Published : 25 Mar 2017 10:07 AM
Last Updated : 25 Mar 2017 10:07 AM
முன்பு பனிப்பாறை வீடுகள் குறித்து எழுதியிருந்தோம். அதாவது நிலத்துக்கு அடியில் சட்டப்பூர்வமாகச் சில தளங்களை எழுப்புவது குறித்தும், அதன் சாதக, பாதகங்கள் குறித்தும் விளக்கியிருந்தோம்.
மும்பையிலுள்ள தாணே பகுதியில் ஒரு பனிப்பாறை வீடு இருந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் பெண்களுக்கென்றே சில மதுவகங்கள் உண்டு. அவற்றில் சட்ட மீறல்கள் நடப்பதாகப் பல புகார்கள் எழுந்த நிலையில் தாணே பகுதியிலுள்ள இதுபோன்ற மதுவகங்களை உடனடியாக இடிக்கச் சொல்லி ஆணையிட்டது தாணே முனிசிபல் நகராட்சி.
அதன்படி சத்யம் லாட்ஜ் என்ற பெயரில் இயங்கிய கட்டிடம் இடிக்கப்பட்டபோது, அதிர்ச்சிகரமான உண்மை ஒன்று வெளிப்பட்டது. நிலப் பகுதிக்குக் கீழே பல அறைகள் காணப்பட்டன. ஏதோ ஒன்றிரண்டு அல்ல 290 அறைகள். இவற்றில் ஒன்றுகூட நகராட்சி அனுமதியோடு கட்டப்பட்டதல்ல. இந்தக் கட்டிடத்தை வெளியிலிருந்து பார்க்கும்போது, தங்குவதற்கான அறைகளே இல்லாத மாதிரியான தோற்றம் அளித்ததாம்.
நம் நாட்டில் இந்த மோசடியை வேறு கோணத்திலும் செய்கிறார்கள். தங்கள் கட்டிடத்தில் பெரிய ரிப்பேர் வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது என்று நகராட்சியில் விண்ணப்பம் செய்வார்கள். அனுமதி கிடைத்தவுடன் ரிப்பேர் வேலைகளைச் செய்யும்போதே கூடவே சட்ட மீறலாக அதிகப்படியான சில தளங்களை மேற்புறம் எழுப்பிவிடுவார்கள். சில உள்ளூர்வாசிகளும் இதற்கு விலை போகிறார்கள்.
இதனால் பலவித பாதிப்புகள். அருகில் வசிப்பவர்களுக்கு ஆபத்து. தண்ணீர் சப்ளை, மின்சார சப்ளை போன்றவையெல்லாம் அதிகமாகத் தேவைப்படுகின்றன. அதிகப்படி கழிவு நீர், அதிகக் குப்பை என்று அவற்றை அகற்றும் பொறுப்பு அரசுக்கு வந்து சேர்கிறது.
தெற்கு மும்பையில் மட்டும் 600க்கும் அதிகமான கட்டிடங்கள் இப்படிச் சட்ட மீறலாக அதிக மாடிகளைக் கட்டியுள்ளன. இதுவாவது நிலத்துக்கு அடியில், ரகசியமாக நடைபெற்ற கட்டிட உருவாக்கம். ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒருவர் நிலப்பகுதிக்கு மேலாகவே இதுபோன்ற தந்திர வேலையில் ஈடுபட்டிருக்கிறார். 18 மாடிகள் எழுப்பதான் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேலும் 2 மாடிகள் அதிகப்படியாக எழுப்பிக் கொண்டார்.
இது ஆங்காங்கே நடைபெறுவதுதானே. உள்ளூர் அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்தால் சரியாகிவிடுமே என்கிறீர்களா?
இவர் அத்துமீறலாகக் கட்டிய கூடுதல் இரு தளங்களைப் பொது மக்களின் கண்பார்வையில் படாமல் மறைத்தவிதம்தான் அலாதியானது. தன் அடுக்குமாடிக் கட்டிடத்தின் கூரையிலிருந்து பல பிளாஸ்டிக் செடிகளைத் தொங்கவிட்டார். வெளியில் செடிகள் அடர்த்தியாகக் காட்சிதர, உட்புறம் சப்தமில்லாமல் இரண்டு தளங்களைக் கட்டியிருக்கிறார். ஒருவழியாக இந்தச் செய்தி உள்ளூர் நகராட்சியின் காதுகளில் எட்டியிருக்கிறது. ஆனால், நகராட்சி நடவடிக்கை எடுக்கப் போகிறதோ இல்லையோ இவர் திறமையாகக் கட்டிய விதம் மெச்சத்தகுந்ததுதான் இல்லையா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT