Last Updated : 30 Jul, 2016 12:11 PM

 

Published : 30 Jul 2016 12:11 PM
Last Updated : 30 Jul 2016 12:11 PM

நகரங்களின் கதை: ஆஹாவென்று எழும் பாலஸ்தீன நகரம்- ரவாபி

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மையத்தில் இருக்கிறது பாலஸ்தீனத்தின் ரவாபி நகரம். திட்டமிட்டு உருவாக்கப்படும் முதல் பாலஸ்தீனத்தின் நகரம் என்னும் பெருமை கொண்ட நகரம். தனியார் நிறுவன நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுவருகிறது. முற்றுகைக்குள்ளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கைகொள்ளச் சிறு வெளிச்சமே இந்த நகரம் என்றும் கருதப்படுகிறது.

அரை நூற்றாண்டு கால இஸ்ரேல் ராணுவ ஆட்சி, எவ்வளவோ தடைகள், விமர்சனங்களுக்கு மத்தியிலும் ரவாபி நகரக் கட்டுமானம் இந்த அளவுக்கு வந்திருக்கிறது என்றால் இந்தத் திட்டத்தின் காரணகர்த்தாவும் நிறுவனரும் உந்துசக்தியுமான பஷார் அல்-மஸ்ரியின் தொலைநோக்குச் சிந்தனைக்கு அதுதான் சான்று.

ஜராதத் இந்த நகரத்தைத் தனது தாய்வீடாக மாற்றிக்கொண்டுவிட்டார். ஜராதத்: இளமையானவர், பெண், படித்தவர், வேலைபார்ப்பவர், சுதந்திரமானவர் ரவாபி நகரை மறுதீர்மானம் செய்யும் பொறியாளர்களில் ஒருவர். ரவாபி: புதியது, நவீனமானது, தூய்மையானது, உயர்தர வடிவமைப்பு, அதிநவீனத் தொழில்நுட்பம். ஜராதத்தும் ரவாபியும் கடந்த காலத்திலிருந்து துண்டித்துக்கொண்டதன் அடையாளங்கள். ஆனால், அவர்களின் நிகழ்காலமோ தொடர்ச்சியான வன்முறைகளாலும் அரசியல்ரீதியிலான பிடிவாதங் களாலும் முடங்கிக் கிடக்கிறது.

ரவாபி என்றால் அரபியில் ‘குன்றுகள்’ என்று அர்த்தம். 2012-ல் இரண்டு குடியிருப்புகள் முதலில் கட்டி முடிக்கப்பட்டன. மொத்தம் 700 அடுக்ககங்கள் இதுவரை விற்கப்பட்டிருக்கின்றன. கடந்த இலையுதிர்காலத்தில் அவற்றின் முதல் குடியிருப்பாளர்கள் வந்து குடியேறிவிட்டார்கள். ரவாபியின் மையப்பகுதியில் 25 ஆயிரம் பேர் குடியேறக்கூடும். எதிர்காலத்தில் அந்த மக்கள்தொகை 40 ஆயிரமாகவும் உயரலாம்

கடல் காட்டும் குடியிருப்புகள்

நகரக் கட்டமைப்புகளைத் திட்டமிடுபவர்களின் கனவு நகரமாக ரவாபி இருக்கிறது. இரைச்சலும் குப்பையும் குழப்பமுமாக நிரம்பி வழியும் பெரும்பாலான பாலஸ்தீன நகரங்களுக்கு நேரெதிர் ரவாபி. மேற்குக் கரையில் உள்ள, பைபிளில் இடம்பெற்றிருக்கும் பல பிரதேசங்களைக் காணக்கூடிய வகையில் பல அடுக்ககங்கள் இங்கே கட்டப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்துக்கு அப்பால், அதாவது 25 மைல் தொலைவில் மத்தியத்தரைக்கடல் பளபளத்துக்கொண்டிருப்பதை ரவாபின் மிக உயரமான கட்டிடங்கள் சிலவற்றின் உச்சியிலிருந்து பார்க்க முடியும்.

மரம், செடிகொடிகளைக் கொண்ட நடைபாதைகள், சமூகப் பூங்காக்கள், சதுக்கங்கள் போன்றவற்றால் இங்குள்ள அடுக்ககப் பிரிவுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. வாகனங்கள் வெளிப்புறச் சாலைகளைத் தாண்டி அனுமதிக்கப்படுவதில்லை. நிலத்தடி கார் பார்க்கிங் வசதியும் உண்டு. மின்வசதியும் தொலைத்தொடர்பு வசதியும் நிலத்தடியில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடி இழைக் கம்பிகள் மூலம் வழங்கப்படுகின்றன. குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்கள், வெளிப்புற உடற்பயிற்சி அமைப்புகள், பெஞ்சுகள் போன்றவை ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அடுக்ககங்கள் அதிநவீனமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நவீன சமயலறைகள், அதற்கேற்ற பிரத்யேக வீட்டு வசதி சாமான்கள், டைல்கள் பதிக்கப்பட்ட தரை, சுவரில் பதிக்கப்பட்ட மின்விளக் கமைப்புகள், குப்பைகளை யாரும் காண முடியாதவாறு கொட்டி வைப்பதற்கென்ற சமூகக் கிடங்குகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். மைய அமைப்பொன்றிலிருந்து வெப்பமோ குளிர்சாதன வசதியோ வழங்கப்படுகிறது. ஒவ்வோர் அடுக்கக வீட்டிலும் பால்கனியோ மாடியோ இருப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டு வடிவமைப்பில் கிட்டத்தட்ட நூறு விதங்கள் பின்பற்றப்பட்டிருக்கின்றன.

மிகச் சிறிய இரண்டு படுக்கையறை வீடுகள் ஒவ்வொன்றும் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 40 லட்சத்துக்குக் கிடைக்கின்றன. நான்கு படுக்கையறை வீடுகளின் விலை சுமார் ரூ. 1 கோடி. அருகிலுள்ள நெரிசல் மிகுந்த ரமல்லாஹ் நகரத்துடன் ஒப்பிடும்போது ரவாபியின் புதிய வீடுகளின் விலை 25 சதவீதம் குறைவே.

ரவாபியின் வைரக் கல்

ரவாபியில் உருவாக்கப்பட்டிருக்கும் வணிக மையத்தில் சில்லறை விற்பனைக் கூடங்கள், சிற்றுண்டி விடுதிகள், உணவகங்கள் போன்றவற்றுக்கான இடங்கள் காலியாகவே கிடக்கின்றன. “இங்கே வந்து தங்கள் விற்பனையகங்களைத் தொடங்கும்படி மேங்கோ, ஜாரா போன்ற சர்வதேச நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், யாரும் இன்னும் வரவில்லை” என்கிறார் ஜராதத். விசாலமான அலுவலக இடம், குழந்தைகள் பராமரிப்பகம், ஏழு திரைகளைக் கொண்ட திரையரங்கம், கூட்டங்கள் நடத்துவதற்கான மையம், உணவகம் என்றெல்லாம் அந்த வணிக மையம் இருந்தாலும் சீந்துவார் யாருமில்லை.

வழிபாட்டுக்காக நிறைய மசூதிகளும் ஒரு தேவாலயமும் இங்கே உண்டு. புறநகர்ப் பகுதியில் தொழில் மையமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஒரு பள்ளிக்கூடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னொன்றும் கட்டப்படுகிறது.

அடுத்ததுதான் ரவாபியின் வைரக் கல், 12 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும்படியாக குன்றின் சரிவில் அமைக்கப்பட்டிருக்கும் விசாலமான, அற்புதமான திறந்த வெளி அரங்கம். சர்வதேசக் கலைஞர்கள் அங்கே தங்கள் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள் என்றும் அதன் மூலம் ரவாபிக்கு மேலும் பல மக்கள் வருவார்கள் என்றும் கட்டப்பட்ட அரங்கம் அது.

பாலஸ்தீனருக்கான நகரம்

பாலஸ்தீன-அமெரிக்கரும் தொழில்முனைவோருமான பஷார் அல்-மஸ்ரி ரவாபி திட்டத்தை 2007-ல் தொடங்கியதிலிருந்து அவருக்கு ஓய்வு ஒழிச்சலே இல்லை எனலாம். மேலும், “சர்வதேசச் சமூகத்துக்கு ரவாபி ஒரு செய்தியைச் சொல்கிறது. அவர்கள் நம்பவைக்கப்பட்டதுபோல் நாங்கள் ஒன்றும் தீவிரவாதிக் கூட்டம் இல்லை; எங்களால் எங்களுக்கென்று தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும். அதற்கு நிரூபணம் இங்கே இருக்கிறது” என்கிறார் மஸ்ரி.

2015-ல் ரவாபி பெரும் தண்ணீர் பிரச்சினை ஒன்றைச் சந்தித்தது. மேற்குக் கரையின் தண்ணீர் ஆதாரங்களை இஸ்ரேல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. 1993-ம் ஆண்டு ஆஸ்லோ ஒப்பந்தத்தின்படி ‘தண்ணீர் பிரச்சினைக்கான கூட்டுக் குழு’ அமைக்கப்பட்டது. மேற்குக் கரைக்கான தண்ணீர் விநியோகத்தை பாலஸ்தீனத் தரப்புக் குழு ஒதுக்கீடு செய்தாலும் எந்த அளவுக்கு நீர் தருவது என்பதை இஸ்ரேல்தான் தீர்மானிக்கிறது.

அப்படி இக்கட்டான சமயத்தில்தான் முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர், அரசியல்ரீதியிலான தடைகள் பலவற்றை அகற்றுவதில் உதவினார். இப்போது தண்ணீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட்டாலும் எதிர்காலத்தில் அது பெரும் பிரச்சினையாக ஆகக்கூடும்.

இன்னொரு பிரச்சினை, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வழியாகக் கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டுசெல்வது பெரும் சிரமமே. சாலைகளும் இல்லை. ஐ.நா.விடம் பேசி சாலை வசதிகள் ஏற்படுத்திக்கொண்டாலும் அதற்கான அனுமதியை இஸ்ரேலிடம் ஒவ்வோர் ஆண்டும் புதுப்பித்துக்கொண்டாக வேண்டும். இதற்கிடையே, 2015 அக்டோபரிலிருந்து 2016 மார்ச் வரையிலான தாக்குதல்களில் 200 -க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் 30-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற போர்ச்சூழலுக்கு இடையேதான் இந்த நகரம் கட்டியெழுப்பப்படுகிறது.

“பாலஸ்தீனர்களுக்காகவே முதன்மையாக வடிவமைக்கப்பட்ட நகரம் இது. இங்குள்ள குன்றில் ஏறி நின்றுகொண்டு இதைப் பார்க்கும் எங்கள் மக்கள் ‘ஆஹா! இது எங்களுக்கானது’ என்று கூவுவார்கள்” என்கிறார் மஸ்ரி.

தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x