Published : 01 Sep 2018 11:12 AM
Last Updated : 01 Sep 2018 11:12 AM
ஓய்வுற்றவர்களுக்கான இல்லங்களைத் தேர்வுசெய்வது நாட்டில் அதிகரித்துவருகிறது. நீண்ட ஆயுள்காலம், அதிகரித்துவரும் செல்வம், மாறிவரும் மனநிலை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கின்றன. பாதுகாப்பான சமூகத்தில் ஒரேமாதிரி சிந்தனையுடன் இருக்கக்கூடிய நபர்களுடன் தங்கள் ஓய்வு நாட்களைக் கழிக்கவிரும்பவர்களுக்கு ஓய்வு இல்லங்கள் சிறந்த மாற்று வழியாக இப்போது மாறிவருகின்றன.
பத்து ஆண்டுகளுக்குமுன் மேற்கத்திய நாடுகளில் பிரபலமான இந்தப் போக்கு தற்போது இந்தியாவிலும் பிரபலமடைய தொடங்கிருக்கிறது. அத்துடன், ஓய்வு இல்லத்தில் வாழ்வதைப் பற்றிய சமூகப் பார்வையும் தற்போது மாறிவருகிறது. ஓய்வுபெற்ற பிறகு, யாரையும் சார்ந்திருக்காமல் சுதந்திரமாக வாழும் வசதியை அளிப்பதால் பெரும்பாலானோர் ஓய்வு இல்லங்களைத் தேர்வுசெய்கின்றனர்.
2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 10.4 கோடி பேராக இருந்தனர். இந்த மூத்தக் குடிமக்களின் மக்கள்தொகை 2026-ம் ஆண்டுக்குள் 17.3 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
அதனால், இந்தியாவின் நகர்ப்புறங்களில் ஓய்வுபெற்றவர்களுக்கான குடியிருப்புகளின் தேவை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கவிருக்கிறது. இந்தப் போக்கைப் பின்பற்றி ஓய்வு இல்லங்களை வாங்க நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களாக இவற்றைப் பட்டியலிடலாம்.
சரியான கட்டுநர்
ஓய்வு இல்லங்களைப் பொறுத்தவரை, சரியான கட்டுநரைத் தேர்வுசெய்வது மிகவும் முக்கியம். ஏனென்றால், ஓய்வுற்றவர்களுக்கான குடியிருப்புகளை உருவாக்குவதில் குறிப்பிட்ட சில கட்டுநர்களுக்கு அனுபவம் இருக்கிறது. ஓய்வு இல்லத்தைக் கட்டிமுடித்தபிறகு கட்டுநர் வழங்கப்போகும் சேவைகள்தான் நமக்கு முக்கியம். அதனால், சரியான கட்டுநரைத் தேர்வு செய்வது அவசியம்.
இடம்
அமைதியான வாழ்க்கையை குடியிருப்பவர்களுக்கு வழங்குவதுதான் ஓய்வு இல்லங்களின் நோக்கம். அதனால், இதுபோன்ற குடியிருப்புப் பகுதிகள் பெரும்பாலும் புறநகர்ப்பகுதிகளில்தான் அமைந்திருக்கின்றன. இந்தப் பகுதிகள் உங்களுக்கு அமைதியை வழங்கினாலும் நகரின் மையப் பகுதியிலிருந்து உங்களை விலக்கிவைக்கும். அதனால், ஓய்வு இல்லத்தைத் தேர்வுசெய்யும்போது அடிப்படை மருத்துவ வசதிகளுடன் இருக்கும் குடியிருப்புகளைத் தேர்வுசெய்வது நல்லது. அத்துடன், உங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகே பெரிய மருத்துவமனை இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
பணத்தைச் செலுத்தும் வழிகள்
ஓய்வு இல்லத்தை வாங்கும்போது பணம் செலுத்துவதில் பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் சில:
முழுமையாக வாங்குவது
இந்த வழியில் மொத்த பணத்தையும் செலுத்தி நீங்கள் குடியிருப்பை வாங்க வேண்டியிருக்கும். இந்தமுறையில் குடியிருப்பை வாங்கும்போது, உங்கள் காலத்துக்குப்பிறகு குழந்தைகளிடம் அந்த வீட்டை ஒப்படைக்க முடியும். அத்துடன், தேவை ஏற்பட்டால் உங்களால் அந்த வீட்டை விற்கவும் முடியும்.
வைப்புத் தொகை மாதிரி
இந்த வகையில், நீங்கள் வீட்டுக்கான 60-80 சதவீத வீட்டின் விலையைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த வீட்டில் நீங்கள் குறிப்பிட்டக் காலத்துக்கு வசிக்கமுடியும். வெளியேறும்போது உங்கள் பணம் சில பிடித்தம்போக கையில் கிடைக்கும்.இது வீட்டை லீசுக்கு எடுப்பது மாதிரிதான்.
வாடகை
உங்களுக்கு ஓய்வு இல்லத்தைச் சொந்தமாக வாங்க விருப்பமில்லை என்றால் வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.
வசதிகள்
ஓய்வு இல்லம் என்றாலே அதில் குறிப்பிட்ட சில வசதிகள் இருக்க வேண்டியது அவசியம். அடிப்படையில், அன்றாட தேவைகளான உணவு, சலவை, வீட்டுப் பராமரிப்பு போன்ற வசதிகள் இருக்க வேண்டும். அத்துடன், 24 மணி நேரமும் மருத்துவ வசதி கட்டாயமாக இருக்க வேண்டும்.
ஓய்வு இல்லங்களுக்கான சில கட்டிட வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. குளியலறையில் வழுக்காதத் தரைத்தளம், வரவேற்பறை, சமையலறை போன்றவற்றில் உயரம் குறைவான அலமாரிகள், சூரிய வெளிச்சத்தை அதிகமாக அனுமதிக்கும் பால்கனிகள் போன்றவை அவற்றில் சில முக்கியமான வழிகாட்டுதல்கள். நீங்கள் வாங்கப்போகும் ஓய்வு இல்லத்தில் இந்த வசதிகள் இருக்க வேண்டியது அவசியம்.
ஓய்வு இல்லத்தை வாங்கும்போது சரிபார்க்க வேண்டிய பட்டியல் > உங்கள் குடியிருப்புப் பகுதி உங்கள் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கிறதா? > உங்களுக்குக் குடியிருப்புப் பகுதி பிடித்திருக்கிறதா? > என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன? > குடியிருப்புவாசிகள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகுகிறார்களா? > குடியிருப்புப் பகுதியின் ஊழியர்கள் உங்களை வரவேற்பதில் கனிவுடன் நடந்துகொண்டார்களா? > என்னென்ன சேவைகள் வழங்குகிறார்கள்? > என்னென்ன உணவு வகையைத் தேர்வுசெய்யலாம்? > என்னென்ன மருத்துவ வசதிகள் இருக்கின்றன? > அருகில் பெரிய மருத்துவமனை இருக்கிறதா? > என்னென்ன உடல், மன நலப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன? > எந்தெந்த சேவைகளுக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன? |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT