Published : 07 Apr 2017 05:13 PM
Last Updated : 07 Apr 2017 05:13 PM

ஆரோக்கியம் தரும் தோட்டக் கலை

தோட்டம் வீட்டுக்கு அழகு சேர்க்கும். வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டுக்கொள்ளலாம். மட்டுமல்ல அழகு சேர்க்கும் பூச்செடிகளை வளர்க்கலாம். ஆனால் அழகு மட்டுமல்ல; தோட்டம் ஆரோக்கியமும் தருவது. வீட்டுத் தோட்டத்தைப் பராமரிப்பதால் உடலின் பலம் அதிகரிக்கும்.

கண்களும் கைகளும் ஒன்றுசேர்ந்து இயங்குவதற்கு நல்லதொரு பயிற்சியாகவும் தோட்ட வேலை இருக்கும். எனவே விபத்துகளில் அடிபட்டு உடல்திறன் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சமாக தம்மை மீட்டெடுத்துக்கொள்வதற்கும் இந்த சிகிச்சைமுறை உதவியாக இருக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த சிகிச்சை முறை பிரபலமாக உள்ளது. வீடுகளில் தோட்டம் அமைக்க வாய்ப்பில்லாதவர்கள் கம்யூனிட்டி கார்டன் என்ற பொதுத் தோட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள். பொதுத் தோட்டங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

காய்கறிகள், பழவகைகள், மூலிகைகள் மட்டுமல்லாது தற்போது எண்ணெய் வித்துப் பயிர்களையும் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறது கார்டன் ரைட்டர்ஸ் அசோஸியேஷன் என்ற மற்றொரு அமைப்பின் ஆய்வு. அழகு, உணவு, ஆரோக்கியம் ஆகியவற்றைத் தாண்டி பொருளாதார வகையிலும் இந்தத் தோட்டங்கள் பயனளிக்கின்றன.

அமெரிக்காவில் வீட்டுத் தோட்டங்களைப் பயன்படுத்துவது ஓர் இயக்கமாகவே மாறியிருக்கிறது. இந்தத் தோட்டங்களைப் பராமரிப்பவர்கள் கடைகளில் காய்கறிகளை வாங்கும்போதும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவற்றையே வாங்க விரும்புகிறார்கள்.

அமெரிக்கா மிகப் பெரிய நிலப்பரப்புள்ள நாடு. தோட்டக்கலை எளிதில் சாத்தியம். இந்தியாவில்? நகரத்தில் வாழ்பவர்கள் தோட்டம்போட்டுப் பராமரிப்பது கஷ்டம்தான். ஆனால் மாடியிலோ பால்கனியிலோ அல்லது வீட்டுத் தாழ்வாரத்திலோ கொஞ்சம் இடமிருந்தாலும் அதை வெறுமையாக விட்டுவைப்பதைவிடத் தோட்டம் போட்டுப் பயன்பெறலாம். கிராமப்புறத்தில் வாழ்பவர்களோ தாம் வழக்கமாகச் செய்து வரும் பணிக்கு ஒரு கூடுதல் பயனும் உண்டு என்றெண்ணி மகிழ்ச்சி அடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x