Published : 25 Jun 2016 02:18 PM
Last Updated : 25 Jun 2016 02:18 PM
அது 1944-ன் ஆகஸ்ட் மாதம். நாஜி படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து வார்ஸாவை விடுவிப்பதற்காக போலந்து நாட்டின் போராளிப் படையினர் மூர்க்கமாகத் தாக்குதல் தொடுத்துக்கொண்டிருந்தனர். அந்தக் கிளர்ச்சியின் போது, குறைவான ஆயுதங்களையே கொண்டிருந்த போலந்து போராளிகள் நாஜிப் படையினருக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினார்கள்.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாஜிக்கள் படுகாயமடைந்தும் இறந்தும் போனார்கள். சாதாரணக் குடிமக்கள்தான் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்தார்கள். ஒன்றரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் விமானத் தாக்குதல்களிலும் அந்த நகரத்தின் ஊடாக நடந்த சண்டைகளிலும் உயிரிழந்தார்கள்.
தங்கள் படையினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதத்தில் நாஜிக்கள் போலந்தின் தலைநகரான வார்ஸாவைத் தரைமட்டமாக்கினார்கள். அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரத்தின் மையப் பகுதி கிட்டத்தட்ட 85% அழிக்கப்பட்டது.
அதை அடுத்து நடந்ததுதான் வார்ஸா புனரமைக்கப்பட்ட வரலாறு.
போலந்தின் புகழ்பெற்ற ஓவியரான பெர்னார்தோ பில்லோத்தோ (1722 1780) வரைந்த ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தலைநகரை வார்ஸாவாசிகள் புனரமைக்க ஆரம்பித்தனர்.
வார்ஸாவை வரைந்த ஓவியர்
போலந்து அரசரால் அரசவை ஓவியராக 1768-ல் நியமிக்கப்பட்டவர் பில்லோத்தோ. வார்ஸாவின் கட்டிடங்களையும் சதுக்கங்களையும் பில்லோத்தோ அழகான, துல்லியமான ஓவியங்களாக வரைந்தார். அந்த ஓவியங்களை அவர் வரைந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆன பிறகு அவற்றைக் கொண்டு அந்த நகரத்துக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டது என்பதே அந்த ஓவியங்களின் மகத்துவத்தை நமக்குச் சுட்டிக்காட்டும். சிதிலங்களிலிருந்து புனரமைக்கப்பட்ட நகர மையம் இப்போது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தலங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
1947-ன் கோடைக்காலத்தில் கட்டிடக் கலைஞர் ஹெர்மன் எச். ஃபீல்டு அமெரிக்க வடிவமைப்பாளர்களின் சிறு குழுவொன்றை அழைத்துக்கொண்டு ஐரோப்பாவுக்குச் சென்றார். போருக்குப் பிந்தைய ஐரோப்பா எப்படிப் புனரமைக்கப்படுகிறது என்பதைப் பார்த்தறிந்துகொள்வதற்கானதுதான் அந்தப் பயணம்.
இங்கிலாந்து, செக்கோஸ்லோவேக்கியா, போலந்து போன்ற நாடுகளுக்குச் சென்று பார்த்தார். போலந்தில் வார்ஸா, கிராக்கோ போன்ற நகரங்களுக்குச் சென்று பார்வையிட்டார்கள். அவர்கள் எடுத்த புகைப்படங்களெல்லாம் போருக்குப் பிந்தைய நகர அழிவுகளின் சாட்சியங்களாக நிற்கின்றன. சிதிலமடைந்த கட்டிடங்களெல்லாம் தங்கள் உள்ளுறுப்புகளைக் காட்டிக்கொண்டு அந்தப் புகைப்படங்களில் காட்சியளிக்கின்றன.
வார்ஸாவிலிருந்து தப்பிச்செல்லாதவர்கள் அந்தப் பேரழிவின் இடிபாடுகளிடையே வாழ்ந்தார்கள். கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் அவ்வப்போது பிணங்கள் காணக்கிடைப்பது அவர்களுக்குச் சர்வசாதாரணம்! போரின் நினைவுச் சின்னமாக அந்த நகரத்தை அப்படியே விட்டுவிட்டு வேறொரு இடத்தில் தலைநகரத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்று ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
மூச்சுக் காற்றால் வளர்ந்த நகரம்
தூசிப்படலங்கள் வார்ஸாவாசிகளின் நுரையீரல்களில் ஊடுருவி அவர்களுக்கு மூச்சடைப்பை ஏற்படுத்தின. “அந்தக் காலகட்டத்தில் வார்ஸாவாசிகள் ஒவ்வொருவரும் ஆண்டுக்குத் தலா நான்கு செங்கல்களைச் சுவாசித்ததாக ஒரு தத்துவவாதி கணக்கிட்டிருக்கிறார். ஒருவர் தனது மூச்சைப் பணயம் வைத்து நகரத்தைப் புனரமைக்கும் அளவுக்கு அவர் தனது நகரத்தை நேசிக்க வேண்டும். ஒருவேளை இதன் காரணமாகத்தான் சிதிலங்கள், அழிவுகளின் போர்க்களமாகக் காட்சியளித்த வார்ஸா மறுமுறையும் பழைய வார்ஸாவாக, அழிவற்ற வார்ஸாவாக ஆகியிருக்கக் கூடும். வார்ஸாவாசிகள் அந்த நகரத்தின் செங்கல் உடலுக்குள் தங்கள் சொந்த மூச்சுக்காற்றைச் செலுத்தி அதற்கு உயிர் கொடுத்தார்கள்” என்று போலந்து எழுத்தாளர் லேபோல்டு டிர்மாண்ட் கூறுகிறார்.
சிதிலமான அந்த நகரத்தின் கட்டிட இடிபாடுகளின் சிதறல்களைக் கொண்டே நகரத்தின் புனரமைப்பு தொடங்கப்பட்டது. புனரமைப்பு வேலையில் கட்டிடப் பணியாளர்களும் கட்டிட நிபுணர்களும் ஈடுபட்டார்கள் என்றால் மலைமலையாகக் குவிந்திருந்த சிதிலங்களை அப்புறப்படுத்துவதில் உள்ளூர் மக்கள் உதவினார்கள். ‘ஒட்டுமொத்த தேசமும் அதன் தலைநகரத்தைக் கட்டியெழுப்புகிறது’ என்பது அந்த நகரத்தின் அறைகூவலாக உருவெடுத்தது.
(புனரமைப்பில் அங்குள்ள சிதிலங்கள் போதவில்லையென்றால் அருகிலுள்ள சிதைக்கப்பட்ட நகரங்களிலிருந்து சிதிலங்கள் கொண்டுவரப்பட்டன. பில்லோத்தோ வரைந்த நகரக் காட்சிகளைக் கொண்டு உரிய இடங்களில் உரிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.)
பில்லோத்தோ வரைந்த வீதிக் காட்சிகளின் 22 ஓவியங்களைக் கைப்பற்ற வரலாறு நெடுகிலும் கடும் போட்டி நிலவியிருக்கிறது. பில்லோத்தோவின் ஓவியங்களை நாஜிக்கள் கட்டம் கட்டிவைத்திருந்ததால் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பில்லோத்தோவின் ஓவியங்களின் விலைமதிப்பு பெருமளவில் அதிகரித்தது.
செப்டம்பர் 1939-ல் வார்ஸா மீது குண்டுமழை பொழியப்பட்டபோது கலாரசிகர்களுக்கான பத்திரிகை யொன்று பில்லோத்தோவின் ஓவியங்களுக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்று தன் அக்கறையை வெளிப்படுத்தியது. உண்மையில் அவரது 22 ஓவியங்களும் போர்க் காலத்தைத் தாக்குப்பிடித்து நின்றன. 1984-லிருந்து அந்த ஓவியங்கள் வார்ஸாவின் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
பில்லோத்தோவின் ஓவியங்கள், போலந்து கட்டிடக் கலைஞர்களின் நிபுணத்துவம், கலை வரலாற்றறிஞர்கள், கலைப் பாதுகாவலர்கள் போன்றோரின் உதவியுடன் பழைய நகரத்தை மிகக் குறுகிய காலத்தில் புனரமைக்க முடிந்தது. பெரும்பாலான வேலைகள் 1955-க்கு முன்பே முடிந்திருந்தாலும் கூடுதல் கட்டுமானங்கள் 1980-கள் வரை நீடித்தன. எனினும், இன்றுவரையிலும் அந்த நகரம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளை உணர்கிறது.
தற்போதைய வார்ஸா நகரத்தை பில்லோத்தோ ஓவியத்தின் முழுமையான, துல்லியமான வார்ப்பு என்று சொல்லிவிட முடியாது. நகரத்தின் கட்டிட அமைப்புகளின் பென்சில் வரைபடங்களைப் பிரதியெடுப்பதற்கு கேமரா அப்ஸ்க்யூரா என்ற சாதனத்தை பில்லோத்தோ பயன்படுத்தியது முதல் காரணம். பிரதியெடுத்ததைக் கொண்டு அவர் ஓவியக் கித்தானில் நீர்வண்ண ஓவியங்களைக் கொண்டு வரைந்தார். கேமரா அப்ஸ்க்யூரா சாதனத்தின் காரணமாக துல்லியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன.
ஜோயனா விஸ்னீவிஸ் எழுதிய ‘லைஃப் கட் இன் டூ’ புத்தகத்தில் பல குறைபாடுகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். நாஜிக்களின் ஆளுகையில் யூதச்சேரியாக முன்பு இருந்த இடத்தில் போருக்குப் பிந்தைய காலத்தில் நின்றுகொண்டு ஒரு தாய் கத்தியிருக்கிறார், “என் குழந்தைப் பருவத்தில் நான் கண்ட வார்ஸா இது இல்லை. என்னுடைய பள்ளிக்கூடம் அங்கிருந்தது, என் தோழிகளுடன் நான் இங்கேதான் விளையாடினேன் - அவையெல்லாம் தற்போது காணோம்! எல்லாமே எனக்கு அந்நியமாகத் தெரிகின்றன.”
உலகப் போருக்குப் பிறகு போலந்தின் அதிபராக போலஸ்வா பியரூத் ஆன பிறகு வார்ஸாவுக்கான அவரது ஆறாண்டுத் திட்டம் (கம்யூனிஸப் பிரச்சாரங்கள் நிறைந்த திட்டம் அது) வீட்டு வசதி, ஒளியமைப்பு போன்ற பிரச்சினைகளைப் பற்றிப் பேசியது. அந்தத் திட்டத்தின் பிரதி வெளியான இரண்டு ஆண்டுகளுக்குள் ஸ்டாலின் இறந்துவிட்டதால் அதுபோன்ற பிரம்மாண்டமான திட்டங்கள் பலவும் செயல்வடிவம் பெறாமலே போயின. விசாலமான இடங்களையும் லாவகமான கார்களைக் கொண்ட சதுக்கங்களின் பென்சில் வரைபடங்கள் இப்போது வரலாற்றில் மட்டுமே இடம்பிடித்துவிட்டன.
பழைய நகரத்தின் ஊடாக இன்று நடந்தால் வார்ஸாவாசிகள் தங்கள் நகரத்தின் துயரக் கதையைச் சொல்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். பில்லோத்தோவின் ஓவியங்கள் அட்டைகளில் அச்சிடப்பட்டு அந்த நகரத்தின் உருவாக்கத்தில் அவை எப்படிப் பங்குவகித்தன என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. வார்ஸாவின் எந்த இடத்துக்குச் சென்றாலும் அதன் புயல்வீசிய கடந்த காலத்தையும், புனரமைப்பையும் நினைவுபடுத்தும் விஷயங்கள் இறைந்துகிடக்கின்றன.
வார்ஸாவின் கதையை நவீன காலத்தோடு மிகவும் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். தற்போது புகைப்படங்கள், முப்பரிமாணத் தொழில்நுட்பம் போன்றவற்றின் உதவியால் தொன்மையான கட்டிடக் கலை அற்புதங்களை நாம் பாதுகாக்கவோ மீட்டெடுக்கவோ முடியும். சமீபத்தில் கூட கட்டிடக் கலை அற்புதங்கள் கொண்ட சிரியாவின் பால்மைரா நகரம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரிடமிருந்து அரசுப் படையினரால் மீட்கப்பட்டிருப்பதை நான் நினைவுகூரலாம்.
வார்ஸாவைப் பொறுத்தவரை தனிப்பட்ட ஒரு ஓவியரின் படைப்புகள்தான் அதைப் புனர்நிர்மாணம் செய்வதற்கான திட்டவரைபடமாக அமைந்தன. பில்லோத்தோவின் துல்லியமான சித்தரிப்புகள் இல்லையென்றால் இன்று வார்ஸா வேறு விதமாகவே காட்சியளித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT