Published : 11 Feb 2017 09:41 AM
Last Updated : 11 Feb 2017 09:41 AM
என் மகன் வீட்டிற்குச் சென்ற பொழுது பேரனோடு கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். அழகான வண்ணங்களுடன் கூடிய படங்கள் நிறைந்த கதைகளின் தொகுப்பு அந்த புத்தகம். உயரமான மரத்தின் நடுவே ஒரு குட்டியான அழகான மர வீடு. அதில் ஏறுவதற்குக் கயிறால் ஆன ஏணி. மிகவும் நீளமான ஏணி காற்றில் ஆடுவது போல் இருக்கும்.
நண்பர்கள் இருவரும் அதில் ஏற, காற்றினால் கயிறு ஏணி ஆட, பயந்து சிறுவர்கள் கதற, தேவதை அங்கு வந்து அவர்களை ‘சர்…’ என்று தூக்கிக் கொண்டு போய் மர வீட்டில் வைப்பது போல் கதை தொடரும். இதைப் படித்துக் காட்டியவுடன் என் பேரன் “பாட்டி நீ இது போல் எனக்கு ஒரு மர வீடு கட்டிக் கொடு. ஆனா ஏணி இவ்வளவு உயரமா இருக்க வேண்டாம் ப்ளீஸ்…” என்று கண்ணில் ஆவல் பொங்க என்னைக் கெஞ்சினான்.
தேவதை வீட்டுக்கான தேடல்
ஊர் திரும்பியதும் என் பேரன் கேட்டது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. துரிதமாகச் செயல்பட ஆரம்பித்தேன். ஆனால் லேசில் நடக்கவில்லை. இருந்தாலும் மனம் தளரவில்லை.தெரிந்த, தெரியாத தச்சர்களை விசாரித்தேன். மரங்களைப் பார்த்தே நடக்க ஆரம்பித்தேன். ஆசாரிகளும், மற்றவர்களும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். யாரும் லேசில் இந்த வேலையை ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இருக்கும் வேலைப் பளுவில் இது ஒரு துக்கடா சமாச்சரம். காசும் பார்க்க முடியாது. எல்லோரும் தட்டிக் கழித்தார்கள். இருந்தாலும் ‘நான் விட்டேனா பார்’ என்று ஒரு முடிவில் இருந்தேன்.
முதலில் மர வீடு எங்கு கட்டுவது, எப்படிக் கட்டுவது, பட்ஜெட் எவ்வளவு என்று அடுக்கடுக்கான வினாக்கள். என் வீட்டின் பின்பகுதியில் என் 85-வயது அம்மா 7 வருடங்களுக்கு முன் நட்ட மாங்கன்று தழைத்தோங்கி வளர்ந்திருந்தது. இடம் தேர்வாகிவிட்டது.
வடிவமைப்பு தயார்
அடுத்து அமைப்பு, பி.ஆர்க். (B.Arch) படிக்கும் என் என் சகோதரியின் மகள் எனது தொணதொணப்பு தாங்காமல், ஒரு மர வீடு வடிவமைப்பை அனுப்பி இருந்தாள்.
அடுத்து தச்சர்களுடன் கலந்தாலோசனை. அவர் மரம் சிறியது, பாரம் தாங்காது என்றார். குழந்தைகள் மட்டுமே ஏற அனுமதி என்றார். நூல் ஏணி சாத்தியமில்லை என்றார். இப்படி நிபந்தனைகள் மேல் நிபந்தனைகள் போட்டார். எல்லாவற்றிற்கும் சம்மதித்து வேலை ஆரம்பமானது. எனக்குள் ஒரு குதூகலம், கொண்டாட்டம் என் சேமிப்பு கரைந்தது. முட்டுக் கட்டை போடும் கணவரிடம் சாக்குப் போக்கு சொல்லி தாஜா செய்து அவரையும் இணங்க வைப்பதற்குள் அப்பப்பா… மூச்சு முட்டியது.
பல இழுபறிகளுக்குப் பிறகு என் பேரனுக்கான மர வீடு கைகூடி வந்தது. என் கையாலே அதற்கு வண்ணம் தீட்டினேன். திடீரென மழை, வீடு நனைந்துவிடுமே என்ற பதற்றம். பிளாஸ்டுக் போர்வை போர்த்திக் காப்பாத்தினேன். வீட்டைப் பார்த்துப் பார்த்துப் பரவசமானேன்.
நெஞ்சின் நிறைவு
நான் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது. என் பேரன்கள் விடுமுறைக்கு வந்தார்கள். மர வீட்டை ரகசியமாக வைத்திருந்தேன். வீட்டின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வீட்டைக் காட்டினேன். என் பேரன் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அந்தக் கண்கள் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் அகன்று வியந்தன. என் கண்கள் அதை ஒளிப்படமாக்கி, நெஞ்சில் பதித்துக்கொண்டன.
“பாட்டி ரொம்ப நன்றி” என்று என்னை இறுகக் கட்டிக்கொண்டான். நான் செலவு செய்தது மிஞ்சி மிஞ்சிப் போனால் RS 10,000/- தான். ஆனால் கோடானு கோடி கொடுத்தாலும் அந்த மகிழ்வையும், நெகிழ்வையும் அனுபவித்திட முடியாது என்பது உண்மையிலும் உண்மை.
எனக்குப் பெருமையாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது. பேரன்கள் விடுமுறை முழுவதும், அந்த சின்னச்சிறு வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்போது விடுமுறை கழிந்து ஊர் திரும்பிவிட்டார்கள் பேரன்கள். இனி எப்போது வருவார்கள் என்று என்னைப் போலவே மரவீடும் அவர்களுக்காகக் காத்திருக்கிறது.
என் வீடு என் அனுபவம் உங்கள் வீட்டில் நீங்கள் புகுத்தி புதுமைகளை இந்தப் பக்கத்தில் பகிரலாம். வித்தியாசமாக வடிவமைத்த அறை, பழமையான பொருள்களைக் கொண்டு உருவாக்கிய புதிய வடிவம், உபயோகப்படாது எனப் பரண்மேல் ஒதுக்கிய பொருள்களைக் கொண்டு நீங்கள் செய்த கலை வண்ணம் எனப் பல அம்சங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம். அனுப்ப வேண்டிய முகவரி |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT