 சதவிகிதத் தொகையைக் கடனாகத் தருவார்கள். மீதித் தொகைக்குத்தான் நம் சேமிப்பு பயன்படும். இந்தத் தொகை உறுதியாக உங்கள் சேமிப்பாக இருந்தால் நலம். இதற்கும் கடன் வாங்க நேரிட்டால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிவிடும். அவர்கள் தரும் தொகை எவ்வளவு இருக்கும் என்பது நமது திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டது. குடும்பச் செலவு போக நம் மாத வருமானம் எவ்வளவு எனக் கணக்கிட்டு நமது திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதியைக் கணக்கிடுகிறார்கள். இந்த இடத்தில்தான் நாம் திட்டமிட்ட தொகை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பார்ப்போம்.

திருப்பிச் செலுத்தும் திறன்

வீட்டுக் கடன் வாங்கத் திட்டமிடும் முன் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அதற்கு முன்பு வங்கிக் கடன் வாங்குவதற்கு உண்டான வழிமுறைகளைத் தெளிவுறக் கேட்டு அறிய வேண்டும். அதன் பிறகு வேறு எதாவது கடன் வாங்கி இருந்தால் அதை அடைத்துவிட வேண்டும். கார் லோன், தனிநபர் கடன் கட்டாமல் இருந்தால், அல்லது அந்த இ.எம்.ஐ போய்க்கொண்டிருந்தால் அதை முழுமையாக அடைத்துவிட வேண்டும். தோராயமாக நம் சம்பளத்தில் ஒரு 50 சதவிகிதத் தொகையை உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனாக வங்கிகள் கணக்கிடும். இதில் உங்களுக்கு ஏற்கனவே கடன்கள் இருக்கும்பட்சத்தில் அது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகையில் இருந்து கழிக்கப்படும். அதனால் இம்மாதிரியான கடன்களை நாம் கட்டிவிட வேண்டும்.

இ.எம்.ஐ. காலத்தை நீட்டிக்கலாம்

இன்னொரு வழிமுறையில் உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த வீட்டுக் கடன் கிடைக்கவில்லையென்றால், திரும்பச் செலுத்தும் வீட்டுக் கடனின் கால அளவை அதிகரிக்கலாம். அதாவது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை ரூ.10 ஆயிரம் எனில் உங்களுக்குக் குறைந்த அளவே கடன் கிடைக்கும். அப்போது இதே ரூ.10 ஆயிரம் தொகையை நீங்கள் 20 ஆண்டுகளில் செலுத்தினால் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப கடன் தொகையும் கூடும். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கும்.

இப்படி வீட்டுக் கடனைக் கட்டும் ஆண்டுகளை அதிகரிக்கும்போது, வட்டிக்குச் செல்லும் தொகை அதிகரிக்கும். இந்த வட்டிச் செலவைக் குறைக்க, வரும் ஆண்டுகளில் இடையிடையே மாத தவணை போகக் கூடுதல் தொகையை (போனஸ், இதர வரவுகளைக் கொண்டு) கட்டி, கடன் பாக்கியைக் குறைத்துக் கொள்ளலாம்.

மேலும் கடன் வாங்கும்போது திருப்பிச் செலுத்தும் தொகை நம் வருமானம் மட்டுமல்லாது மனைவி/கணவன் வருமானத்தையும் காட்டலாம். அம்மா, அப்பா ஆகியோரின் வருமானத்தையும் காட்டலாம். அப்படிக் காண்பிக்கும்போது நம் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x