Published : 19 Aug 2017 11:09 AM
Last Updated : 19 Aug 2017 11:09 AM

மரக் கட்டிடங்கள்

மீப காலமாகக் கட்டிடக் கலையில் பசுமைத் தொழில்நுட்பம் பிரபலமாகிவருகிறது. உலகின் முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் சில தங்கள் கட்டும் கட்டிடங்களையே பசுமையாகக் கட்டுகிறார்கள். சுற்றுச்சூழலுகுக் கேடு விளைவிக்காத வகையில் பசுமைக் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கட்டிடங்களை எழுப்புகிறார்கள். உதாரணமாகச் செங்கலுக்கு மாற்றாக மாற்றுக் கட்டுமானப் பொருளைப் பயன்படுத்துகிறார்கள். சூரிய மின் தகடுகளைப் பொருத்துவதன் மூலம் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்துகிறார்கள்.

ஆனால் மரங்கள் வளர்க்க, இந்தக் கட்டமைப்பில் இடம் விடப்படுவதில்லை. நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனைக் கொடுக்கும் மரங்களை வளர்ப்பது அவசியமானது. அதனால் இப்போது கட்டப்பட்டுவரும் கட்டிடங்களில் மரங்கள், செடிகள் வளர்க்கத் தனி இடம் விடப்படுகிறது.

அந்த வகையில் சீனாவின் ஷாங்காய் புறநகரில் கட்டப்பட்டுவரும் வணிக வளாகம் 1,000 மரங்களுடன் மேலெழுந்துவருகிறது. 3,00,000 சதுர அடி பரப்பில் இந்தத் திட்டம் ஷாங்காயின் புறநகரில் உருவாகிவருகிறது. இந்தத் திட்டத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த கெதர்விக் ஸ்டுடியோ என்னும் கட்டுமான நிறுவனம் உருவாக்கிவருகிறது. இந்தத் திட்டத்துக்கு ‘ட்ரீ கவர்டு மவுண்டன்’ (tree-covered mountains) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுசூ கிரீக் ஆற்றின் கரையில் இந்த வணிக வளாகம் பார்ப்பதற்கு உண்மையிலேயே ஒரு மலையைப் போல் இருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் மரங்களை நடுவதற்காகப் பிரத்யேகமான இடைவெளி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1,000 மரங்கள் நடப்படவுள்ளன.

இதேபோல் கனடாவில் அதன் மிகப் பெரிய நகரான டொரோண்டாவில் ‘ட்ரீ டவர் டொரோண்டா’ (Tree Tower Toronto) என்னும் கட்டிடமும் இதேபோல் மரங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. 62 மீட்டர் உயரம் கொண்ட இது ஒரு வானுயரக் கட்டிடமாகும். இதில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமையவுள்ளன. மரப் பலகை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இது 18 மாடிகளைக் கொண்டது. சி.எல்.டி. டிம்பர் என்னும் மரப் பலகைத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பெண்டா இந்தக் கட்டிடத்தை வடிவமைத்துவருகிறது.

தொகுப்பு: விபின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x