Published : 18 Aug 2017 04:32 PM
Last Updated : 18 Aug 2017 04:32 PM

பவர் பத்திரத்தில் என்னென்ன வகை?

கடந்த இருபதாண்டுகளில்தான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் பவர் பத்திரத்தின் பயன்பாடும் அதிகரித்தது எனலாம். சென்னை போன்ற நகரங்களில் நிலத்தை உரிமையாளர்களிடமிருந்து வாங்கி, கட்டுநர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவது வழக்கம். இப்படி வாங்கும்போது அவர்கள் உரிமையாளர்களிடமிருந்து பவர் பத்திரம் எழுதிவாங்குவது வழக்கம். இப்படித்தான் இந்த பவர் பத்திரம் எழுதுவது அதிகரித்தது.

அதுபோல பவர் பத்திரம் என்ற பெயரில் மோசடிகளும் அதிகரித்தன. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் பல கிடுக்குப் பிடிகளைச் சட்டப் பிரிவாகச் சேர்த்தன. அதாவது மேற்படி பவர் பத்திரம் அளிப்பவர் உயிருடன் இருந்தால்தான் பத்திரம் செல்லுபடியாகும் எனச் சொன்னது. மேலும், முக்கியமான வழக்கொன்றில் உச்சநீதி மன்றம் பொது பவர் பத்திரம் (General Power of Attorney- GPA) மூலம் நிலப்பதிவை அனுமதிக்கக் கூடாது எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தகுந்தது.

நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தை நிர்வகிப்பதற்கான, விற்பதற்கான அதிகாரத்தை ஒருவருக்கு வழங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் பத்திரம் பதிவுசெய்ய வேண்டும். இம்மாதிரியான பவர் பத்திரம் எழுதிக்கொடுப்பதில் பல வகை இருக்கின்றன. நிர்வகிக்க மட்டுமல்லாது அந்த நிலத்தின் விற்பனை உரிமையையும் பவர் பத்திரம் மூலம் ஒருவருக்கு எழுதிக்கொடுக்க முடியும்.

பொது பவர் பத்திரம்

பொது பவர் பத்திரம் மூலம் அதிகாரம் பெறும் நபருக்கு வீடு போன்ற சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைகளாகப் பிரிக்க அதிகாரம் கிடைக்கும். மேலும், அரசு அலுவலகங்களில் சொத்து தொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இடவும் முடியும்.

தனி பவர் பத்திரம்

தனி பவர் பத்திரம் அளிக்கப்படும் நபருக்குக் குறிப்பிட்ட அதிகாரம் மட்டும் அளிக்கப்படும். அதாவது சொத்தை விற்பதற்கு அல்லது மனைகளாகப் பிரிப்பதற்கு எனச் சில அதிகாரம் மட்டும் கிட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x