Published : 22 Sep 2018 10:52 AM
Last Updated : 22 Sep 2018 10:52 AM
நவீன இந்தியாவின் புகழ்பெற்ற கட்டிடங்களுள் ஒன்று தாமரைக் கோயில். தலைநகர் டெல்லியில் உள்ள இந்தக் கோயில் பஹாய் சமயத்தின் வழிபாட்டுக் கூடம். தினமும் 10,000-க்கும் அதிகமானோர் இந்த வழிபாட்டுக் கூடத்துக்கு வருகின்றனர். உலக அளவில் அதிக மக்கள் பிரவேசித்த கட்டிடங்களின் பட்டியலில் இந்தக் கட்டிடமும் இடம்பெற்றுள்ளது.
வடிவமைப்பு
தியானத்தைக் குறிக்கும் வகையில் இந்தக் கோயில் தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ளது. தாஜ்மஹால் போல் இந்தக் கட்டிடத்திலும் 27 மார்பிள் கற்களைக் கொண்டு தாமரை இதழ்களை வடிவமைத்துள்ளனர். பிரதானக் கூடத்தின் தரைத்தளம் மார்பிளால் ஆனதே. இந்தக் கட்டிடத்துக்கான மார்பிள், கிரேக்கத்தின் பெண்டலி மலையிலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரதான அறைக்கு 9 வாசல்கள் உண்டு. டெல்லியின் முதல் சூரிய மின்சக்திக் கட்டிடம் என்ற பெருமையும் இந்தக் கட்டிடத்துக்கு உண்டு. இந்தக் கட்டிடம் பயன்படுத்தும் 500 கிலோ வாட் மின் சக்தியில் 120 கிலோ வாட் இந்தக் கட்டிடத்தில் உள்ள சூரிய மின்சக்தித் தகடு மூலம் கிடைக்கப்பெறுகிறது.
இந்தத் தாமரைக் கட்டிடம் 230 அடி விட்டம் கொண்டது. கட்டிடத்தின் உயரம் 112 அடி. தோட்டத்துடன் சேர்த்து 26 ஏக்கரில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் வெளிப்பாட்டியல் (Expressionism) முறையில் கட்டப்பட்டது. ஃபரிபார்ஸ் ஷாபா என்னும் ஈரானியக் கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. 1980-ல் தொடங்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணி 1986-ல் முடிவடைந்தது.
வெளிப்பாட்டியல் (Expressionism) கட்டிடக் கலை
20-ம் நூற்றாண்டில் கட்டிடக் கலை உள்பட கலைத் துறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பு இது. 1910-24 ஆண்டுகளுக்கு இடையே இந்த முன்னெடுப்பு ஐரோப்பியக் கட்டிடக் கலைஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த முறையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள் அதுவரை புழக்கத்தில் இருந்த கட்டிட வடிவமைப்பிலிருந்து வித்தியாசமானதாகவும் தனித்துவமானதாகவும் இருந்தது. முதலாம் உலகப் போர் விளைவித்த மாற்றங்களுள் இதுவும் ஒன்று எனக் கட்டிட வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள். பாரம்பரிய ரீதியிலான வடிவமைப்பு தவிர்க்கப்பட்டது. சமச்சீரற்ற முறையில் வடிவமைக்கப்பட்டது. அரூபமான ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைப்பது இதன் பிரதான நோக்கம் எனலாம். தீவிரமான உணர்ச்சியில் இந்தக் கட்டிட முறை தோன்றியது. பஹாய் சமயத்தைப் பின்பற்றும் ஃபரிபார்ஸ் ஷாபாவும் இந்த அடிப்படையில்தான் தாமரைக் கோயிலை வடிவமைத்துள்ளார்.
ஃபரிபார்ஸ் ஷாபா
ஈரானைச் சேர்ந்த இவர், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கவின் கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்போது கனடாவில் வசித்துவருகிறார். 1976-ல் இவர் சர்வதேச பஹாய் சமுதாய ஆட்சி மன்றத்தால் கட்டிட வடிவமைப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தாமரைக் கட்டிடம் மட்டுமல்லாது பஹாய் சமயத்தின் பல கட்டிடங்களையும் வடிவமைத்துள்ளார். இந்தத் தாமரைக் கட்டிட வடிவமைப்புக்காக இவர் கட்டுமான உலகின் கவனத்தைப் பெற்றார். அமெரிக்கக் கட்டுமானக் கழகம் உள்ளிட்ட உலகின் பல கட்டிடவியல் அமைப்புகளின் விருதுகளையும் இதன் மூலம் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT