Published : 20 May 2017 11:11 AM
Last Updated : 20 May 2017 11:11 AM
அடுக்குமாடி வீடு வாங்கத் தீர்மானித்துவிட்டீர்களா? இப்போது சில அளவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் வீடு வாங்க அணுகும்போதும் எல்லோரும் கார்பெட் ஏரியா, சூப்பர் பில்டப் ஏரியா, பிளிந்த் ஏரியா போன்ற புதுப் புது சொற்களை உச்சரிப்பார்கள். இந்த வார்த்தைகள் வீட்டின் அளவுகளைச் சொல்பவை.
நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவைத்தான் கார்பெட் ஏரியா என்று சொல்வார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் ஒரு கார்பெட்டை விரித்தால் எவ்வளவு இடத்தை அது அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா. பொது இடங்கள், பார்க்கிங் என அடுக்குமாடிக் குடியிருப்பில் பொதுவான வசதிகள் அதிகமாகும்போது ’கார்பெட் ஏரியா’ குறைந்து கொண்டே வரும். எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து பார்த்து உறுதி செய்ய வேண்டும். கட்டி முடித்த அடுக்குமாடி வீடு என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டு அளக்கலாம்.
கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்ததை பிளின்த் ஏரியா எனப்படும். பிளின்த் ஏரியா அளவில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதே சூப்பர் பில்ட்அப் ஏரியா. பில்டர்கள் சூப்பர் பில்டப் பரப்புக்குதான் வீட்டின் விலையைச் சொல்வார்கள். அதாவது பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை எல்லாம் இந்தக் கணக்கில் சேர்ந்துவிடும். இந்த அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்டப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அளவுகள் சரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம். அதற்கு மேல் சூப்பர் பில்டப் ஏரியா அதிகமாக இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் கேளுங்கள்.
அடுக்குமாடிக் குடியிருப்பு எவ்வளவு சதுர அடியில் கட்டப்படுகிறதோ, அந்த விகிதாசாரத்துக்கு ஏற்ப வீடு வாங்கும் ஒவ்வொருவருக்கும் மனையில் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதைக் குறிப்பதே யூ.டி.எஸ்.. அதாவது ‘பிரிக்கப்படாத மனைப் பரப்பு’ என்று அர்த்தம். அடுக்குமாடி வீட்டில் பிரித்து தரப்படும் மனையில் குறிப்பிட்ட ஒரு இடம் தங்களுக்குரியது என அடுக்குமாடி வீட்டு குடியிருப்புவாசிகள் சொந்தம் கொண்டாட முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT