Published : 01 Jul 2017 11:23 AM
Last Updated : 01 Jul 2017 11:23 AM

வீட்டை அழகாக்கும் சுடுமண் சிற்பங்கள்

மரபுக்குத் திரும்புதல் என்பதுதான் இப்போதைய பாணி. உதாரணமாக இருதலைமுறைக்கு முன்பு கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானிய உணவுகளைத்தான் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இடையில் அரிசியே பிரதான உணவானது. இப்போது மீண்டும் பழைய உணவுப் பழக்கம் பிரபலமாகிவருகிறது. அதுபோலக் கட்டுமானக் கலையிலும் ரெட் ஆக்ஸைடு, தரை ஓடு எனப் பழமையான முறைகள் இன்றைக்குப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அந்த வகையில் ஒன்றுதான் டெரகோட்டா (terracotta). பொதுவாக டெரகோட்டா என்பதைச் சுடுமண் சிற்பங்கள் எனலாம்.

வீடுகளில் புழக்கத்திலுள்ள பூந்தொட்டிகள் போன்ற சுடு மண்ணால் ஆன சில பொருட்களும் இந்தச் சொல்லால் குறிக்கப்படுகின்றன. தேவை காரணமாக இன்றைக்கு டெரகோட்டாவில் பலவிதமான பொருட்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக வீட்டுக்கான அலங்காரத் தோரணங்கள், சிறிய மேஜைகள், விளக்குகளுக்கான நிழற்கூடுகள் போன்றவை செய்யப்படுகின்றன. இன்றைக்கு வீடு கட்டும் செலவில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி உள் அலங்காரத்துக்கானதாக உள்ளது. விலை உயர்ந்த பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துவதைவிட இம்மாதிரியான சுடுமண் பொருட்களைக் கொண்டு அழகுபடுத்தினால் செலவும் குறையும்; மரபுக்குத் திரும்பிய திருப்தியும் கிடைக்கும்.

ஓசை எழுப்பும் சிம் (chime) அலங்கார மாலைகள் மூங்கில், இரும்பு, பிளாஸ்டிக் போன்ற பொருட்களில்தான் முன்பு சந்தையில் கிடைத்தது. இப்போது டெரகோட்டாவிலும் சிம் வந்துவிட்டது. அதிலும் நீலம், சிவப்பு, பச்சை எனப் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. நம்முடைய பாரம்பரியமான பூஜை மணியின் வடிவத்தில் இவை உள்ளன என்பது சிறப்பு. இதன் தொடக்க விலை ரூ. 80.

பால்கனியை அழகாக்கவென்று சில தனிப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. பூந்தொட்டிகள், தண்ணீர் நிரப்பும் சிறு மட்பாண்டங்கள் போன்ற பொருட்கள் கிடைக்கின்றன. பூந்தொட்டிகளும் பலவிதமான வடிவங்களில் கிடைக்கின்றன. உதாரணமாக அன்னப் பறவையின் உடல் பகுதியில், காளையின் உடல் பகுதியில் செடி நடுவதுபோன்ற வடிவைப்பில் கிடைக்கின்றன. பூந்தொட்டியின் தொடக்க விலை ரூ. 150.

வீட்டு வரவேற்பறையை அழகுபடுத்த ஏராளமான சுடுமண் சிற்பங்கள் இருக்கின்றன. யானைச் சிற்பங்கள், குதிரைச் சிற்பங்கள் அவற்றை வைப்பதற்கான சிறிய யானை முகம் கொண்ட ஸ்டூல் எனப் பல வகையான பொருட்கள் இருக்கின்றன. இது மட்டுமல்லாது புத்தர், காந்தி போன்ற மகான்களின் சிலைகளும் கிடைக்கின்றன. சிலைகளின் தொடக்க விலை ரூ.1000.

சுவரில் மாட்டுவதற்கென்று ஓவியம் போன்ற புடைப்பு மண் சிற்பங்களும் கிடைக்கின்றன. சூரியக் கடவுளின் சுவர் சிற்பங்களும் பழங்குடி மனிதர்களின் முக அமைப்பைக் கொண்ட சுவர் சிற்பங்களும் இவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை. இதன் தொடக்க விலை ரூ.100.

இவை அல்லாது துளசி மாடம் கிடைக்கிறது. மிகச் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு என வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு வண்ணங்களில் துளசி மாடம் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூ.150

- க. ஸ்வேதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x