Published : 06 May 2017 10:25 AM
Last Updated : 06 May 2017 10:25 AM

ஐந்து நாட்களில் பிளாஸ்டிக் வீடு

மாற்றுக் கட்டுமானப் பொருள்களுக்கான காலம் இது. மணல், ஜல்லி, கட்டுமானக் கல் என எல்லாவற்றிலும் மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. சிமெண்டுக்கு மாற்று வரவில்லை. ஆனால் இரும்பைக் கட்டுமானப் பொருளாகக் கொண்டு கட்டிடங்கள் எழுப்பும் தொழில்நுட்பம் மேற்குலக நாடுகளில் பரவலாகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மரங்களை வைத்து வீடு கட்டும் வழக்கம் இருந்துள்ளது.

இன்றைக்குச் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவகையில் வீடு கட்டுவது, அருகிலேயே கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வீடு கட்டுவது ஆகிய இரு அம்சங்களை முன்வைத்து பசுமைக் கட்டிடக் கலை உலகமெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் மறு உபயோகப்படுத்துவதும் முக்கியமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது. இந்த அடிப்படையில் பிளாஸ்டிக் கட்டுமானக் கற்களைக் கொண்டு கொலம்பியாவில் ஐந்தே நாட்களில் அகதிகளுக்காக வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள்.

கொலம்பியாவைச் சேர்ந்த ஃபெர்ணாண்டோ லல்னாஸ் தனக்காக ஒரு வீட்டைக் கட்டத் தீர்மானித்திருக்கிரார். ஆனால் ஊரின் ஒதுக்குப் புறமாக இருந்த அந்த இடத்துக்கு வீடு கட்டத் தேவையான கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்வது சிரமமாக இருந்தது. அதாவது வீடு கட்டுவதற்குத் தேவையான அளவைக் காட்டிலும் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டி வரும் எனக் கருதினார். அதனால் வேறு பல வழிகளை யோசித்தார். முயன்று தோல்வியடைந்தார். அந்தச் சமயத்தில்தான் பிளாஸ்டிக் கட்டுமானக் கற்களைக் கொண்டு வீடு கட்டும் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்தார். அந்தத் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற கட்டிடவியல் அறிஞர் ஆஸ்கார் மெண்டஸ் பற்றிக் கேள்விப்படுகிறார். அவரைத் தொடர்புகொண்டு தனக்காக வீடு கட்டித் தரும்படி கேட்டார்.

ஆஸ்கார் ஃபெர்ணாண்டோ இணையின் முயற்சியில் வீட்டுப் பணி தொடங்கப்பட்டது. பணி தொடங்கியது என்றால் இங்கே நமது நாட்டில் பூமி பூஜை போட்டுவிட்டு மாதக் கணக்காக வீட்டைக் கட்டுவது போல் அல்ல. வீட்டுப் பணி தொடங்கிய நான்காம் நாள் பணி முடிவடைந்துவிட்டது. நான்கு நாட்கள் அந்த ஊரில் இல்லாதவர்கள் பார்த்தால் ஏதோ தெய்வச் செயல் என அதிசயத்துப் போவார்கள். அந்த அளவுக்கு நேர்த்தியாகக் கட்டி முடித்துவிட்டார்கள்.

பழைய பிளாஸ்டிக் கழிவுகளை அருகில் உள்ள பிளாஸ்டிக் மறு சுழற்சி ஆலைகளில் கொடுத்து வேண்டிய அளவுக்குத் திடப்படுத்திக் கொண்டார்கள். செங்கற்கள் போல் அல்லாமல் இந்த பிளாஸ்டிக் கல் ஒன்றின் மேல் ஒன்று பொருந்திக்கொள்வதைப் போல வடிவமைத்தார்கள். அதனால் சிமெண்டுக்கான தேவையே இல்லை. வேலையும் குறையும். அதாவது சிறுவர்கள் வீடு கட்டி விளையாடும் பிளாக்ஸ் (Blocks) போல இந்த பிளாஸ்டிக் கல் இருக்கும்.

இப்படியாக உருவாக்கப்படும் இந்த பிளாஸ்டிக் கல் எடையும் குறைவு. அதனால் கையாள்வது எளிது. மேலும் எடை குறைவாக இருக்கிறது என இதன் உறுதித் தன்மையைச் சந்தேகிக்கலாம். ஆனால் இது பூகம்பம் தாங்கும் திறன் கொண்டது. அடை மழை, கடும் வெயிலையும் தாக்குப் பிடிக்கக்கூடியது. கொலம்பியாவின் இந்தக் குறிப்பிட்ட பகுதி அடிக்கடி பூகம்பங்கள் நிகழும் பகுதியாக இருப்பதால் அதற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை இந்த பிளாஸ்டிக் கற்கள். மின்சாதரத்தையும் கடத்தா தன்மை கொண்டது.

இந்த பிளாஸ்டிக் கட்டுமானக் கல்லைக்கொண்டு ஆஸ்கார் மெண்டஸ் ஐந்து நாட்களில் இந்த வீட்டைக் கட்டிவிட்டார். இரு படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை கொண்ட இந்த வீட்டை உருவாக்கப் பணியாளர்கள் நால்வரின் உழைப்பு தேவைப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிளாஸ்டிக் கல் வீட்டுக்கான அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாக ஆஸ்கர் மெண்டஸ் கூறியிருக்கிறார். நார்வே அகதிகளுக்கான குடியிருப்பை 15 பேரை வைத்து 28 நாட்களுக்குள் கட்டி முடித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x