Published : 01 Nov 2014 03:12 PM
Last Updated : 01 Nov 2014 03:12 PM
ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்ஜினி, போர்ஷா, ஜகுவார், ஆடி மிக விலை உயர்ந்த கார்களின் சக்கரங்கள் நடை பழகும் இடங்கள் எவை? இவைதான் கடந்த ஐந்து வருடங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு இரண்டு, மூன்று மடங்காக உயர்ந்துள்ள சென்னை நகரத்தின் மையப் பகுதிகள். இவைதான் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமாப் பிரபலங்கள் ஆகியோரின் வீடுகள் உள்ள இடங்கள். போயஸ் கார்டன், போட் கிளப், ரட்லேண்ட் கேட் ஆகிய இந்த மூன்று பகுதிகள்தான் சென்னையின் மதிப்புமிக்க அந்தப் பகுதிகள்.
சமீப காலத்தில் இந்தப் பகுதியில் வசதி படைத்தவர்கள் இடம் வாங்க போட்டி போட்டுக்கொண்டு அமெரிக்க டாலர்களைச் செலவிடுகிறார்கள். அந்த அளவுக்கு அதிகம் விரும்பப்படும் இடங்களாக இவை உள்ளன. இந்தப் பகுதிகளில் ஒரு கிரவுண்ட் இடம் பத்திரப் பதிவில் 12 கோடி ரூபாய் வரை விலை போகிறது. இதே பகுதியில் 2009-ம் ஆண்டு ஒரு கிரவுண்டின் விலை ரூ. 4.4 கோடியாகத்தான் இருந்தது. சமீப காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும் இந்தப் பகுதியின் நில மதிப்பை குறைத்துவிடவில்லை. மேலும் இந்தப் பகுதியின் ரியல் எஸ்டேட் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அத்துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். வெளிநாட்டவர்களும் இந்தப் பகுதியில் முதலீடு செய்வதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
போட் கிளப் சென்னையின் முக்கியமான தொழிலதிபர்களின் வசிப்பிடமாக உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு ஸ்ரீனிவாசன், இண்டியா சிமெண்ட்ஸின் என். னிவாசன், முகேஷ் அம்பானியின் உறவினரான ஷ்யாம் கோத்தாரி, சன் டிவி குழுமத்தின் கலாநிதி மாறன் ஆகியோர்கள் இந்தப் பகுதியில்தான் வசித்துவருகிறார்கள். அதுமட்டுமல்லாது டிடிகே, எம்.ஆர்.எஃப்., முருகப்பா, சீப்ரோஸ் போன்ற பெரு நிறுவனங்களின் குடும்பத்தாரும் இந்தப் பகுதியைத்தான் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர்.
அம்பத்தூர் கிளாத்திங் கம்பனி மற்றும் பார்க் ஹயாத் ஹோட்டலின் உரிமையாளரான விஜய் மட்டனி, “போட் கிளப் அமைதி நிரம்பிய இடம். அழகாகப் பராமரிக்கப்படும் இவ்விடம் முதலீடு செய்வதற்குத் தகுதியானது” என்கிறார்.
அடுத்த இடம் போயஸ் கார்டன். இந்த இடத்தைப் பற்றிச் சொன்னவுடனே எல்லோரும் தெரியும் அளவுக்குத் தமிழகத்தின் பெரிய விஐபிக்கள் வாழும் இடம் இதுதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், பெப்சியின் தலைமைச் செயல் அதிகாரியான இந்திரா நூயி ஆகியோரின் வீடுகள் உள்ள பகுதி. இங்கு ஒரு கிரவுண்ட் விலை ரூ. 9 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை உள்ளதாகச் சொல்லப்படுகிறது. “போயஸ் கார்டனுக்குப் பத்து வருடத்திற்கு முன்பு நல்ல ரியல் எஸ்டேட் பிராண்ட் இருந்தது. ஆனால் இப்போது இதை போட் கிளப் முந்திக் கொண்டுள்ளது. எனினும் இந்த இரண்டு பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் சமீபகாலத்தில் மேம்பட வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்கிறார் கிரெடாய் அமைப்பின் சென்னைப் பகுதியின் தலைவரான அஜித் சோர்டியா.
அதே வேளையில் இந்த இரு இடங்களும் குடியிருப்புப் பகுதிகளாக உள்ளன. மூன்றாவது பகுதியான ரட்லேண்ட் கேட் சாலை வர்த்தக வளர்ச்சிக்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறது. முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் சில்லறை விற்பனை மையங்கள் காதர் நவாஸ்கான் சாலையில் இருந்து இப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள ரட்லேண்ட் கேட் சாலைக்கு மாறிக்கொண்டு வருகின்றன. “இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. பல வெளிநாட்டுச் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் இந்தப் பகுதியைத் தங்கள் வர்த்தகத்திற்கான மையமாக்கும்” என அவர் தெரிவிக்கிறார். இங்கு கிரவுண்ட் 8 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி வரை விற்பனையாகிறது.
பின் கோடு மோகம்
வீடு வாங்குவதில் வாஸ்து சாஸ்திரம் இப்போது பெரும் பங்கு வகிக்கிறது. வாஸ்து நிபுணரைக் கலந்து ஆலோசித்த பின்பு வீடு வாங்கும் கலாச்சாரம் எல்லாத் தரப்பு மக்களிடையேயும் பரவலாகி வருகிறது. இது தெரிந்த விஷயம்தான். ஆனால் சென்னையின் மில்லியனர்களைப் பொறுத்தவரை சமீப காலத்தில் அவர்கள் வாஸ்து சாஸ்திரமெல்லாம் பார்ப்பதில்லை. மாறாக பின்கோடு என்ன எனக் கேட்கிறார்கள்.
உதாரணமாக போட் கிளப், ஆர்.ஏ.புரம் பின்கோடில் வருகிறது. அதாவது சென்னை - 28. போயஸ் கார்டன் தேனாம்பேட்டை பின்கோடான 18. ரட்லேண்ட் கேட்வே, நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது. நுங்கம்பாக்கம் பின்கோடு 34. இந்த மூன்று பகுதிகளின் பின்கோடுகளும் கவுரவமான எண்களாகப் பார்க்கப்படுகின்றன. “ஆர்.ஏ.புரம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்கள், மேலே குறிப்பிட்ட இந்த மூன்று பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாகும். ஆக, மேற்கொண்ட பின்கோடு பகுதியில் வசிப்பதே மேல் தட்டுவர்க்கப் பகுதியில் வசிப்பதற்குச் சமம் என்ற மனப்பான்மை ஏற்பட்டு வருகிறது” என்கிறார் முன்னணி ரியல் எஸ்டேட் துறை அதிகாரியான சரிதா ஹந்த்்.
அதனால் இந்த மூன்று பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் நகரின் முக்கியமான வளர்ச்சி பெறும் மையங்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “இந்த மூன்று பின்கோடு பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள். பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ‘போட் கிளப்புக்கு அருகில் உள்ள பகுதி’ எனச் சொல்லி அடுத்துள்ள இந்தப் பகுதிகளை சந்தைப்படுத்துகிறார்கள். அதனால் விலையும் கூடுதல் ஆகிறது” என்கிறார் கிரெடாய் அமைப்பைச் சேர்ந்த அஜித் சோரியா.
© தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ஜெய்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT