Published : 10 Jun 2017 10:40 AM
Last Updated : 10 Jun 2017 10:40 AM
அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்திலுள்ள பிரபலமான அருங்காட்சியகம் ஸ்மித்சோனியன் கலை அருங்காட்சியகம். அமெரிக்காவின் மிகப் பழமையான அருங்காட்சியகமான இது ரென்விக் என்னும் கலைக்கூடத்தையும் கொண்டுள்ளது. இந்தக் கலைக்கூடத்தின் விதானத்தை மாற்றியமைக்க அதன் நிர்வாகம் திட்டமிடப்பட்டது.
ஐரோப்பியத் தேவாலயங்கள் இம்மாதிரியான விதான வடிவமைப்புக்குப் பெயர்போனவை. வாடிகன் நகரில் சிஸ்டின் சேப்பல் என்னும் போப்பின் இல்லத்தின் விதான வடிவமைப்பு உலகப் புகழ்பெற்றது. வட்ட வடிவத்தில் குவிந்த விதானங்கள், சதுர விதானங்கள் எனப் பல வகை உள்ளன. சிஸ்டின் சேப்பல் குவிந்த விதானம் கொண்டது. இந்த விதானம் முழுவதிலும் இத்தாலிய ஓவியரான மைக்கெல் ஏஞ்சலோ தன் ஓவியங்களால் அழகுபடுத்தியுள்ளார். பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கும் இந்த நூற்றாண்டில் அதுபோலொரு விதான வடிவமைப்பு சாத்தியம் இல்லாத ஒன்றாகவே உள்ளது. இருந்தும் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் பழமையான விதான வடிவமைப்புகளை முன் மாதிரியாகக் கொண்டு ரென்விக் கலைக்கூடத்தின் விதானத்தை வடிவமைக்க முயன்றிருக்கிறார்கள்.
ரென்விக் கலைக்கூடத்தின் விதானத்தை வடிவமைக்க ஒரு திறந்த போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு கட்டுமான வடிவமைப்பு நிறுவனங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. கலந்துகொண்டவற்றுள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஃப்ரீபேண்பக் என்னும் நிறுவனம் தற்காலிக விதான வடிவமைப்பை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சான்பிராசிஸ்கோவிலுள்ள பேலஸ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக நூலகக் கட்டிடம், சின்சினட்டி யூனியன் டெர்மினல், நியூயார்க் நகர ஃபெடரல் ஹால் உள்ளிட்ட ஒன்பது கட்டிடங்களில் உள்ள விதானத்தை முன் மாதிரியாகக் கொண்டு ரென்விக் கூடத்துக்கான விதானத்தை மாதிரியை உருவாக்கியிருக்கிறார்கள் ஃப்ரீபேண்பக் கட்டுமான நிறுவனத்தினர். நானூறு நூற்றாண்டுக்கு முன்பான விதான அமைப்பை 21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தைக் கொண்டு மீண்டும் உருவாக்கவிருக்கிறோம் என ஃப்ரீபேண்பக் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT