Last Updated : 03 Jun, 2017 09:56 AM

 

Published : 03 Jun 2017 09:56 AM
Last Updated : 03 Jun 2017 09:56 AM

சட்டக் சிக்கல்: பாக விடுதலைப் பத்திரம்: செல்லாததாக ஆக்க முடியுமா?

நாங்கள் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை வழி பாட்டியின் பெயரில் உள்ள வீட்டில் வசிக்கிறோம். பாட்டிக்கு இரு மகன்கள்; ஒரு மகள். பாட்டி உயில் ஏதும் எழுதாதமல் காலமாகிவிட்டார். இதுவரை சொத்தைப் பிரிக்கவுமில்லை. பெயர்மாற்றம் செய்யவும் இல்லை. இப்போது பெயர் மாற்ற முயலும்போது அந்தச் சொத்தை இரு மகன்கள் மட்டும் சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். இது மூத்த மகனின் மகனாகிய (பேரன்) எனக்குப் பிடிக்கவில்லை. பேரன்மார் அனுமதிக் கையெழுத்து இல்லாமல் மகன்கள் மட்டும் சொத்தை எடுத்துக்கொள்ளச் சட்டம் அனுமதிக்கிறதா? பாட்டியின் எழுதப்படாத சொத்தில் பேரன், பேத்திகளின் உரிமை என்ன?

யாசர் அரபாத், பத்தமடை

உங்கள் பாட்டியின் மூன்று மக்களும் உயிருடன் இருக்கும்போது, பேரன் பேத்திகளுக்குப் பாட்டியின் சொத்தில் எந்த உரிமையும் இஸ்லாமியச் சட்டப்படி கிடையாது. ஆகையால் பேரன் பேத்திகளின் அனுமதிக் கையெழுத்துகள் அவசியமில்லை. ஆனால் இஸ்லாமியச் சட்டப்படி உங்கள் பாட்டியின் சொத்தில் அவரது ஒரே மகளுக்கு 3ல் 1 பங்கு உரிமையுள்ளது. அது போக மீதம் இருக்கும் 3ல் 2 பங்கில் அவரது இரு மகன்களுக்கும் சம பங்கு உரிமை உள்ளது. அதனால் உங்கள் பாட்டியின் இரு மகன்களும், தங்களது ஒரே சகோதரிக்கு சட்டப்படி உரிய 3ல் 1 பங்கு கொடுக்காமல் தாங்களே மொத்த சொத்தையும் எடுத்துக்கொள்ள இஸ்லாமியச் சட்டம் அனுமதிப்பதில்லை.



எனது சித்தப்பா பெயரில் இருந்த பூர்வீக சொத்தை எனது தந்தைக்குத் தான செட்டில்மண்ட் செய்து கொடுத்தார். பின்பு அதை எனது சித்தப்பாவே ரத்துசெய்துள்ளார். அந்தச் சொத்தை மீட்க என்ன வழி?

மகேந்திரன் ஆர்

உங்கள் கேள்வியில் தெளிவு இல்லை. உங்கள் சித்தப்பா பெயரில் இருந்தால் அந்தச் சொத்தை பூர்வீக சொத்து என்று சொல்ல முடியாது. பூர்வீக சொத்தாக இருந்தால் அது உங்கள் சித்தப்பா பெயரில் இருக்க முடியாது. ஒரு வேளை உங்கள் தந்தையும் சித்தப்பாவும் உறுப்பினர்களாக இருந்த கூட்டுக் குடும்ப சொத்து உங்கள் சித்தப்பாவின் பெயரில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இருந்திருந்தால் உங்கள் சித்தப்பா அந்தச் சொத்தில் தனக்குரிய பங்கினை மட்டுமே தான செட்டில்மென்ட் எழுதிக்கொடுக்க அவருக்கு உரிமையுண்டு. ஒரு வேளை அவர் தனக்குரிய பங்கினை பொறுத்து மட்டும் தான செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்திருந்து, அந்தத் தான செட்டில்மென்ட் பத்திரம் செயல்படுத்தப்பட்டும் இருந்தால் உங்கள் சித்தப்பா செய்துள்ள ரத்து பத்திரம் சட்டப்படி செல்லாது. சொத்தின் சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதையும் நீங்கள் குறிப்பிடவில்லை. சொத்தின் சுவாதீனம் உங்கள் சித்தப்பாவிடம் இருந்தால் நீங்கள் தகுந்த நீதிமன்றத்தை அணுகித்தான் சொத்தின் சுவாதீனத்தை மீட்க முடியும்.



எனது அப்பா 1991-ல் 7 சென்ட் காலி மனை வாங்கி உள்ளார். கிரயப் பத்திரம் இல்லை. ஆனால் 1991-ல் பட்டா என் அப்பா பெயரில் மாற்றப்பட்டது. இப்போது வரை அப்பா பெயரில் உள்ளது. அந்தப் பட்டா கைவசம் உள்ளது. கிராம அடங்கலிலும் அப்பா பெயரே உள்ளது. இப்போது அம்மா பெயரில் அதைப் பத்திரப் பதிவுசெய்ய முடியுமா?

எஸ்.ராமேஷ்

உங்கள் அப்பா 1991-ல் 7 சென்ட் காலி மனை வாங்கியதாக சொல்கிறீர்கள். யாரிடம் இருந்து வாங்கினார் என்றும் ஏன் கிரையப் பத்திரம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றும் சொல்லவிலை. எந்த அடிப்படையில் பட்டா உங்கள் அப்பா பெயருக்கு மாறியது என்றும் நீங்கள் கூறவில்லை. உங்கள் அப்பாவிற்கு முன்பு அந்த காலி மனையின் மீது உரிமை பெற்றிருந்தவர் பெயரில் உரிமை பத்திரம் ஏதும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டு இருந்தால் தற்போது உங்கள் அப்பா தனது மனைவி (அதாவது உங்கள் அம்மா) பெயருக்குப் பத்திரப் பதிவு ஏதும் செய்ய முடியாது.



எங்கள் பூர்வீக நிலத்துக்கு அருகிலிருக்கும் நிலத்தின் உரிமையாளார் அவருடைய நிலத்தை வேறு ஒருவருக்கு குத்தகைக்கு விடும்போது எங்களுடைய நிலத்தையும் சேர்த்துத் தவறுதலாகப் பதிவு செய்துவிட்டார். அந்த நில உரிமையாளர் இறந்துவிட்டார். எங்கள் நிலத்துக்குப் பத்திரங்கள் ஏதுவும் இல்லை. சட்டப்படி அந்த நிலத்தை நாங்கள் திரும்பப்பெறுவது எப்படி?

சரவணன்

தனக்கு உரிமையில்லாத நிலத்தைப் பொறுத்து (அதாவது உங்கள் நிலம்) அருகிலிருக்கும் நிலத்தின் உரிமையாளர் எழுதிப் பதிவுசெய்துள்ள குத்தகைபத்திரம் உங்களையோ உங்களது நிலத்தையோ எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. ஆகையால் உங்கள் நிலத்தை நீங்கள் திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடம் இல்லை. ஒரு வேளை உங்கள் நிலத்தின் சுவாதீனம் அருகில் இருக்கும் நிலத்தினை குத்தகைக்குப் பெற்றுக்கொண்டவரிடம் இருந்தால் நீங்கள் தகுந்த நீதிமன்றத்தினை அணுகி உங்கள் நிலத்தின் சுவாதீனத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.



என்னுடைய தாத்தா (தாயின் அப்பா) எந்த உயிலும் எழுதவில்லை. ஆனால் 2013-ம் ஆண்டு என்னுடைய தாயின் சகோதரர் என் தாய் உள்ளிட்ட அவரது மூன்று சகோதரிகளிடமும் குடும்ப நிலத்தில் வீடு கட்ட அனுமதி என்ற பெயரில் ‘பாக விடுதலைப் பத்திரத்தில்’ கையெழுத்துப் பெற்றுள்ளார். நான் அப்போது வெளிநாட்டில் இருந்ததால் எனக்குத் தெரியாது. இப்போதுதான் பதிவுசெய்யப்பட்ட அந்தப் பத்திரத்தில் 2 ஏக்கர் நிலம், 8 ஆயிரம் செண்ட் காலி மனை, 4 ஆயிரம் சதுர அடி வீடு எல்லாம் சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. நீதி மன்றம் சென்றால் இதற்குத் தீர்வு கிடைக்குமா?

நடராஜன், அபுதாபி

உங்கள் தாயாரின் சகோதரர் உங்கள் தாயாரையும் அவரது சகோதரிகளையும் ஏமாற்றிப் பாக விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றிருந்தால் உங்கள் தாயாரும் அவரது சகோதரிகளும் தகுந்த நீதிமன்றத்தினை அணுகி அந்தப் பாக விடுதலைப் பத்திரத்தினை செல்லாது என அறிவிக்கக் கோரலாம். நீங்கள் கூறுவதுபோல் உங்கள் தாயார் மற்றும் அவரது சகோதரிகளிடம் ஏமாற்றிக் கையெழுத்துப் பெறப்பட்டிருந்தால் அதற்கு நீதிமன்றத்தில் கண்டிப்பாகத் தீர்வு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x