Published : 29 Sep 2018 11:37 AM
Last Updated : 29 Sep 2018 11:37 AM
வாழ்க்கை முறையும் நம் வசதிகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. உணவு, ஆடையில் தொடங்கி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனமும் புது வடிவம் பெறுகிறது. நம்மோடு சேர்த்து நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நம் வீடு வடிவமைக்கப்படுவது மிக அவசியம்.
முதல் வாரத்தில் நாம் சொன்னபடி ஆசைகள், தேவைகள் மற்றும் பிரச்சினைகளைப் பட்டியலிட்ட வாசகி கல்கண்டார்கோட்டை ப்ரியாவுக்கு ஒரு சந்தேகம்; “என் வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற ஆசைக்கும், என் நிதி நிலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே” என்று.
என் வீட்டில் தனியாக பூஜை அறை வேண்டும். மாடித்தோட்டம் இருக்க வேண்டும். குளியல் தொட்டி (BATH TUB) வேண்டும். 3 படுக்கை அறைகள் வேண்டும். வீட்டின் உள்ளே படிக்கட்டு வைக்க வேண்டும். சமையலறை ISLAND KITCHEN போல வடிவமைக்கப்பட வேண்டும். தனியாக ஒரு உடற்பயிற்சி அறை வேண்டும். நல்ல ஒலி ஒளி அமைப்புடன் கூடிய மிகச் சிறிய திரையரங்கம் ஒன்று வேண்டும். தரைத்தளம் இல்லாமல், மேலும் இரண்டு தளங்கள் கட்ட வேண்டும். இப்படிப் பல ஆசைகள் நம்முடைய பட்டியலில் வரலாம்.
ஆனால், என்னுடைய நிதிநிலை இவற்றைக் கட்டுவதற்கு இன்று பொருத்தமாக இல்லாமல் இருப்பதால், மனத்தைத் தேற்றிக் கொண்டு மிகச் சிறிய ஒரு வீட்டை மட்டுமே கட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டுமா? – என்று கேட்டால், உங்களைத் தயார்செய்து கொள்ளுங்கள் என்பதே என் பதில்.
மேலே நாம் கண்ட இரண்டு விஷயங்களையும் இங்கே இணைக்க விரும்புகிறேன். மாறக்கூடிய வாழ்க்கை முறைக்குப் பொருத்தமாகவும், நம் விருப்பங்களை வருங்காலத்தில் செய்து கொள்வதற்கு ஏற்றதாகவும் நம்முடைய வீட்டை “வருங்காலத் தயார்நிலைக்கு (FUTURE READY)” உருவாக்க வேண்டும். அது சாத்தியமா? – என்றால், நிச்சயமாக சாத்தியம் என்றே சொல்வேன்.
நாம் கட்டிடத்தை வடிவமைக்கும் ஆரம்ப கட்ட நிலையில் இந்த எண்ணங்களைக் கொண்டு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். நம் வீடு கட்ட ப்ளான் (PLAN) தயார் செய்யும்போது, ஒட்டு மொத்தமான நம் ஆசைக்கான வீட்டைத் தயார் செய்யலாம். இன்றைய நிதிநிலைக்கு ஏற்ப, தேவையான பகுதிகளை மட்டும் இப்போது கட்டிக் கொள்ளலாம். வசதி வரும் காலத்தில் நாம் சுணக்கமின்றி, எந்தவிதத் தயக்கமின்றி நம் ஆசைப்பட்டபடி கட்டிக் கொள்ளலாம்.
‘ஏற்கெனவே எங்கள் வீடு தரைத்தளம் மட்டும் உள்ளது. மேலே இன்னொரு தளம் கட்ட முடியுமா,’, ‘எங்கள் வீடு 500 சதுர அடி உள்ளது, ஒரு படுக்கையறை மற்றும் குளியலறை இணைக்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்?’ என்பன போன்ற கேள்விகளை அடிக்கடி எதிர்கொள்கிறேன். நாம் திட்டம் தயாரிக்கும் நேரத்திலேயே முழுமையாக வடிவமைத்து அதற்குத் தகுந்தாற்போலக் கட்டுமான அமைப்புச் செய்தால் போதுமானது. அதாவது வீட்டைத் தாங்கி நிற்கக்கூடிய பீம், காலம் போன்ற அடிப்படை அஸ்திவாரங்களை ஒழுங்காகச் செய்துவிட்டால் நாம் விரும்பும் நேரத்தில் எந்தப் பயமும் இல்லாமல் அடுத்தடுத்து நம் வீட்டை விரிவுபடுத்த முடியும்.
தெளிவாக நம் தேவைகளைப் புரிந்து கொள்கிற ஒரு வடிவமைப்பாளரைக் கண்டுணர்ந்து அவரிடம் இந்தப் பொறுப்புகளைத் தந்து விட்டால், நம்முடைய வேலை 90% குறைந்து விடும்.
தற்போதைய நம் நிதிநிலைக்கு ஏற்ப எந்த அளவு கட்டிக் கொள்வதன் மூலம் தற்போது நம் வீடு சரியாக வரும், தொடர்ந்து விரிவுபடுத்தும்போது எந்த அடிப்படையில் செயல்படலாம் என்ற செயல்திட்டம் நம் கையில் இருக்கும்.
எதிர்காலத்தில் நாம் யாரிடமும் சென்று தயக்கத்துடன், இப்படிக் கட்டலாமா? என்று கேட்க வேண்டியதில்லை. ஏனென்றால் நாம் சரியாகத் திட்டமிட்டுவிட்டோம். சரியான திட்டமிடுதலே பாதி வெற்றிதானே…!
- எம். செந்தில்குமார்
கட்டுரையாளர், கட்டுமானப் பொறியாளர்
தொடர்புக்கு: senthilhoneybuilders@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT