Published : 29 Nov 2014 11:28 AM
Last Updated : 29 Nov 2014 11:28 AM
வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை நழுவவிடுவதற்கு யாரும் விரும்புவதில்லை. அப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களைத் தக்கவைப்பதில் ஒளிப்படங்கள்தான் நமக்குப் பெரிதும் உதவுகின்றன. குடும்பத்தினர்கள், நண்பர்கள் உடனான நம்முடைய அற்புதமான நிகழ்வுகளை ஒளிப்படங்கள் மூலம் எப்போதும் வீட்டில் தக்கவைக்கலாம்.
குடும்பப் படங்களை வீட்டின் சுவர்களில் மாட்டிவைப்பதும் ஒரு கலைதான். ஏனென்றால் வீட்டுச்சுவர்களில் இருக்கும் படங்கள் குடும்பத்தினருக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். ஒளிப்படங்கள் மூலம் வீட்டில் அன்பையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர சில எளிமையான வழிகள்.
ஒளிப்படங்களால் ஒரு சுவர்
ஒளிப்படங்களை ஃப்ரேம் செய்துதான் வீட்டுச் சுவரில் மாட்ட வேண்டும் என்பதில்லை. மொத்தமாக உங்களிடம் இருக்கும் ஒளிப்படங்களை வைத்துச் சுவரில் ஒரு அழகான போட்டோ கொலாஜ் செய்துவிடலாம். சுவரில் ஓட்டும் போட்டோ க்ளிப்களைக் கொண்டு இந்த கொலாஜை உருவாக்கலாம். படங்களைக் குடும்ப நிகழ்வுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஒட்டினால் அந்தப் படங்களே உங்கள் குடும்பத்தின் கதையை அழகாகச் சொல்லிவிடும். படங்கள் பாதுகாப்பாக இருக்க அவற்றை லேமினேட் செய்யலாம். அல்லது போட்டோ கொலாஜ் மீது கிளாஸி பேப்பர் ஒட்டலாம். இதற்கு அதிகமாகச் செலவாகாது.
வண்ண போட்டோ ஃப்ரேம்கள்
போட்டோ ஃப்ரேம்களை விரும்புபவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். முக்கியமான சில படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பளிச் நிறங்களைப் பின்னணியாக வைத்து ஃப்ரேம் செய்துமாட்டலாம். இதை வீட்டின் வரவேற்பறை சுவர் களில் மாட்டினால் அழகாக இருக்கும்.
குடும்ப மரம்
படங்களை வைத்தே வீட்டுச்சுவரில் ஒரு குடும்ப மரத்தை உருவாக்க முடியும். சுவரில் ஒட்டக்கூடிய இந்த ‘பேமிலி ட்ரீ’ வினைல் ஸ்டிக்கர்கள் பல ஆன்லைன் தளங்களிலேயே கிடைக்கின்றன. இந்த வினைல் சுவர் ஸ்டிக்கர்கள் ரூ.500 முதல் கிடைக்கின்றன. இந்த மரத்தில் படங்களை மாட்டுவதற்கு ஃப்ரேம்கள் வரையப்பட்டிருக்கும். வீட்டில் படங்களை மாட்டுவற்கு இந்தக் குடும்ப மரம் ஒரு சிறந்த வழி.
போட்டோ சுவர்க் கடிகாரம்
இந்த போட்டோ சுவர்க் கடிகாரத்தை உருவாக்க ஒரு கடிகார செட், பன்னிரண்டு படங்கள் இருந்தால் போதும். இந்தக் கடிகாரத்தை போட்டோ ப்ரேம்களைக் கொண்டும் உருவாக்கலாம். வீட்டில் நேரம் பார்க்கும்போதெல்லாம் உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பார்ப்பதற்கு போட்டோ சுவர்க் கடிகாரம் ஒரு சிறந்த வழி.
போட்டோ ஜாடிகள்
சமையலறையில் பயன்படுத்தாத கண்ணாடி ஜாடிகள் இருக்கின்றனவா? அவற்றை வைத்தும் ஒர் அழகான போட்டோ டிஸ்பிளேவை வீட்டில் உருவாக்கலாம். குடும்பத்தின் பழைய படங்களை இந்தக் கண்ணாடி ஜாடிகளில் போட்டு மேசை மீதோ அல்லது ஷெல்ஃப்களிலோ வரிசையாக அடுக்கிவைக்கலாம். இது ஒருவிதமான ‘வின்டேஜ் லுக்’கை வீட்டுக்குக் கொடுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT