Last Updated : 08 Mar, 2014 12:57 PM

 

Published : 08 Mar 2014 12:57 PM
Last Updated : 08 Mar 2014 12:57 PM

வீட்டுக்குள்ளும் செடி வளர்க்கலாம்

தனி வீடும், தோட்டமும் பலரது கனவு. ஆனால் இன்று பெருகி வரும் மக்கள் தொகை மட்டுமல்ல உயர்ந்துவரும் வீட்டின் விலையும் ஃப்ளாட் வாங்க மட்டுமே அனுமதிக்கிறது. இதில் பால்கனியில் வெயில் வந்து விழுந்தால் செடி வளர்க்கக் கூடுதல் போனஸ்தான்.

இவை எதுவும் இல்லாவிட்டால் நம்மைப் பரவசப்படுத்த இருக்கிறது இண்டோர் பிளாண்ட் என்னும் வீட்டுக்குள் வளர்க்கப்படும் அலங்காரச் செடி. வீட்டுக்குள் என்னவெல்லாம் வளர்க்கலாம்? அவற்றை வளர்ப்பது எப்படி? என்று விளக்குகிறார் தோட்டக்கலை வல்லுனர் அந்தோணி ராஜ்:

மணி பிளாண்ட், வெற்றிலை, மிளகு, ஐபோமி, பிலோடாண்டிரன்ட் கோல்டு, பிலோடாண்டிரன்ட் செலம், கிரே ஐவி ஆகிய செடிகள் வீட்டிற்குள் வளரக்கூடியவை. இவற்றைத் தனியாகவும் மாஸ்டிக் (mastick) என்று சொல்லக்கூடிய கொழு கொம்பு வைத்தும் பசுமையாக வளர்க்கலாம். இச்செடிகளை வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் அழகினைக் காக்கவும் சில வழிமுறைகள் உண்டு.

வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும். இச்செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால் கூடப் போதும். அதுகூட அச்செடிகளின் இலைகளில் உள்ள தூசியை நீக்குவதற்காகத்தான். வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளி படுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ, மொட்டை மாடியிலோ வைக்கலாம்.

அப்படி வைப்பதற்கு முன் செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்தி விடவேண்டும். இதுவே தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடி பாகத்தில் மட்டுமே தண்ணீர் விட வேண்டும். இவற்றைப் பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்ப எண்ணையை ஸ்பிரே செய்ய வேண்டும். இது வீட்டினுள் கிருமிநாசினியாகவும் பயன்படும்.

வீட்டிலேயே கொழுகொம்பு

இரண்டு அங்குல பிவிசி பைப்பில், கீழ், நடு மற்றும் மேல் பகுதிகளில் ஆணிகளை அடித்து விட வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் உதிரி தேங்காய் நார் அதாவது கோகோ பீட் கிடைக்கும். இதனை வாங்கிப் பட்டையாகப் பைப்பைச் சுற்றி அமைக்க வேண்டும். அதனை நூல் கொண்டு ஆணிகளில் இணைக்க வேண்டும். இணைத்த நூல்களின் பிடிமானத்திலேயே பிவிசி பைப்பைச் சுற்றி நூலைப் பின்ன வேண்டும்.

இதனால் தேங்காய் நார் கீழே விழாமல் பைப்புடன் இறுகக் கட்டப்பட்டுவிடும். கொடி வளர்க்கத் தயாரிக்கப்பட்ட இந்தக் கொழுகொம்பை தண்ணீர் தெளித்து வெயிலில் போட்டு விட வேண்டும். சிறிது நேரம் கழித்துப் பிழிந்து விட்டால், கொழுகொம்பு தயார். வீட்டிற்கு வெளியே மட்டுமல்ல இப்போது வீட்டிற்கு உள்ளேயும் பசுமைதான். இயற்கையுடன் இணைந்தால் இன்ப வாழ்வுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x