Published : 08 Nov 2014 03:43 PM
Last Updated : 08 Nov 2014 03:43 PM
சொந்த வீடு சொந்த வீடு என்று எதற்காக அடித்துக்கொள்கிறோம். எந்தப் பிரச்சினையும் இன்றி நிம்மதியாக வசிக்க முடியும் என்ற நம்பிக்கையால்தானே. வாடகை வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும். அவசியத் தேவைகளான தண்ணீர், மின்சாரம் போன்றவற்றுக்குகூட அளவுக்கு அதிகமான செலவு செய்திருப்போம். இது நமக்கு அனாவசிய மன உளைச்சலை உருவாக்கும். இது ஓர் உதாரணமே.
இதைப் போன்ற பல சிக்கல்களை வாடகை வீட்டில் சந்தித்த அனுபவங்களே நம்மைச் சொந்த வீட்டை நோக்கி நகர்த்துகின்றன. இந்தச் சூழலில் சொந்த வீட்டை எவ்வளவோ பாடுபட்டு கட்டி முடிக்கிறோம். அந்த வீட்டில் நல்ல காற்றும் போதுமான வெளிச்சமும் மிகவும் அவசியம்.
வீட்டில் நாம் மேற்கொள்ளும் அன்றாட வேலைகளைச் சிரமின்றி செய்ய ஏதுவாக வீட்டில் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் வீட்டின் அலங்காரத்திலும் விளக்குகளுக்கு பிரதான இடம் உள்ளது. வீட்டில் இடம்பெறும் நேர்த்தியான விளக்குகள் வீட்டின் தோற்றத்தைக் கவர்ச்சிகரமானதாக மாற்றும். தகுந்த விளக்குகள் வீட்டில் பொருத்தப்பட்டால் போதும் நமது அன்றாட வேலைகளைத் திறமையுடன் மேற்கொள்ள இயலும். விளக்கின் வெளிச்சம் அறைக்கு அழகையும் மனத்திற்கு நிம்மதியையும் தரும்.
முதன்மை விளக்குகள்
ஓர் அறைக்குத் தேவையான ஒட்டுமொத்த வெளிச்சத்தையும் தரப் பயன்படும் விளக்குகள் இவை. வீட்டின் நடுநாயகமாக விளங்கும் அறையில் இந்த விளக்குகள் பொருத்தப்படும். இந்த விளக்கின் வெளிச்சம் அந்த அறையில் புழங்குபவர்கள் மனநிலையை இதமாக்க உதவும். எனவே மனத்திற்கு இதமான உணர்வைத் தரும் விளக்குகளை இப்படியான அறைகளில் பொருத்துவது நல்லது.
பெரும்பாலும் இத்தகைய விளக்குகள் தேவாலயங்களில் காணப்படுவது போல் அறையில் நடுவில் வீட்டின் கூரைகளின் உட்புறம் தொங்கவிடப்படும். இந்த விளக்குகளில் வெளிச்சம் பிரகாசமாக இருக்க வேண்டும், அதே சமயத்தில் அறையில் உள்ளவர்கள் கண்களைக் கூசவைக்க கூடிய அளவில் அதிக பிரகாசமும் நல்லதல்ல. ஆகவே முதன்மை விளக்குகளை பொருத்துவதற்கு முன்னர் இதைப் போன்ற விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
வேலைக்கான விளக்குகள்
நாம் வீட்டில் படிப்பது, தையல், சமையல் போன்ற தினசரி வேலைகளை மேற்கொள்வோம். இந்த வேலைகளைப் பார்க்கத் தேவையான வெளிச்சத்தை நமக்களிக்கும் விளக்குகள் இவை. குறிப்பிட்ட ஒரு பகுதியில் செறிவான ஒளியைப் பெற இந்த விளக்குகளே பயன்படும். எடுத்துக்காட்டாக அறையில் அமர்ந்து படிக்கும்போது, அறை விளக்கை ஒளிரவிடுவதைவிட மேசை விளக்கை ஒளிரவிட்டுப் படிப்பதால் நமது புத்தகத்திற்குப் போதுமான வெளிச்சம் வந்து விழும்.
புத்தகத்தின் மீது போதிய வெளிச்சம் விழுந்தால் உறுத்தலின்றிப் படிக்க முடியும். இதேபோல் ஒப்பனை செய்துகொள்ளும் கண்ணாடி முன் நிற்கும்போது நம்மீது செறிவான வெளிச்சம் விழ உதவுபவையும் இத்தகைய விளக்குகளே. ஒளியின் நிழல் விழாத வகையில் இவை அமைக்கப்பட வேண்டும். இவற்றின் வெளிச்சத்தால் கண்கள் கூசக் கூடாது, மங்கலாக இருந்துவிடவும் கூடாது.
சிருங்கார விளக்குகள்
அலங்காரத்திற்குப் பயன்படும் விளக்குகள் இவை. வீட்டை அழகுபடுத்த சுவர்களில் ஓவியம், காட்சிப் பொருட்கள் போன்றவற்றைத் தொங்க விட்டிருப்போம். இவற்றின் மீது வெளிச்சத்தைப் படரவிட்டுக் காண்போரைக் கவர்ந்திழுக்க இந்த விளக்குகள் உதவும். பெரும்பாலும் இவை கண்களை ஈர்க்கும் வகையிலும், அதேநேரத்தில் கண்களுக்குக் குளுமையான உணர்வைத் தரும் வகையிலும் அமைய வேண்டியது அவசியம்.
வரவேற்பறை விளக்குகள்
வீடுகளின் நுழையும் நண்பர்களும் விருந்தினர்களும் வந்தமர்வது வரவேற்பறையிலேயே. ஆகவே இங்கு ரம்மியமான ஒளி படர்ந்திருந்தால் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு சந்தோஷமான உணர்வு கிடைக்கும். மிதமான வெளிச்சம் தரத்தக்க விளக்குகளை இந்த அறையில் இடம்பெறச் செய்ய வேண்டும். கலைநயமிக்க அலங்காரமான விளக்குகளை இங்குப் பொருத்தினால் நமது ரசனை வெளிப்படும்.
நண்பர்களிடம் நமது மதிப்பும் உயரும். குறைந்த அடர்த்தி கொண்ட ஒளியைத் தரும் ஹேலஜன் விளக்குகளை இங்கு பொருத்தலாம். ஒளியைக் கூட்டிக் குறைக்கும் வகையிலான விளக்குகளை இங்கு அமைத்தால் தேவையைப் பொறுத்து நாம் வெளிச்சத்தைக் கூட்டிக்கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ முடியும்.
சமையலறை விளக்குகள்
சமையலறையில் நாம் சமையல் செய்வதுடன் அதனுடன் தொடர்புள்ள காய்கறிகளை நறுக்குவது, தேங்காய் துருவுவது போன்ற பிற சமையல் வேலைகளையும் செய்வோம். வேலைகளுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும். சமையலறையின் விளக்குகள் சமையல் மேடையை நன்கு ஒளியூட்ட வேண்டும். அதேபோல் அறை முழுவதும் நன்கு வெளிச்சம் படர வேண்டியதும் முக்கியம். இந்த அறையுடன் இணைந்திருக்கும் பகுதியில் உணவு மேசைக்கு மேலே தொங்கும் விளக்குகளை அமைத்தால் சாப்பிடும்போது நல்ல வெளிச்சம் கிடைக்கும்.
பிற விளக்குகள்
படுக்கையறையில் மெல்லிய வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகள் அமைய வேண்டும். மனதுக்கு அமைதி தரும் வகையிலான வண்ணத்தில் ஒளியைப் படரவிடும் விளக்குகளை இங்கே பொருத்த வேண்டும். குறைந்த ஆற்றலிலும் அதிக வெளிச்சம் தரும் சிஎஃப்எல் பல்புகளைக் குளியலறையில் பொருத்தலாம். இதுபோக ஷேவிங் போன்றவற்றுக்கு உதவ வாஷ் பேசின் மேலே வெளிச்சத்தைப் படரவிடும் வகையில் பிரத்யேக பல்பைப் பொருத்திக் கொள்ளலாம்.
தனி வீடுகளுக்கு பிரத்யேகமான அழகை அளிக்கவும் விளக்குகள் உதவுகின்றன. வீட்டைச் சுற்றி அமைக்கப்படுபவை இவை. இரவு முழுவதும் ஒளிர வேண்டியவை என்பதால் அதிக மின்னாற்றல் தேவைப்படாத விளக்குகளை இங்கே அமைக்கலாம்.
இவையெல்லாம் சரி. மின்சாரச் செலவைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவசியமற்ற நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட வேண்டும் என்பது இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT