Last Updated : 10 Jun, 2017 10:33 AM

 

Published : 10 Jun 2017 10:33 AM
Last Updated : 10 Jun 2017 10:33 AM

நீர்க் கசிவைத் தடுத்த போராளி

தண்ணீர்த் தட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. மழை நீரைச் சேமிப்பதைவிட இருக்கும் நீரை வீணாகாமல் தடுப்பதே அவசியம். குழாய்களில் ஏற்படும் நீர்க் கசிவால் மட்டும் பல லட்ச ம் நீர்ச் சொட்டுகள் வீணாகிக்கொண்டிருக்கின்றன. இதைத் தடுத்தாலே தண்ணீர்த் தட்டுப்பாட்டை ஓரளவுக்குள் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இந்தப் பணியைச் செய்துவருகிறார் மும்பையைச் சேர்ந்த ஆபித் சுர்தி.

வீடுகளுக்குச் சென்று சொட்டுச் சொட்டாகக் கசியும் தண்ணீர்க் குழாய்களை இலவசமாகப் பழுது நீக்கிக்கொடுக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார் அவர். இதன் மூலமாக இதுவரை பல லட்சம் லிட்டர் தண்ணீரை வீணாகாமல் தடுத்திருக்கிறார். இவர் ஒரு எழுத்தாளரும்கூட. நாவல், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். தனது சிறுகதைத் தொகுப்புக்காகத் தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இயந்திரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் மும்பைவாசிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள். ஆனால், 80 வயது ஆபித் சுர்திக்கு அன்று மிகவும் பரபரப்பான நாள். காலையில் தன்னார்வத் தொண்டர், பிளம்பர் ஆகியோருடன் புறப்பட்டுவிடுவார். குறிப்பிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் அவரது வருகைக்காக ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருப்பார்கள். குடியிருப்புவாசிகள் மத்தியில் அவர் தண்ணீரை வீணாக்கக் கூடாது என்பதை வலியுறுத்திவிட்டு, சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தும் ஆலோசனைகளை வழங்குவார்.

அடுத்து, சுர்தி அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வார். அங்கே உள்ள குழாய்களிலிருந்து தண்ணீர் கசிகிறதா என்று பரிசோதிப்பார். தண்ணீர்க் கசிவு இருக்குமானால், தன்னுடன் வந்திருக்கும் பிளம்பர் மூலமாக அதைச் சரிசெய்வார். வேலை முடிந்ததும், தெரிந்தும் தெரியாமலும்கூடத் தண்ணீரை வீணாக்கக் கூடாது; தண்ணீர் மிகவும் அரிய பொருள் என்பதை வீட்டுக்காரர்களிடம் எடுத்துச் சொல்வார். அத்தோடு நின்றுவிட மாட்டார். அடுத்த அடுத்த வீடுகளுக்குச் செல்வார். இந்தத் தண்ணீர்ச் சிக்கனத்தைப் பற்றி எடுத்துச் சொல்வார். இப்படி அவர் கடந்த எட்டு வருடங்களாக எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தச் சேவையைச் செய்துவருகிறார்.

இந்தச் சேவைக்கான எண்ணம் அவரது இளமைக் காலத்தில் தோன்றியது. சுர்தி, தன் சிறுவயதை பிளாட்பாரத்தில்தான் கழித்தார். ஒவ்வொரு நாளும் தெருக் குழாயில் ஒரு வாளித் தண்ணீர் பிடிக்க அவர் அம்மா படும் கஷ்டங்களையெல்லாம் பார்த்து வளர்ந்தார் அவர். ஒரு வாளித் தண்ணீருக்குப் பல மணி நேரம் கால் கடுக்கக் காத்திருக்க வேண்டியதிருக்கும். இந்தப் பின்னணியே தண்ணீரின் மகத்துவத்தை அவருக்குப் புரியவைத்திருக்கிறது.

சுர்தி அவருடைய நண்பர்களின், உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்போது, அங்கு குழாய்களில் நீர் கசிவதைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். ஒரு நூறு ரூபாய் செலவழித்து அதைச் சரிசெய்யாமல் அப்படியே விட்டிருப்பார்கள். தண்ணீர் சிக்கனம் பற்றிய கட்டுரை ஒன்றில் ஒரு வினாடிக்கு ஒரு சொட்டு வீதம் குழாயிலிருந்து தண்ணீர் கசிந்தால், ஒரு மாதத்தில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கணத்தில் பிறந்ததுதான் சுர்தியின் இந்த விழிப்புணர்வு.

“2007-ல், இப்படி ஒரு சேவைசெய்ய முடிவெடுத்தபோது, பணத் தேவையை எப்படிச் சமாளிப்பது என்பது ஒரு கேள்விக் குறியாகவே இருந்தது. ஆனால், அடுத்த சில வாரங்களில், எனக்கு இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. உடனே தைரியமாகக் களமிறங்கிவிட்டேன். மும்பை ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தார்கள். விப்ரோ நிறுவனம், என் சேவைக்காக விருதளித்து, 50 ஆயிரம் ரூபாய் பரிசு கொடுத்தார்கள். என் இலக்கியப் பங்களிப்புக்காக, மகாராஷ்டிரா இந்தி அகாதமி 50 ஆயிரம் அளித்தது. நிபந்தனைகள் எதுவுமில்லாமல், கொடுக்கப்படும் நன்கொடைகளை ஏற்றுக்கொள்கிறேன்” எனச் சொல்லும் சுர்தி இந்தச் சேவையைத் தொடங்கிய முதல் வருடத்திலேயே 1,700 வீடுகளுக்குச் சென்று குழாய்களை இலவசமாகப் பழுதுநீக்கித் தந்துள்ளார். இதுவரை அவரது இந்தச் சேவை மூலமாக சுமார் எழுபது லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகாமல் தடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பெற்றோர்கள் இளம் வயது முதலே, தங்கள் குழந்தைகளுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தண்ணீர் வீணாவதைத் தடுக்க முடியும். சுர்திக்கும் அவரது சிறு வயதில் ஏற்பட்ட அனுபவம்தான் அவரை இப்படி மாற்றியிருக்கிறது. அதனால்தான், அவர் இப்போது ஏராளமான பள்ளிக் கூடங்களுக்குச் சென்று, குழந்தைகளுக்குத் தண்ணீரின் அவசியம் பற்றிப் பாடம் எடுத்து வருகிறார். வருங்காலத்தில் சுர்தியைப் போல் தண்ணீர்ப் பாதுகாவலர்கள் இன்னும் பலர் வரக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x