Published : 22 Nov 2014 04:40 PM
Last Updated : 22 Nov 2014 04:40 PM
நான் 1993-ம் ஆண்டு மே மாதம் இந்திய விமானப் படையில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று சென்னை நகரில் குடியேறினேன். நங்கநல்லூரில் வாடகை வீட்டில் 1996 வரை இருந்தோம். 94-ல் சென்னை துறைமுகத்தில் வேலை கிடைத்தது. எல்லோரையும் போல் எங்களுக்கும் வாடகை வீட்டுப் பிரச்சினை இருந்தது. ஆனால் நாளுக்கு நாள் எங்கள் வீட்டு உரிமையாளரின் சொந்தரவு அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர் யாரையும் அதிக நாள்கள் தங்க விடமாட்டார். அதனால் எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என முடிவுசெய்தேன்.
நண்பர் ஒருவர் மூலமாக மாடம்பாக்கத்தில் முக்கால் கிரவுண்ட் நிலத்தை பிரம்ம பிரயத்தனம் செய்து வாங்கிக் கிரயம் முடித்தேன். இங்கு ஒரு முக்கியமான சம்பவத்தைக் கூற வேண்டும். ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை நேர்மையான மனிதர்கள், வெகு சுலபத்தில் ஏமாந்துவிடுகிறார்கள். இந்திய விமானப் படையில் 15 வருடம் பணியாற்றியதால் வெளி உலகமே தெரியாத நான், எனக்கு நிலம் விற்றவரை முழுமையாக நம்பினேன். ஆனால் அவர், என்னிடம் ஒரிஜினல் ஆவணங்களைக் கொடுக்காமல் டூப்ளிகேட் ஆவணங்களைக் கொடுத்து ஏமாற்றிவிட்டார். அது மட்டுமல்ல அந்த ஒரிஜினல் ஆவணம் ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் அடகுவைக்கப்பட்ட விஷயத்தையும் என்னிடம் மறைத்துவிட்டார்.
தாம்பரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுசெய்த பிறகுதான், என் அலுவலக நண்பரும் நிலத்தை எனக்கு விற்ற நபரும் கூட்டுச் சதிசெய்து என்னை ஏமாற்றியிருக்கிறார்கள் எனத் தெரிய வந்தது. பிறகு சிரமப்பட்டு அடகுவைத்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அந்த அடகுத் தொகையான 90 ஆயிரத்தை நானே கொடுத்து ஒரிஜினல் ஆவணங்களை மீட்டேன். பிறகு அந்த நிலத்தின் ஆவணங்களை வைத்து அலுவலகத்தில் வீட்டுக் கடன் விண்ணப்பித்தேன். 1.73 லட்சம் ரூபாய் கிடைத்தது. வீடு கட்டத் தொடங்கினோம்.
அது 1997-ம் வருடம். எனக்குத் தெரிந்த மற்றொரு நண்பர் மூலமாக வீடு கட்ட ஒரு மேஸ்திரியைப் பிடித்தோம். அவர் மிக நன்றாக வீடு கட்டுவதாகச் சொன்னார். அவருக்கு 500 ரூபாய் முன்பணம் கொடுத்தோம். பிறகு வீடு கட்டுவதற்கான அனுமதி வாங்கினோம். 600 சதுர அடியில் இரு படுக்கையறை, ஒரு வரவேற்பறை, சமையலறை, கழிவறை, குளியலறை எனத் திட்டமிட்டோம். முதலில் அஸ்திவாரம் போடுவதற்காகக் கூலி மட்டும் 6 ஆயிரம் கொடுத்தோம். கட்டுமானப் பொருள்களுக்கு 37 ஆயிரத்திற்கு மேல் ஆனது. குடிசை போட்டது, வாட்ச் மேன், கிணறு தோண்டியது உள்ளிட்ட இதர செலவுகள் சேர்த்து கிட்டதட்ட 70 ஆயிரம் ரூபாய் ஆனது. இது அஸ்திவாரத்திற்கு மட்டுமான செலவுதான். கிணறு 10 அடிவரை தோண்டிய பிறகு ஒரு நண்பர் வந்து இது தென் கிழக்கு மூலை இங்கே கிணறு தோண்டக் கூடாது என்றார்.
கிணறு தோண்டுவதற்கான செலவு வீணானது. என்ன செய்ய? மூடினோம். பிறகு தென் மேற்கு மூலையில் ஆழ்துளைக் கிணறு அமைத்தோம். வீட்டின் அருகில் மின்சாரக் கம்பம் இல்லாததால் ஈபியில் ஆள்பிடித்து, ‘கொடுக்க வேண்டியவற்றை’க் கொடுத்து மின்சாரக் கம்பம் வாங்கினோம். நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்த காலம் நல்ல மழைக் காலம். மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக்கொண்டிருந்தது. என் மனைவி இந்த வீட்டுப் பணிகளால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். வீடு கட்டி அனுபவம் உள்ளவர்கள் மழைக் காலம் கட்டிடப் பணிகளைத் தொடராதீர்கள் என்றனர். அப்புறம் ஒரு வழியாக சென்ட்ரிங் வரை கட்டிடப் பணிகளைக் கொண்டுவந்தோம். சென்ட்ரிங் போடும் அன்று நான் கண்டிப்பாக வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் என் மனைவியை வீட்டுப் பணிகளைப் பார்த்துக்கொள்ள அனுப்பினேன்.
ன்று ஒரு நினைவுகூரத்தக்க சம்பவம் நடந்தது. ஒரு வழியாகக் கட்டிடத் தொழிலாளர்கள் ஒன்று கூடி மாலை 5 மணிக்கெல்லாம் சென்ரிங் போட்டு முடித்தனர். மனைவியும் அங்கு இருந்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு வீடு திரும்பிவிட்டார். இரவு ஒரு 7 மணியளவில் மழை எங்கிருந்தோ வந்து கொட்டோ கொட்டு எனக் கொட்டியது. நாங்கள் போட்ட சென்ட்ரிங் அவ்வளவுதான் எனப் பயந்தோம். மறுநாள் வந்து பார்க்கும்போது கடவுள் கருணையால் நல்லவேளையாக சிமெண்ட் செட்டாகியிருந்தது. இதை ஒருவழியாகக் கடந்து வந்துவிட்டோம் என நிம்மதி அடைந்தோம். ஆனால் அது தற்காலிகமானதுதான். எங்கள் மேஸ்திரி முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் வங்கிக்கொண்டு சொந்த ஊருக்குப் போய்விட்டார்.
திரும்பி வரவே இல்லை. ‘இன்று வருவார், நாளை வருவார்’ எனப் பொறுமையாகக் காத்திருந்தோம். ஆனால் அவர் வந்தபாடில்லை. சென்ட்ரிங் போடுவதற்காக அடிக்கப்பட்ட பலகைகளும் கம்புகளும் அவிழ்க்கப்படாமல் இருந்தன. கொஞ்ச நாள் வரை பார்த்துவிட்டுப் பிறகு வேறு வழியில்லாமல் எங்களுக்கு சென்ட்ரிங் போட்ட கொத்தனரைத் தேடிப் பிடித்து மீதி இருக்கும் பணிகளைப் பார்த்துத் தரும்படி காலில் விழாத குறையாகக் கேட்டுக்கொண்டோம். அவரும் சம்மதித்தார். ஒரு கொத்தனாரை, ஒரு சித்தாளை வைத்து ஒரு வழியாக வீட்டைக் கட்டி முடித்தோம். இன்று அந்த வீட்டில் இருந்துகொண்டுதான் இதை எழுதுகிறேன். இப்போதும் வீடு கட்டியதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT