Last Updated : 17 Jun, 2017 10:46 AM

 

Published : 17 Jun 2017 10:46 AM
Last Updated : 17 Jun 2017 10:46 AM

லண்டன் தீ விபத்து: காரணம் என்ன?

மேற்கு லண்டனைச் சேர்ந்த நாட்டிங் ஹில் மாவட்டத்தில் லாடிமர் சாலையில் அமைந்திருக்கும் கிரென்ஃபெல் கட்டிடத்தில் ஜூன் 14 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் பன்னிரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட நூறு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 24 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடம், 1974-ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டிடத்தில் அமைந்துள்ள 120 குடியிருப்புகளில் 400 முதல் 600 பேர்வரை வசித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில்தான் இந்தக் கட்டிடத்தைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்றிருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட ஆறு நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்திருக்கின்றனர்.

இப்போதுவரை, இந்தத் தீ விபத்துக்கு உறுதியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறது தீயணைப்பு படை. இந்தச் சம்பவத்தை நாட்டின் பெரும் விபத்தாக அறிவித்திருக்கிறார் லண்டன் மேயர் சாதிக் கான்.

நிராகரிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்

இந்தக் கட்டிடத்தின் குடியிருப்பாளர் சங்கமான ‘கிரென்ஃபெல் செயல் குழு’ (Grenfell Action Group) தீ விபத்து பற்றிய எச்சரிக்கையைப் பலமுறை வாடகைதாரர்கள் மேலாண்மை நிர்வாகத்திடம் தெரிவித்தாகச் சொல்கிறது. ஆனால், அவர்களுடைய எச்சரிக்கைகளை அந்த நிர்வாகம் அலட்சியப்படுத்தியாகச் சொல்கிறார்கள் கிரென்ஃபெல் குடியிருப்புவாசிகள்.

இந்தத் தீ விபத்தில் தப்பித்த குடியிருப்புவாசிகள், கட்டிடத்தில் ஆபத்து நேரத்தில் வெளியேறுவதற்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருப்பதைப் பற்றி உரியவர்களின் கவனத்துக்குப் பலமுறை எடுத்து சென்றிருக்கின்றனர். அவர்கள் ‘கென்சிங்டன் செல்சி வாடகைதாரர்கள் மேலாண்மை நிர்வாக’த்திடம் (KCTMO) கட்டிடத்தின் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களின் போதாமையைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கொதிகலன்கள் - எரிவாயு குழாய்கள், தீ எச்சரிக்கைக் கருவிகள், நீர் தெளிப்பான் அமைப்புகள் போன்றவை போதிய எண்ணிக்கையில் இல்லாமல் இருந்தது, கட்டிடத்துக்குள் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் போன்றவை தீ விபத்தின்போது பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிர்வாகத்திடம் குடியிருப்புவாசிகள் முறையிட்டிருக்கின்றனர்.

தீ எப்படி அவ்வளவு வேகமாக 24 மாடிகளுக்கும் பரவியது என்பது பற்றிய முதல்கட்ட விசாரணை நடந்துவருகிறது. கட்டிடம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டபோது அமைக்கப்பட்ட புதிய ‘வெப்ப உறைப்பூச்சு அமைப்பின்’ (thermal cladding system) வழியாகத்தான் தீ எல்லா மாடிகளுக்கும் பரவியிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம், கிரென்ஃபெல் செயல் குழு இந்தக் குடியிருப்பு ஆபத்தான நிலையில் இருப்பதைப் பற்றி இப்படி ஓர் எச்சரிக்கை விடுத்திருக்கிறது:

“இது உண்மையிலேயே அச்சமூட்டும் எண்ணம்தான். ஆனால், ஒரு பேரழிவு நிகழ்ந்தால் எங்களுடைய கட்டிட உரிமையாளர், ‘கேசிடிஎம்ஓ’வின் திறமையின்மையும் தகுதியின்மையும் வெளிப்படும் என்று கிரென்ஃபெல் செயல் குழு நம்புகிறது”.

அதே மாதம், ‘கேசிடிஎம்ஓ’ பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை மறுபரிசீலனை செய்திருக்கிறது. அத்துடன், பலவிதமான மாற்றங்களையும் தீ ஆபத்தைக் கையாள்வதற்கு வழங்கியிருக்கிறது.

இந்தப் பேரிடர், உலகம் முழுவதிலுமுள்ள தொழில்முறைக் கட்டிட வல்லுநர்களை வெப்ப உறைப்பூச்சு அமைப்பைக் கட்டிட புதுப்பித்தலுக்குப் பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யவைத்திருக்கிறது. ‘காவல் மற்றும் தீயணைப்புத் துறை’ அமைச்சர் நிக் ஹர்ட், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டுமானத் திட்டங்கள் அனைத்தையும் சரிபார்க்க உத்தரவிட்டிருக்கிறார்.

‘கிரென்ஃபெல் டவரின்’ உறைப்பூச்சு அமைப்பை ஆய்வுசெய்வதுடன், எரிவாயுக் குழாய்கள் தீ பரவலைத் தீவிரமடையச் செய்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. கட்டிடத்தைப் புதுப்பிக்கும்போது பாதுகாப்புக்காகவும் தோற்றத்துக்காகவும் அமைக்கப்பட்ட புதிய பாலியஸ்டர் அலுமினிய முகப்பும் தீ வேகமாகப் பரவியதற்குக் காரணம் என்று தீயணைப்பு வீரர்களும் நிபுணர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

“இந்த அளவுக்கு மோசமான தீ விபத்தை பிரிட்டன் இதுவரை பார்த்ததில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள் அனைத்தும் இந்தக் கட்டிடத்தில் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தவேண்டும். வெளியில் இருந்து பார்க்கும் எனக்கு இந்தக் கட்டிடத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது” என்கிறார் டேவிட் கேமரூன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் தீயணைப்புத் துறை அமைச்சர் மைக் பென்னிங்.

கடந்த மார்ச் மாதம், ‘கேசிடிஎம்ஓ’ குழுவில் இடம்பெற்றிருந்த உள்ளூர் கவுன்சிலர் ஜூடித் பிளாக்மேன், எரிவாயுக் குழாய்கள் முக்கிய மாடிப்படிக்கட்டுகளில் அமைக்கப்பட்டிருப்பது பற்றிய கிரென்ஃபெல் குடியிருப்புவாசிகளின் அச்சத்தை எடுத்துரைத்திருக்கிறார். ஆனால், அந்தக் கட்டிட உரிமையாளர், தீ பாதுகாப்பு அம்சங்களுடன்தான் குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று அவரிடம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் ஒரு பாதுகாப்புத் தீர்ப்பாயம் அமைத்து இந்தக் கட்டித்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சொல்லியிருக்கிறார் அவர்.

ஆனால், அவரது பரிந்துரைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. “இந்தக் கட்டிடத்தின் தனிப்பட்ட குடியிருப்புவாசிகளின் சார்பாக அவர்கள் அளித்த 19 புகார்களைப் பற்றிப் பேசினேன். நான் ஏதோ தொல்லை கொடுப்பதாக ‘கேசிடிஎம்ஓ’ குழு நினைத்தது. ஒவ்வொரு தடவையும் கட்டிடத்தின் தீ பாதுகாப்பைப் பற்றி எச்சரிக்கை விடுத்தபோது, அந்தக் குழு பாதுகாப்பு அம்சங்கள் திருப்தியாக இருப்பதாகவே தெரிவித்தது” என்கிறார் ஜூடித் பிளாக்மேன்.

“இந்தக் கட்டிடத்தைப் புதுப்பிக்கும் பணி தொடங்கியதிலிருந்தே குடியிருப்புவாசிகள் பயத்துடன்தான் வசித்துவந்தனர். கட்டிடத்துக்கு ஒரேயொரு நுழைவாயில் இருப்பதைப் பற்றி அவர்கள் தொடர்ந்து தங்களுடைய கவலையைப் பதிவுசெய்துவந்தனர். எல்லோருக்கும் கேட்கும்படியான தீ எச்சரிக்கைக் கருவிகள் அமைக்கப்படவில்லை என்பதைப் பற்றியும் அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இது மிகவும் மோசமான ஒரு விபத்து” என்று சொல்லியிருக்கிறார் கவுன்சிலர் லஷாரி.

© தி கார்டியன்,
சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x