Published : 11 Oct 2014 12:56 PM
Last Updated : 11 Oct 2014 12:56 PM
வீடு என்பது வெறும் செங்கலாலும் மணலாலும் கட்டப்பட்டதல்ல. அது உணர்வாலும் அன்பாலும் கட்டப்பட்டது என்பார்கள். சம்பாதிப்பதைக் காட்டிலும் அதைப் பயனுள்ள முறையில் செலவிடுவதிலும் சேமிப்பதிலும்தான் இருக்கிறது சாமர்த்தியம். அதைப் போல்தான் வீட்டைப் பராமரிப்பதும் அழகுபடுத்துவதும்.
வீட்டை அழுகுபடுத்த அலங்காரப் பொருள்களை வாங்கி அடுக்கினால் மட்டும் போதாது. அள்ளி இரைத்து விடவும் கூடாது. அடுத்த வீட்டில் பார்த்தேன். உறவினர் வீட்டில் பார்த்தேன் என்று வாங்கிக் குவிக்கக் கூடாது. அந்தப் பொருள்கள் நம் வீட்டிற்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
வீடு வீடாய் இருக்க வேண்டும். வீடு அலுவலகம் போல் இருப்பதாகச் சிலர் ஆதங்கப்படுவதும் உண்டு. பழமையை மனம் விரும்புகிறது. வீட்டை அலங்கரிக்க ஆசை இருந்தாலும் வாங்கும் பொருள்களின் விலையைப் பார்த்து விலகி ஓடுவார்கள். சிலருக்கு அதைச் சுத்தப்படுத்திப் பராமரிக்கும் வேலையை நினைத்தாலேயே அலுப்பு வந்துவிடும். விலையும் குறைவாக இருக்க வேண்டும். உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போவதாக இருக்க வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்?
டெரகோட்டா என்னும் சுடும் மணலில் செய்த பொருள்களைக் கொண்டு அழுகுபடுத்தலாம். முன்பெல்லாம் அகல்விளக்கும், மண் தொட்டியும்தான் கிடைக்கும். இப்போது நகைகள்கூடச் செய்கிறார்கள். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட கலை நயம் மிக்க பொருள்கள் கிடைக்கின்றன. குதிரை முகம், முழுக் குதிரை, மான், விநாயகர் சிலைகள், புத்தர் சிலைகள், சூரியன் முகம், பல விதமான விளக்குகள், மணிச் சக்கரங்கள் எனப் பல அழகுப் பொருள்கள் கிடைக்கின்றன.
வீட்டிற்குள்ளும் வெளியே தோட்டத்திலும் புல் தரையிலும் ஒரே மாதிரி அழகுபடுத்த டெரகோட்டாவைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை. பராமரிப்பதும் எளிது. சிறிய பிரஷ் கொண்டு துடைத்தாலேயே போதுமானது. புல் தரையில் அமைக்கும்போது வெயிலையும் மழையும் தாக்குப் பிடிக்கும்படி இது இருக்கும். தேவைப்படும்போது மீண்டும் வண்ணம் பூசிக் கொள்ளலாம்.
- விஜிலா தேரிராஜன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT