Published : 28 Jan 2017 08:31 AM
Last Updated : 28 Jan 2017 08:31 AM
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒளிப்படங்களை அச்சடித்து அழகு பார்ப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. அதனால் பெரும்பாலான ஒளிப்படங்கள் ஸ்மார்ட்போன்களையும் கணினிகளையும் மட்டுமே அழகுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒளிப்படங்களை அச்சடிப்பது பழங்கதையாகிவிட்டது என்று பலரும் நினைப்பதுதான் அதற்குக் காரணம். ஆனால், குடும்பத்தின் அழகான தருணங்களை விவரிக்கும் ஒளிப்படங்களை அச்சடித்து வீட்டில் விதவிதமான முறைகளில் பார்வைக்கு வைப்பது இப்போது பிரபலமாகி வருகிறது. ஒளிப்படங்களால் வீட்டை அலங்கரிப்பதற்கான முறைகள்:
கண்ணாடிக் குடுவைகள்
மனதுக்கு நெருக்கமான குடும்ப ஒளிப்படங்களைத் தனித்தனியாக கண்ணாடி குடுவைகளில் போட்டுவைக்கலாம். இது வீட்டுக்கு வரும் விருந்தினர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கும். அத்துடன், ஒளிப்படங்களைப் பொம்மைகளின் கைகளிலும் நடுவிலும் வைக்கலாம்.
கூடைகள், கிண்ணங்கள், தட்டுகள்
வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி ஒன்றுகூடி பேசும் இடங்களில் ஓர் அழகான கூடையிலோ, கிண்ணத்திலோ, தட்டிலோ ஒளிப்படங்களைச் சேகரித்துவைக்கலாம். விருந்தினர்களும் நண்பர்களும் வீட்டுக்கு வரும்போது அவர்களுடன் ஒளிப்பட நினைவுகளில் மூழ்குவதற்கு இது உதவும்.
கண்ணாடிச் சட்டகம்
நீங்கள் தினமும் பார்த்து ரசிக்க நினைக்கும் ஒளிப்படங்களை நிலைக்கண்ணாடியில் ஓரங்களில் செருகிவைக்கலாம். ஒருவேளை, உங்களுடைய கண்ணாடியில் அந்த வசதியில்லை என்றால் ‘ப்ளு டேக்’ (Blue - Tack) போட்டு ஒட்டிவைக்கலாம். இதை எளிமையாகக் கண்ணாடியிலிருந்து நீக்கமுடியும்.
வாசிப்பு அறை சுவர்
வாசிப்பு அறை மேசைக்கும் மேல் ஒரு பலகையை அமைத்து, அங்கேயும் ஒளிப்படங்களை ஒட்டிவைக்கலாம். உங்களுடைய வாழ்க்கையின் உத்வேகமான தருணங்களைக் கொண்ட ஒளிப்படங்களை இந்தப் பலகையில் காட்சிப்படுத்தலாம்.
காந்தப் பலகைகள்
வீட்டில் ஒரு காந்தப் பகுதியை உருவாக்கி ஒளிப்படங்களை அதில் காட்சிக்கு வைக்கலாம். அடிக்கடி ஒளிப்படங்களை மாற்ற நினைப்பவர்கள் இந்த வழியைப் பின்பற்றலாம். காந்தப் பலகைகள், காந்தக் கைப்பிடிகள் போன்றவற்றை இதற்குப் பயன்படுத்தலாம். நிறைய குடும்ப ஒளிப்படங்களைக் காட்சிக்கு வைக்க நினைப்பவர்கள் தேவையான காந்தப் பலகைகளை வாங்கி இணைத்துக்கொள்ளலாம். இந்தக் காந்தப் பலகைகள் ‘ஆன்லைன் ஷாப்பிங்’ தளங்களிலேயே கிடைக்கின்றன.
பழைய சட்டகங்கள்
கண்ணாடி இல்லாத பழைய சட்டகங்களைத் தூக்கிப்போடாமல் அவற்றைச் சுவரில் பொருத்தி ஒளிப்படங்களை வைக்கலாம். இந்தச் சட்டகங்களை வித்தியாசமான கோணங்களில் சுவரில் பொருத்தி அதையே ஓர் அலங்காரமாக மாற்றிவிடலாம்.
காஃபி மேசை
உங்களுடைய வீட்டில் கண்ணாடி காஃபி மேசையிருந்தால் அதையும் ஒளிப்படங்களை வைப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். காஃபி மேசையின் கண்ணாடிக்கு அடியில் ஒளிப்படங்களை வைக்கலாம். இந்த ஒளிப்படங்களெல்லாம் ஒரே கருப்பொருளில் இருப்பது இன்னும் நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT