Last Updated : 11 Oct, 2014 12:55 PM

 

Published : 11 Oct 2014 12:55 PM
Last Updated : 11 Oct 2014 12:55 PM

நில நடுக்கத்தைத் தாங்குமா அடுக்குமாடிக் குடியிருப்புகள்?

நகரங்களில் வசிப்போரின் வீட்டுத் தேவையை வானளாவ உயர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளே பூர்த்திசெய்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்பைச் சொந்தமாக்கும் பொருளாதார வளம்பெற்றிருப்பவர்கள் கண்டிப்பாக கார் வைத்திருக்கிறார்கள். எனவே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படும்போதே அதில் குடியிருப்பவர்களின் காரை நிறுத்த வசதி செய்துதர வேண்டியுள்ளது. ஆனால், அதற்காகத் தனியிடம் ஒதுக்குவது நிலமதிப்பு தாறுமாறாக உயர்ந்து காணப்படும் இடங்களில் அதிகச் செலவு பிடிக்கக்கூடியது.

எனவே, அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில் காரை நிறுத்தத் தேவையான வசதிகளைச் செய்துவிடுகிறார்கள் கட்டுமான நிறுவனத்தினர். முதல் தளத்திலிருந்துதான் குடியிருக்கும் வீடுகள் அமைக்கப்படுகின்றன. பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளின் தரைத்தளம் வாகனங்களை நிறுத்துமிடமாகவே செயல்படுகின்றன. இது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது ஆனால் பாதுகாப்புக்கு நன்றாக உள்ளதா என்று யோசித்திருக்கிறீர்களா? இல்லை என்கிறது தேசியப் பேரிடம் மேலாண்மை ஆணையம்.

என்ன அச்சமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளதா? இது உண்மைதான். எனினும் சாதாரணமான சமயங்களில் ஏதேனும் நடந்துவிடுமோ என அச்சப்படத் தேவையில்லை. ஆனால் நில நடுக்கம் வரும் வேளையில் இத்தகைய அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆபத்தானவையே. இதனால் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலநடுக்கத்தின்போது பாதிக்கப்படாத கட்டிடங்களை உருவாக்கத் தேவையான விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இது குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும் வலுவற்ற அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தனியார் கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், வங்கிகள் போன்றவற்றைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசிய செயல் திட்டம் ஒன்றையும் மேற்கொள்ளப்போகிறது.

நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் பாதிக்கப்படாமலிருக்க எப்படிக் கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்பது தொடர்பான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளை ஐஐடி கல்வி நிறுவனங்கள், அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு உருவாக்கியுள்ளது. இந்தக் குழு தரைத்தளத்தில் வாகன நிறுத்தமும் அதன்மேலே உள்ள தளங்களில் வீடுகளும் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டிடங்களும் ஆபத்தானவை என எச்சரித்துள்ளது.

நகர்ப் புறங்களின் குடியிருப்புப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடப் பிரச்சினையைச் சமாளிக்க கட்டிட வடிவமைப்பாளர்கள் தரைத்தளத்தில் வாகன நிறுத்தத்தை அமைத்துவிடுகிறார்கள். ஆனால் இப்படி அமைக்கும்போது நிலநடுக்கத்தை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை என்று தெரிவிக்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இப்படிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் நிலநடுக்கத்தை எதிர்த்து நிற்கும் பலமின்றிப் படபடவெனச் சரிந்துவிடுகின்றன என்கிறது.

2001-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பல கட்டிடங்கள் இடிந்துவிடிந்து தவிடுபொடியாயின. இப்படிப் பாதிக்கப்பட்ட பல கட்டிடங்கள் தரைத்தளத்தில் வாகன நிறுத்தங்களையும் அதன் மேல் குடியிருப்புப் பகுதிகளையும் கொண்டிருந்தன என்பதையும் நிலநடுக்கத்தைச் சமாளிக்கும் வகையிலான கட்டிடங்களைக் கட்டும்போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்கிய தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

குஜராத் பூகம்பத்தின் போது தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடங்களைக் கொண்ட அரசுக் கட்டிடங்கள் பாதிக்கப்படவில்லை என்பதையும் அந்தக் குழுவினர் நினைவுபடுத்துகிறார்கள். ஏனெனில் இவை பூகம்பத்தை எதிர்த்து நிற்கத் தேவையான விதிமுறைகளின்படி கட்டப்பட்டவை என்கிறார்கள் அவர்கள்.

ஆகவே நிலநடுக்கத்தின்போது எளிதில் பாதிக்கப்படாமல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைய வேண்டுமானால் அவை தேசியப் பேரிடம் மேலாண்மை ஆணையம் பரிந்துரைக்கும் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியமாகிறது. இனி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் முன்னர் அந்த அடுக்குமாடிக் கட்டிடம் இந்த விதிமுறைகளின் படி கட்டப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x