Published : 10 Mar 2017 06:31 PM
Last Updated : 10 Mar 2017 06:31 PM

ஆசுவாசத்துக்கு அழைத்துச் செல்லும் படிகள்

முன்பெல்லாம் மாடி வீடு மிகக் குறைவாகத்தான் இருக்கும். புழங்கு வெளியாக முற்றம் மட்டும்தான் இருந்தது. ஆனால் இன்றைக்குள்ள இட நெருக்கடியில் புழங்கு வெளி என்பது பெரும்பாலும் மாடிதான். அதனால் மாடிப் படிகளில் இருந்து மொட்டை மாடி வடிவமைப்பது வரை பல முறைகள் வந்துவிட்டன. இந்த மாடிப் படிகள்தான் நம்மை ஆசுவாசம் கொள்ள வைக்கும் மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்லக் கூடியவை.

வீட்டுக்குள் அமைக்கப்படும் படிக்கட்டுகள் என்பது ஒரு இடத்துக்குச் சென்ற வருவதற்கு மட்டும் பயன்படக் கூடியவை அல்ல. வீட்டின் தோற்றத்தைக் கொஞ்சம் அழகாகவும் படிக்கட்டுகள் காட்டும். எனவே வீட்டுக்குப் படிக்கட்டுகளைத் தேர்வு செய்யும்போது நவீனமயமான தோற்றத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. நவீனப் படிக்கட்டுகள் என்றால் முதலில் பலருக்கும் ‘மிதக்கும் படிக்கட்டுகள்’தான் நினைவுக்கு வரும்.

மிதக்கும் படிக்கட்டுகள் என்பது கொஞ்சம் ஸ்டைலான படிக்கட்டு வகை. இதன் படிக்கட்டுகள் தனித்தனியாகச் சுவரில் வலுவாக அமைக்கப்பட்டிருக்கும். இதன் கைப்பிடி கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படிக்கட்டு கான்கிரீட் இல்லாமல் தயாரிப்பதால் தனியாக இருப்பது போலத் தோற்றமளிக்கும். அதனால் பார்ப்பதற்கு மிதப்பது போலத் தெரியும். அதனால்தான் இந்தப் படிக்கட்டுகளை மிதக்கும் படிக்கட்டுகள் என்றழைக்கிறார்கள்.

மிதக்கும் படிக்கட்டுகள் தவிர மேலும் பல்வேறு முறைகள் படிக்கட்டுகள் பின்பற்றப்படுகின்றன. வீடுகள் அல்லது அடுக்குமாடிகளில் படிக்கட்டுள் அமைக்கும்போது சரிவான கான்கிரீட் மீது படிக்கற்களுக்காகச் செங்கற்களைக் கொண்டு அமைப்பார்கள். பிறகு அதன்மீது வழக்கமான சிமெண்டு பூச்சு பூசப்படும். இப்படி அமைக்கப்படும் படிக்கட்டுகளில் நேராக ஏறக்கூடிய படிக்கட்டுகள், சுழன்று ஏறக்கூடிய படிக்கட்டுகள், ‘ப’ வடிவப் படிக்கட்டுகள், அரைவட்டப் படிக்கட்டுகள், ‘எல்’ வடிவப் படிக்கட்டுகள், ‘யூ’ வடிவப் படிக்கட்டுகள் எனப் பல வகைகள் உள்ளன. இவற்றில் உங்கள் வீட்டின் அமைப்புக்கு எந்தப் படிக்கட்டுகளை அமைத்தால் நன்றாக இருக்குமோ, அதைத் தேர்வு செய்து அமைக்கலாம்.

தற்போது கட்டுமானத் தொழிலில் நுட்பங்கள் பெருகிவிட்டன. இதன் காரணமாக வழக்கமான படிக்கட்டுகள் மாற்றம் அடைந்திருக்கின்றன. ஒரு காலத்தில் வீட்டுக்குள் மரப்பலகைகளைக் கொண்டு படிக்கட்டுகள் அமைத்தார்கள். தற்போது கான்கிரீட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஆகும் நேரத்தையும், செலவையும் குறைக்கும் வகையில் ‘ரெடிமேட்’ படிக்கட்டுகள் வந்துவிட்டன. வழக்கம்போல ‘ரெடிமேட்’ படிக்கட்டுகள் வெளி நாடுகளிலிருந்து இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஒரு வகைதான்.

ரெடிமேட் படிக்கட்டுகளில் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும் வகை இருப்பதுபோல, மரங்கள், கண்ணாடி, ஸ்டீல், காஸ்டிங் ஸ்டேர்கேஸ் அமைப்புகள் மூலம் படிக்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதேபோல அலுமினியப் படிக்கட்டுகளும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தப் படிக்கட்டுகளை எல்லா வீடுகளிலும் அமைக்க முடியாது. சில குறிப்பிட்ட வகை வீடுகளில் உட்புற அமைப்பாகவும், அழகுக்காகவும் வேண்டுமானால் அமைக்கலாம். இது கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் பலரும் இந்த வகை படிக்கட்டுகளை விரும்புவதில்லை. எனவே சந்தையிலும் இதன் விற்பனை சொல்லிக்கொள்ளும் விதத்தில் இல்லை.

‘ரெடிமேட்’ படிக்கட்டுகளில் கான்கிரீட்டில் தயாரிக்கப்படும் படிக்கட்டுகளுக்குத் தனி மதிப்பு உள்ளது. இது சுலபமாக அமைப்பதற்கு வசதியாக இருக்கும். அதோடு இதன் பராமரிப்பு குறைவாகத்தான் இருக்கும். இதில் ஒரேயொரு பிரச்சினையும் உண்டு. ‘ரெடிமேட்’ படிக்கட்டுகள் குறிப்பிட்ட அளவுகளில் தயாரிக்கப்படுவதால், வீடுகளுக்குத் தக்க அளவுகளில் கிடைக்குமா என்று தேட வேண்டியிருக்கும். படிக்கட்டைக் கச்சிதமாகப் பொருத்த வசதியாக நேர்த்தியாக அது தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x