Published : 01 Jul 2017 10:59 AM
Last Updated : 01 Jul 2017 10:59 AM
வீடு கட்டும்போது அஸ்திவாரத்தில் தொடங்கி வீட்டுக்கு வண்ணம் பூசுவதுவரை பலவிதமான யோசனைகளை எல்லோரும் சொல்லிச் செல்வார்கள். ஆனால், அந்த யோசனைகள் தோல்வி அடைந்தால் நாம்தான் அதைச் சரிசெய்ய வேண்டியிருக்கும். யோசனைகள் சொன்னவர்கள் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். வீட்டில் வாழப்போவது நாம்தான். அதனால் வீடுகட்டுவதில் கல் இடுவதில் தொடங்கி வண்ணம் அடிப்பது வரை உங்களுடைய தேர்வு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குச் சில யோசனைகள்:
கட்டிடப் பணிகளுக்குத் தண்ணீரின் தரம் முக்கியமானது. உப்புச் சுவை உள்ள தண்ணீர் என்றால் அது கட்டிடத்தின் உறுதிக்குப் பங்கம் விளைவிக்கும். அதனால் கட்டிடப் பணிகளுக்கு நல்ல தண்ணீர் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். கட்டிடப் பணிகளுக்காக முதலில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொள்ள வேண்டும். வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்குப் பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை, நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
கட்டிடத்தின் உறுதிக்கான மற்றொரு விஷயங்களில் ஒன்று, சிமெண்ட். சிமெண்டின் தரத்தை அதன் நிறத்தை வைத்தே ஓரளவு தீர்மானித்துவிடலாம். லேசான பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்ல சிமெண்ட் என ஊகித்துக்கொள்ளலாம். அதுபோல சிமெண்ட் மூட்டைக்குள் கைவிடும்போது குளுமையாக இருந்தால் அது சிறந்த தரம் என அறிந்துகொள்ளலாம். சிமெண்டைத் தண்ணீருக்குள் இடும்போது அது மிதந்தால் தரம் சரியில்லை என அறிந்துகொள்ள முடியும். சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ. அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஓரளவு குறைவாக இருந்தால் சரி. 1 கிலோவுக்கும் அதிகமாகக் குறைந்திருந்தால் அதை வாங்கிய இடத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இன்றைக்குத் தங்கத்தைப் போல விலை மதிப்பான பொருளாக மணல் மாறிவிட்டது. விலை மதிப்பு அதிகமாக, அதிகமாக அதில் கலப்படம் வந்துவிடும் அல்லவா? ஆற்று மணலில் தூசியைக் கலக்கிறார்கள். சிலர் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலக்கிறார்கள்.
அதனால் மண்ணை முறையாகப் பார்த்து வாங்க வேண்டும். கடல் மணலைக் கண்டுபிடிக்க மணலின் உப்புச் சுவையைப் பரிசோதித்தாலே போதும். கடல் மணலில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். மணலில் அதிகமாகக் குருணை இருந்தால் பயன்படுத்தத் தகுதியில்லாததாக இருக்கும். குருணை அதிகமாக உள்ள மணல் சிமெண்டுடன் கலக்காது. இப்போதுள்ள நவீனத் தொழில்நுட்பத்தைத் துணிச்சலாகப் பயன்படுத்த வேண்டும். அதனால் நேரமும் கூலியும் மிச்சமாகும். உதாரணமாக ரெடிமேட் கட்டுமானக் கம்பிகள் சந்தையில் கிடைக்கின்றன. கட்டிடத்தின் வரைபடத்துக்குத் தகுந்தாற்போல் அவர்களே கம்பியை வளைத்துக் கொண்டுவந்து இடத்திலேயே இறக்கிவிடுவார்கள்.
கட்டுமான இடத்தில் தனியான இடத்தை நிர்மானித்துக் கம்பிகளை வளைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமல்ல. அதுபோல சிமெண்ட் கலவையிலும் தேவையான அளவு ரெடி மிக்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டுமானத்துக்குப் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் உறுதியும் உருவமும் தருவது செங்கல். இதன் தரத்தை அறிய ஓர் எளிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது நாலைந்து செங்கற்களை எடுத்து நீரினுள் இட வேண்டும்.
24 மணி நேரத்துக்குப் பிறகு அதை எடுத்து விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் அந்தச் செங்கற்கள் தரம் குறைவானவை என அறிந்துகொள்ளலாம். இப்போது பலவகையான மாற்றுச் செங்கற்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் விலையும் மிச்சமாகும்; தரத்திலும் சிறந்தவையாக இருக்கும். அதுபோல தேவையைப் பொறுத்து அதற்குத் தகுந்த கற்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுற்றுச் சுவர்களுக்கு ஹாலோ செங்கல் உகந்தவையாக இருக்கும். இப்போது வீடு கட்டுவதற்கும் இவ்வகையான மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவது நல்லது எனப் பசுமைக் கட்டிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பாரம்பரிய முறையிலான செங்கற்கள் தயாரிக்க ஆகும் ஆற்றலால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது மாற்றுச் செங்கற்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. அதனால் கூடியவரை நாம் மாற்றுச் செங்கற்களைக் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படுத்துவோம். கட்டுமானப் பொருள்களைக் கையாளும்போது அவற்றில் சிறிதளவு வீணாகக்கூடும். அவை சிறிய அளவில் இருந்தால் சரி. அப்படியில்லாமல் அஜாக்கிரதையாகக் கட்டுமானப் பொருள்களைக் கையாண்டு அதன் மூலம் ஆகும் கட்டுமானச் சேதாரத்துக்கு நாம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை. அதனால் பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து சேதாரத்தைக் கண்காணிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் சேதாரம் என ஒப்பந்தக்காரர்கள் கூறினால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT