Published : 04 Oct 2014 11:50 AM
Last Updated : 04 Oct 2014 11:50 AM
இன்று நாம் வாழும் குடியிருப்புகளில் பெரும்பாலானவை தீப்பெட்டிகளை அடுக்கியது போலவே இருக்கின்றன. வீட்டில் ஒன்று அல்லது இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன. ஆனால் ஜன்னலைத் திறந்தால் வானமோ, செடிகொடிகளோ கண்ணுக்குத் தெரிவதில்லை.
பக்கத்து வீட்டு ஜன்னல் நம் வீட்டு ஜன்னலோடு உரசிக் கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. ஜன்னல் வழியே ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்களிலிருந்து காற்று வருவதில்லை. அடுத்த வீட்டுக் குழம்பு வாடை அல்லது சாக்கடை நாற்றம்தான் வீசுகிறது.
நகர்ப்புறத் தோட்டம்
இப்படிப்பட்ட இட நெருக்கடியில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற கொள்கையைத் தூக்கி நிறுத்த இடமில்லை. வீட்டுக்கு வெளியே மரம் வளர்க்கிறோமோ இல்லையோ குறைந்தது வீட்டுக்குள் அழகிய செடிகள் வளர்க்கலாமே!
ஆம்! நம் வீடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சின்னச் சின்ன செடிகளை வளர்க்க முடியும். சமையல் அறையில் பாத்திரம் தேய்க்கும் இடமான சின்க் (sink), வீட்டின் பால்கனி, அறைகளின் மூலைகள், மொட்டை மாடி இவையாவும் நகர்ப்புறத் தோட்டத்திற்குப் போதுமான பகுதிகள்தான்.
வீட்டுக்கு ஏற்ற செடி
ஆனால் உங்கள் வீட்டின் கட்டிட அமைப்பை முதலில் புரிந்துகொண்டு உட்புறத் தோட்டத்தைத் திட்டமிடுவது நல்லது. அதாவது, தொட்டியில் பூச்செடி வளர்ப்பதென்றால் தொட்டி வைக்கப்படும் அந்த இடத்தில் போதுமான சூரிய ஒளி இருக்க வேண்டும்.
அதே பசலைக் கொடி போன்ற படர்ந்து வளரும் செடியை வளர்க்க அகலமான கிரில் கம்பிகள் இருக்க வேண்டும். க்ரோட்டன்ஸ் வகைச் செடிகள் என்றால் அவை வளர ஏதுவான தட்ப வெட்பம் வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாகச் செடிகளோடு நேரம் செலவழித்து அவற்றைப் பராமரிக்கும் மனம் வேண்டும்.
வீட்டுக்கு ஏற்ற ஜாடி
நீங்கள் வளர்க்கப் போகும் செடி, மற்றும் தொட்டி இவை இரண்டையும் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வீட்டு அறையின் வண்ணம், தன்மையோடு ஒத்துப்போகும் விதத்தில் இவை இருக்க வேண்டும்.
செடியின் தொட்டியைச் சுவாரசியமாக அலங்கரிப்பது கூடுதல் அழகு தரும். உதாரணத் திற்கு, ஆறுகோண வடிவில் இருக்கும் கண்ணாடித் தொட்டியில் சில கூழாங்கற்களைப் போட்டு ஒரு டேபிள் ரோஸ் செடி வைத்தால் எளிமையாகவும், அழகாகவும் இருக்கும்.
பால்கனியில் செடிகளை வளர்ப்பதாக இருந்தால், அதீத குளிர் அல்லது கடும் வெயில் தாக்காத வண்ணம் ஒரு மெல்லிய திரை போடுது நல்லது.
செங்குத்துத் தோட்டம்
உங்கள் அறைகள் குறுக லாக இருக்கும் பட்சத்தில், செங்குத்தாகச் செடிகளை வளர்க்கலாம். ஒரு நீளமான குச்சை நட்டு அதன் மீது கொடிகளை வளர்க்கலாம். இதன் சிறப்பம்சங்கள் என்னவென்றால், வெளிச்சத்தை நோக்கி வளரும் தன்மை கொண்டவை செடிகள். அப்படி இருக்க உங்கள் வீட்டுக் கட்டிடத்தில் இருக்கும் அழகற்ற பகுதிகளை இது மறைக்க உதவும்.
சன்னல் கிரில்களோடு பின்னிப் பிணைந்து வளர்ந்து அழகூட்டும். எத்தகைய நெரிசலான பகுதியில் நீங்கள் குடியிருந்தாலும், இந்தச் செடிகள் கண்ணுக்குக் குளிர்ச்சியான இடமாக உங்கள் வீட்டை மாற்றும். இப்படிச் செய்வதைச் செங்குத்துத் தோட்டக் கலை என்றே அழைக்கிறார்கள்.
தொங்கும் தோட்டம்
பீங்கான் தொட்டிகள் அல்லது கம்பியால் பின்னப்பட்ட தொட்டி களை வீட்டுக் கூரையில் கட்டித் தொங்கவிட்டும் சிறு சிறு செடிகளை வளர்க்கலாம்.
பழைய மரப் பெட்டிகள், உடைந்த மரச் சாமான்களின் பகுதிகள் இவற்றில் அழகுபடுத்தும் சில பொருள்களை அடுக்கி செடி வளர்க்கும் தொட்டிகளாக மாற்றலாம்.
நீங்கள் வளர்க்கும் செடியைப் போலவே அது வளர்க்கப்படும் கொள்கலனும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வித்தியாசமான வடிவங்களில் இருக்கும் பொருள்களில் செடிகளை வளர்க்கும்போது நிச்சயம் அது தனியொரு அழகைத் தரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT