Last Updated : 11 Jun, 2016 01:11 PM

 

Published : 11 Jun 2016 01:11 PM
Last Updated : 11 Jun 2016 01:11 PM

நகரங்களின் கதை: இப்படித்தான் உருவானது டெல்லி!

அது 1947, ஆகஸ்ட் 14-ன் இரவு நேரம். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாள். அரசியலமைப்புச் சபையின் மேடையில் நின்றுகொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஆகவிருந்த நேரு புதிய தலைநகரத்தைப் பற்றித் தனக்கிருந்த கனவை இப்படி வெளிப்படுத்துகிறார்: “விடுதலையடைந்த இந்தியாவின் எல்லாக் குழந்தைகளும் விளையாடுவதற்கான மகத்துவம் மிக்க மாளிகையை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.”

ஆனால், நாடாளுமன்றத்துக்கு வெளியே நேருவின் ‘மாளிகை’ நொறுங்கிக்கொண்டிருந்தது. பழைய டெல்லியில் இளைஞர்களின் பட்டாளங்கள் முஸ்லிம் குடியிருப்புகளைச் சூறையாடிக்கொண்டிருந்தன.

மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டுக் குடும்பம் குடும்பமாக வெளியேறினார்கள். தெற்கே சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த புராணா கிலா (பழைய கோட்டை), ஹுமாயுன் கல்லறை போன்ற இடங்களை நோக்கி பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்தார்கள்.

இந்தியப் பிரிவினையையொட்டித் தங்கள் பிரதேசங்களில் தலைவிரித்தாடிய வன்முறையிலிருந்து தப்பி வந்த இந்த மக்கள் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் இருந்த தற்காலிகக் குடியிருப்புகளில் தஞ்சம் புகுந்தனர்.

அப்போதைய டெல்லியைப் பற்றி ‘டெய்லி மிரர்’ பத்திரிகை இப்படி எழுதியது: ‘மிக மோசமாகப் புழுங்கும் வீடுகள், திரள்திரளாக அகதிகள், செத்துப்போன கால்நடைகள், குதிரைகள் போன்றவற்றுடன் ஒரு போர்க்களம்போல் காட்சியளித்தது.”

இந்தியத் துணைக்கண்டத்தைப் பிளந்துவிட்டுத்தான் ஆங்கிலேயர்கள் இங்கிருந்து சென்றார்கள். அதற்குப் பிறகு 1947-ல் மட்டும் டெல்லியிலிருந்து 3.5 லட்சம் முஸ்லிம்கள் தப்பிச் செல்ல, இந்துக்குள், சீக்கியர்கள் உள்ளிட 5 லட்சம் பேர் டெல்லியை நோக்கிப் படையெடுத்தனர்.

‘வரலாற்றின் மாபெரும் இடப்பெயர்வு’ என்று அது பெயரிடப்பட்டது. இதுபோன்ற பெரும் மாற்றத்துக்கு அந்த நகரம் சற்றும் தயாராக இல்லை. ரயில்கள், பேருந்துகள், மருத்துவமனைகள், தொலைபேசி இணைப்புகள் என்று அனைத்துச் சேவைகளும் ஸ்தம்பித்துப் போயின. ரயில் போக்குவரத்து இல்லாததால் கோதுமை இருப்பு மிகவும் குறைந்துபோனது.

எனினும் நேருவும் அவர் தலைமையில் இயங்கிய திட்டப் பணி அதிகாரிகளும் இதனாலெல்லாம் சுணங்கிப்போய்விடவில்லை.

அடுத்து வரவிருந்த தசாப்தத்தில் அவர்கள்தான் இந்திய வரலாற்றிலேயே மாபெரும் கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ளவிருந்தார்கள்: வறுமையும் சேரிகளும் இல்லாத ஒரு தலைநகரம்! நேருவைப் பொறுத்தவரை டெல்லி என்பது ஒரு அனைத்திந்திய நகரம். சுதந்திர இந்தியாவுக்குச் சொந்தமான முதல் நகரமாக ஆகவிருந்தது.

டெல்லியை உருவாக்குவதற்கான மாபெரும் திட்டத்தின் கூறுகளெல்லாம் இறக்குமதி செய்யப்பட்டவை. இந்தியச் சுதந்திரத்தையொட்டி எழுந்த அமளிதுமளிகளுக்கு வெகு தூரத்தில், அமெரிக்காவின் கலிஃபோரினியா மாகாணத்தின் பெர்க்லியில் ஃபோர்டு அறக்கட்டளையைச் சேர்ந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஆலோசகர்கள் கூடினார்கள்.

இந்தியாவின் புதிய தலைநகரத்தை நிர்மாணிப்பதற்காக நில வரைபடங்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டும், திட்டம் தீட்டிக்கொண்டும் இருந்தார்கள். அந்தச் செயல்திட்டத்தின் தலைவரான ஆல்பெர்ட் மேயர் நியூயார்க்கில் மிகவும் பிரசித்தி பெற்ற திட்ட வரைவாளர் மற்றும் கட்டிடக் கலைஞர். “டெல்லி செயல்திட்டம்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் இங்கிலாந்தின் ‘பூங்கா நகர இயக்கம்’ (Garden City Movement) என்பதன் அடியொற்றிச் செயல்படுத்தப்படுவதாக இருந்தது.

அந்தக் குழுவின் உறுப்பினர்கள் எவருமே அதற்கு முன்பு இந்தியாவில் பணிபுரிந்ததில்லை. டெல்லியின் பல நூற்றாண்டு கால அரசியலின் விளைவாகச் சீரற்று ஏற்பட்டிருந்த நகரமயமாதலைப் பற்றியே பெர்க்லி கூட்டங்களில் பெரும்பாலும் விவாதிக்கப்பட்டது. டெல்லியின் கட்டமைப்புக்கு மேலைநாட்டினர் பங்களிப்பு செய்திருக்கும் வரலாறு அதற்கு முன்பும் உண்டு.

அதற்கும் அரை நூற்றாண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் தலைநகராக டெல்லி ஆனபோது அதன் நகரமைப்புத் திட்டப் பணிக் குழுவின் தலைமை கட்டிடக் கலைஞராகப் பணியாற்றுவதற்காக எட்வின் லுத்யன்ஸ் இந்தியாவுக்கு வந்தார். இந்தியா வந்த அடுத்த இரண்டு மாதங்கள் யானை மீது அமர்ந்துகொண்டு டெல்லியைச் சுற்றிவந்து பார்வையிட்டார்.

அதற்குப் பிறகு மலைப் பிரதேசங்களுக்குச் சென்று அங்கிருந்தபடி டெல்லிக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தார். அகலமான நிழற்சாலைகள், ஒரு அச்சை மையமாகக் கொண்டு மரங்கள், கட்டிடங்கள் என்று அமைக்கப்படும் நகர்ப் பகுதிகள், பூங்காக்கள், ரவுண்டானாக்கள் என்று அச்சுஅசலான ‘ஐரோப்பியத் தலைநகரம்’ ஒன்றைப் போல டெல்லியை உருவாக்க விரும்பினார். லுத்யன்ஸ் வடிவமைத்த டெல்லிதான் பிற்காலத்தில் புதுடெல்லியாக ஆகிறது.

லுத்யன்ஸைப் போலவே ஃபோர்டு அறக்கட்டளையின் குழுவும் டெல்லியைப் புனர்நிர்மாணம் செய்ய நினைத்தது. அந்தப் பெருந்திட்டம் என்பது ஏட்டளவில் மாபெரும் நவீனக் கனவுதான். ஆறு வளைய நகரங்கள் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளிலிருந்து உருவாயின. ஒவ்வொன்றும் அதற்கே உரித்தான பொருளாதார, சமூக, கலாச்சாரத் தொடர்பை மைய நகரத்துடன் கொண்டிருந்தன.

புதிதாக உருவாக்கப்பட்ட டெல்லி நகர மேம்பாட்டுக்

கழகத்தின் வழிகாட்டலில் ஒவ்வொரு உள்நகரமும் மக்கள்தொகை, தொழில் உற்பத்தி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அடுத்த 30 ஆண்டுகளில் குறிப்பிட்ட இலக்கை எட்டத் திட்டமிடப்பட்டது. கூடவே, அழகாகவும் இருக்க வேண்டும். திட்டத்தைப் பொறுத்தவரை நகரத்தின் எல்லாப் பொது மற்றும் தனியார் கட்டிடங்களிலும் அழகு விகசிக்க வேண்டும்.

நவீன தொழில்கூடங்கள் கவர்ச்சிகரமான நிலப்பரப்பையும் மைதானங்களையும் கொண்டிருக்க வேண்டும். கண்கவர் அங்காடி மையங்கள், எளிமையாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்ட பள்ளிகள், வீடுகள் என்று அழகை மையப்படுத்தி அந்தத் திட்டம் இருந்தது.

சமூக ரீதியில் மட்டுமல்ல கட்டிடக் கலைரீதியிலும் ஒரு கனவு அதற்குப் பின்னால் இருந்தது. அங்கே தமிழர்கள் இருக்க வேண்டும், அஸாமியர்களும் இருக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மொழிகளும் அனைத்துப் பிரதேசங்களும் அங்கே பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பது நேருவின் கனவு.

கனவெல்லாம் சரிதான். இன்று நிறைவேறியிருப்பது என்னவென்று பார்க்க வேண்டும். குடியிருப்புக்காக டெல்லியில் 30 ஆயிரம் ஏக்கர்கள் ஒதுக்கப்படுவதாக ஆரம்பத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதில் பாதியளவுகூட நிறைவேற்றப்படவில்லை.

13 ஆயிரம் ஏக்கர்கள்தான் இறுதியில் ஒதுக்கப்பட்டன. அடிப்படையாக, வறுமைக் கோட்டின் கீழே உள்ளவர்களை மனதில் கொண்டு நகரமைப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டாலும் வெறும் 10 சதவீதக் குடியிருப்புகளே அந்த மக்களுக்கு 1960-க்கும் 1970-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டன.

டெல்லி நகரமைப்புக் குழு அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகளைப் பார்த்தால் ஜொலிக்கின்றன. சாதனைக்கு மேல் சாதனை செய்திருப்பதாக அந்த அறிக்கைகள் புளகாங்கிதப்பட்டாலும் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக டெல்லியை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இவர்களை உள்வாங்கிக்கொண்டு அரவணைக்கும் திறனை டெல்லி இழந்துகொண்டேவருகிறது. இந்த வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நகரமைப்புக் குழு ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. ஒரு மாபெரும் கனவு இன்னும் கனவாகவே இருக்கிறது, அதுதான் டெல்லி!

©தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x