Published : 15 Sep 2018 11:18 AM
Last Updated : 15 Sep 2018 11:18 AM

இந்தியாவின் பிரம்மாண்டம்!

மிகப் பிரம்மாண்டமான, உயரமான கட்டிடங்கள் எல்லாம் வெளிநாடுகளில் மட்டுமே இருக்குமா என்ன? இந்தியாவிலும் அப்படிப்பட்ட கட்டிடங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக மும்பையில் அதிக அளவில் பிரம்மாண்டமான கட்டிடங்கள்  உள்ளன.  ‘கட்டுமான அதிசயங்கள்’ என்றழைக்கப்படும் அந்தக் கட்டிடங்களில்  சிலவற்றைப் பார்ப்போம்:

வேர்ல்ட் ஒன்:

இந்தியாவின் மிக உயரமான கட்டிடம் இது. மும்பையில் இதன் கட்டுமானப் பணிகள் 2011-ம் ஆண்டு  தொடங்கின. 2017-ம் ஆண்டுதான் இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. 442 மீட்டர் உயரமுள்ள இந்தப் பிரமாண்டக் கட்டிடத்தில் 117 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லிப்டுகள் உள்ளன. இந்த உயரமான கட்டிடத்தைக் கட்ட ஆகும் செலவும் எவ்வளவு தெரியுமா? 20 ஆயிரம் கோடி ரூபாய்! இந்தக் கட்டிடத்தில் 3 படுக்கையறைகளைக் கொண்ட ஒரு வீட்டின் விலை ரூ. 15 கோடியாம்.

தி 42:

இது கொல்கத்தாவில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட வீட்டுக் குடியிருப்பு. கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உயரமான குடியிருப்பும் இதுதான். இதன் உயரம் 252 மீட்டர்.  2008-ம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆனால், நீதிமன்றத் தடை காரணமாகப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்தக் குடியிருப்பில் 56 உயர் தர அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு, நீதிமன்றத் தலையீட்டின் காரணமாகப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

பாலைஸ் ராயலே:

மும்பையில் கட்டப்பட்ட பிரம்மாண்டக் கட்டிடம். இது இந்தியாவில் கட்டப்பட்ட முதல் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பும்கூட. 320 மீட்டர் உயரமுள்ள இந்தப் பிரம்மாண்டக் குடியிருப்பில் 120 உயர் தர அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 88 தளங்கள் உள்ளன. கிரிக்கெட் பிட்ச், கால்பந்தாட்டம், பேட்மிண்டன் கோர்ட், நீச்சல் குளம் என சகல வசதிகளும் இடம் பெற்றுள்ளன. 2008-ம் ஆண்டில் தொடங்கிய இதன் கட்டுமான பணிகள் இன்னும் தொடர்கின்றன. இந்தக் கட்டிடத்தின் மதிப்பு ரூ. 3 ஆயிரம் கோடி.

ஆர்ச்சிட் ஹைட்:

மும்பையில் கட்டப்பட்டுள்ள இன்னொரு பிரம்மாண்டமான கட்டிடம் இது. 328 மீட்டர் உயரமுள்ள அழகிய கட்டிடம் இது. 80 தளங்கள் இந்தக் கட்டிடத்தில் உள்ளன. 2007-ம் ஆண்டில் தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கோஹினூர் ஸ்கொயர்:

இதுவும் மும்பைக்குப் பெருமை சேர்க்கும் இன்னொரு கட்டிடமே.  203 மீட்டர் உயரத்தில் மிக உயரமாகக் கட்டப்பட்ட உயர் தரக் கட்டிடம் இது.  கடந்த 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 2015-ல் முடிவடைந்தன. இதுவும் அடுக்குமாடி நவீன குடியிருப்பு வளாகம்தான். இதைக் கட்டி முடிக்க 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவானது.

- தொகுப்பு: மிது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x