Last Updated : 15 Mar, 2014 12:00 AM

 

Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM

சொந்த மண்ணில் என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன்!

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கிறார்களா? அந்த நாட்டில் நீண்டகால அடிப்படையில் பணி புரிகிறார்களா? அவர்கள் இந்தியாவில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு விரும்புகிறார்களா? இதற்கெல்லாம் உங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு வீட்டுக் கடன் வசதி வழங்க வங்கிகளும் தேசிய வீட்டு வசதி வங்கியால் (national Housing Bank) அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களும் காத்திருக்கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கி இதற்குப் பொது அனுமதி வழங்கியுள்ளது.

ஒரே மாதிரியான விதிமுறைகள்

வீட்டுக் கடன் தொடர்பான பெரும்பான்மை யான விதிமுறைகள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் (என்.ஆர்.ஐ) உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் நிபந்தனை.

உதாரணமாக மார்ஜின் தொகை என்பது (அதாவது வீட்டு மதிப்பில் 15 முதல் 20 சதவீதம் வரையிலான தொகை), எவ்வளவு காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தலாம் என்பது (சாதாரணமாக 5 முதல் 25 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவது) மற்றும் வட்டி விகிதம் ஆகியவை வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அவ்வப்போது ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி விகிதத்துக்குத் தகுந்தபடி கடனுக்கான வட்டி விகிதம் அமையும். என்.ஆர்.ஐ.கள் இந்தியாவுக்கு விடுப்பில் வரும் போது வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்

என்.ஆர்.ஐ.கள் தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல், எந்த நாட்டில், எந்தப் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்றிதழ், சம்பளச் சான்றிதழ், இந்தியாவில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு(என்.ஆர்.இ./எஃப்.சி.என்.ஆர்./என்.ஆர்.ஓ.) விவரங்கள் தேவை. இவை தவிர உள் நாட்டு வாடிக்கையாளர்கள் போலவே, என்.ஆர்.ஐ.களும் கீழ்க்கண்ட ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

#மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)

#தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)

#13 ஆண்டு காலத்துக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி.)

#சட்ட வல்லுநரின் அறிக்கை (லீகல் ஒபினியன்)

#விலை மதிப்பீடு அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்)

# உரிய அதிகாரிகளால் (சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி. அதிகாரிகள்) வழங்கப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல் மற்றும் கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு அறிக்கை ஆகிய வழக்கமான ஆவணங்களை வங்கியில் தாக்கல் செய்ய வேண்டும்.

கடனை அடைப்பது எப்படி?

இந்தக் கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்கு, வெளிநாடுகளில் இருந்து அந்நியச் செலாவணி, வங்கிகள் வாயிலாக வர வேண்டும். அல்லது கடன் பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியரின் என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். அல்லது என்.ஆர்.ஓ. கணக்கிலிருந்து செலுத்த வேண்டும். இந்தக் கணக்குக்கு அடமானமாக வைக்கப்பட்ட வீட்டின் மூலம் வாடகை வருமானம் வருமேயானால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அந்த வாடகைப் பணத்தைப் பயன்படுத்தலாம்.

வீடு கட்டுவதற்கும் வீடு வாங்குவதற்கும் மட்டுமே வங்கிக் கடன் கிடைக்கும் என என்.ஆர்.ஐ.கள் கருத வேண்டாம். அவர்களுக்குத் தேவையானால் ஏற்கெனவே இருக்கும் தங்களுக்குச் சொந்தமான வீடுகளைப் பழுது பார்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும், விரிவுப்படுத்துவதற்கும்கூட வங்கிகளிடம் இருந்தும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களிடம் இருந்தும் கடனுதவி பெற்றுப் பயனடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x