Published : 29 Nov 2014 11:34 AM
Last Updated : 29 Nov 2014 11:34 AM
என் பெற்றோர், ரயில்வே பணி நிமித்தமாக 60 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து சென்னை எண்ணூருக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள். பல ஆண்டுகள் இந்த நகரத்தில் வசித்தாலும் அவர்களுக்கு என்று சொந்த இடம் இல்லாமல் வாழ்ந்து முடித்தவர்கள்.
சிறுவயதிலிருந்தே மரம், செடி-கொடிகள், வளர்ப்புப் பிராணிகள் என்று வளர்ந்துவிட்ட சூழலில் திருமணத்துக்குப் பிறகு ஒவ்வொரு வாடகை வீட்டிலும் பிரச்சினைதான். ‘மாடியில் செடி வளர்க்கக் கூடாது. கோழி வளர்க்கக் கூடாது, நாய், பூனை வளர்க்கக் கூடாது’ எனக் ‘கூடாதுகளா’ல் நாடோடியானது எங்கள் வாழ்க்கை.
இந்நிலையில், 90-களில், எனது பால்ய சிநேகிதன் ராஜு சொந்தமாக மனை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினான். எனக்கு அதில் உடன்பாடு இருந்தாலும் சொந்தமாக மனை வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால் என் தயக்கத்தைப் புரிந்துகொண்டு அவனே கைமாற்றாக, பணம் கொடுத்து மனை வாங்க உதவினான். அவன் கொடுத்த பணத்தில் 5 செண்ட் இடம் எங்களுக்குச் சொந்தமானது.
நமக்கு என்று ஓர் இடம் சொந்தமானதும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? வாடகை வீடுகளில் நிறைவேற்றிக்கொள்ள முடியாத என் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டேன். 5 சென்ட் முழுக்கத் தோட்டம் அமைக்க நினைத்து காய்கறிகளைப் பயிரிட்டேன். அதைச் செய்து முடித்ததும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
சுற்றியும் எட்டுத் தென்னைகளை நட்டுச் சில மாதங்கள் கழித்து அந்த இடத்தில் பேஸ்மெண்ட் போட்டுச் சுவர் எழுப்பி மேலே கூரையாய்த் தென்னங் கூரையை வேய்ந்து, அதன் பின் கல்நார் கூரை என்று கொஞ்சம் கொஞ்சமாக உருமாறலாயிற்று எனது ‘மனித நேயக் குடில்’. இதுதான் என் இல்லத்தின் பெயரும்கூட!
தமிழகத்தின் தலைசிறந்த இனமான கோம்பை இன நாய்கள் முதல், காவல் நாய்களான ஜெர்மன் ஷெப்பர்ட், கிரேட் டேன் வரை வளர்த்தேன். இது மட்டுமல்லாது கோழிப் பண்ணை, வாத்துப் பண்ணை, வண்ண மீன் பண்ணைகளையும் வைத்துப் பராமரித்து வந்தேன். எல்லா ஜீவராசிகளும் கை கோத்து வளர்ந்தன.
சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் முழு நேரப் பணியாளனாக வேலை கிடைத்தது. குடும்பத்தின் மூத்தவனாக இருந்ததால் தங்கைகளின் திருமணங்களை நடத்திவைக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. எங்கள் நிறுவனத்தின் வைப்புநிதியிலிருந்து பெற்ற கடன்தொகையில் தங்கைகளின் திருமணம் நடத்தியது போக மிச்சம் மீதி இருந்த தொகையில் ஓரளவு வீட்டைத் தளம் போட்டு முழுமையாக்கினோம்.
வீட்டின் தளத்தில் ‘வெதர் புரூப்புக்காக’ப் பரப்பிய செங்கல் - சுண்ணாம்புக் கலவையின் மீது மாடித் தோட்டம் அமைக்கப்போய் சில ஆண்டுகளிலிலேயே மழைநீரும், செடிகளுக்கு ஊற்றிய நீரும் ஊறித் தரைத்தளத்தில் விரிசல் விடத் தொடங்கிவிட்டது.
மழை நேரத்தில் ஓலைக் குடிசை வீடு போல தளத்திலிருந்து ஆங்காங்கே மழை நீர் ஒழுகும் இடங்களில் நானும் எனது குடும்பத்தாரும் தட்டு, முட்டுச் சாமான்களை வைத்துச் சமாளிப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கமோ வீட்டின் உள்துறை அமைச்சரான என் மனைவியிடமிருந்து, “மாடியில செடி வளர்க்காதீங்க... வளர்க்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே..? வீடே நாசமாய்ப் போச்சு..!” என்ற அர்ச்சனை கிடைக்கும்.
வாடகை வீடுகளில் ஏற்பட்ட அனுபவத்தைப் போலவே சொந்த வீட்டிலும் சங்கடமான நிலை தொடர்ந்தது. இச்சூழலில் பதவி உயர்வு, மூத்த அதிகாரி என்று உயர்ந்த ஒரு கட்டத்தில் பத்திரிகை ஆர்வத்திற்காக விருப்ப ஓய்வுபெற்றபோது கிடைத்த கணிசமான பணத்தை, வேறு எதிலும் முதலீடு செய்யத் தைரியமில்லை. வங்கியில் போட்டு வட்டியைச் சாப்பிடவும் முடியாத நிலை.
கடைசியில் ஒரு சொத்தாவது இருக்கட்டுமே என்று மேல் தளம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினேன். மிக அழகிய முறையில் என் மருமகனும், இளைய மகளும் முன்னெடுத்துக் கட்டிய வீடு இறையருளாள் அற்புதமாய் அமைந்தது.
இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை.
அதேபோல, காய்த்து குலுங்கும் கொய்யா மரத்தையும், வெட்ட முடியாது என்று மறுத்ததால், வீட்டுக்குள்ளேயே காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது கொய்யா. கூடவே பசும் மேகமூட்டமாய் படர்ந்துள்ள சப்போட்டா மரம். வாழை, கிணற்றடியில் வளர்ந்து நிற்கும் புளியம் மரம் என்று ஒரு சிறுதோப்பு எனது குடில்.
மேல்தளத்துக்காக மாடியில் சுற்றுச் சுவர் எழுப்பும்போது தோட்டம் வைப்பதற்கு ஏதுவாக அந்தச் சுவருக்கு வடிகால் வசதியோடு தொட்டிகள் போன்ற வடிவமைப்போடு கட்டியாகிவிட்டது.
பெரிய திறமையாளர் என்று சொல்ல முடியாவிட்டாலும், சொன்னதைச் செய்யும் நல்ல மேஸ்திரி, அற்புதமான எலெக்ட்ரீஷியன், நல்ல இன்ட்டீரியர் டெக்ரேட்டர் என்று ஏகத்துக்கும் நல்லவர்கள் கிடைத்தார்கள்; திருஷ்டிக்கு ஒரு தச்சரைத் தவிர.
வீடு கட்டி முடிக்கப்பட்ட கையோடு வீட்டுக்குக் குடிபோனபோது, மேஸ்திரி, எலெக்ட்ரீஷியன், தச்சர் உட்பட ஆளாளுக்கு நாங்கள் தர வேண்டிய நிலுவைத் தொகை கணிசமான கடனாக நின்றது. அப்போது எங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவகாசம் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொண்ட நல்லுள்ளங்களால்தான் நிமிர்ந்து நிற்கிறது எனது மனித நேயக்குடில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT