Published : 01 Nov 2014 01:05 PM
Last Updated : 01 Nov 2014 01:05 PM
நமக்குத் தேவையான வீடுகள், கல்வி நிறுவனங்கள், உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை உருவாக்கித் தருவதில் ரியல் எஸ்டேட் துறை திறம்படச் செயல்பட்டுவருகிறது.
இந்தியாவின் பொருளாதாரத்தில் கட்டுமானச் சந்தைக்குப் பிரதான இடம் உண்டு. அதுவும் விரைவாக வளர்ந்துவரும் துறையாகவும் ரியல் எஸ்டேட் பார்க்கப்படுகிறது.
அந்நிய முதலீட்டின் அடிப்படையில் இந்திய ரியல் எஸ்டேட் உலகில் நான்காம் இடத்தில் இருக்கிறது. வரும் 2020-ம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாம் இடத்திற்கு வந்துவிடும் எனச் சொல்லப்படுகிறது.
2010-ம் ஆண்டில் 360 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி அந்நிய முதலீடாகக் கிடைத்துள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்து 2020-ம் ஆண்டில் 649.5 பில்லியன் டாலராக இருக்கும் என நம்பப்படுகிறது. பத்து ஆண்டுகளில் நேரடி அந்நிய முதலீடு 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு இருக்கும் என்றும் துறைசார் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
இந்திய உள்நாட்டு உற்பத்திக்கு ரியல் எஸ்டேட் துறை 6.3 சதவீதம் அளவுக்கு பங்களிப்பைத் தந்துள்ளது. ரியல் எஸ்டேட் சந்தையின் மதிப்பு 2008-2020 நிதி ஆண்டுகளில் ஆண்டுக்கு 11.2 சதவீதம் அதிகரிக்கும் என்றும், 2020-ம்
ஆண்டில் சந்தையின் மதிப்பு 180 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2014-15 ஆண்டுகளுக்கான மத்திய நிதிநிலை அறிக் கையில் கிராமப்புற வீட்டு வசதிக்கான நிதியாக 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் வழங்குவதற்காக தேசிய வங்கிகளுக்கு 0.7 பில்லியன் அமெரிக்க டாலரையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதி நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் விலை மலிவு வீடுகளை வாங்க உதவும் வகையில் குறைந்த வட்டியிலான வங்கிக் கடனை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும். நகர்ப் பகுதிகளிலும் செட்டில்மெண்ட் பகுதிகளிலும் நூறு சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீட்டுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, கடந்த புதன் அன்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த நிதி நிலையில் அறிக்கையில் அறிவித்ததற்கு இணங்க ரியல் எஸ்டேட் துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான விதிமுறைகளைத் தளர்த்தி உள்ளார். நேரடி அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான குறைந்தபட்ச கட்டுமானப் பரப்பு 50 ஆயிரம் சதுர அடியிலிருந்து 20 ஆயிரம் சதுர அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது; கட்டுமானத் திட்டத்தின் மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 5 மில்லியன் அமெரிக்க டாலராகக் குறைக்கப் பட்டுள்ளது. ஏப்ரல் 2000- ஆகஸ்டு 2014 வரை ரியல் எஸ்டேட் துறைக்குக் கிடைத்த நேரடி அந்நிய முதலீடு 23.72 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
கல்வித் துறையில் கால் பதிக்கும் தனியார் துறையினர் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திவருகின்றனர். தனிக் குடும்பங்கள் அதிகரித்து வருவதாலும் நகரமய மாதலின் காரணத்தாலும் நகர்ப் புறங்களை ஒட்டிய பகுதிகளில் புதிதுபுதிதாகக் குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கப் படுகின்றன. முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொருட்டும் வீடுகள் அவசியமாகும் நிலை உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் முதியவர்களுக்கான சிறப்பு வசதிகளைக் கொண்ட வீடுகளின் தேவையும் பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது போக சுற்றுலாவுக்காக வருபவர்களுக்குச் சேவை தர தேவைப்படும் அபார்ட்மெண்டுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளன. இந்தக் காரணங்களால் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி கைகூடும் என அத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT