Published : 08 Sep 2018 11:28 AM
Last Updated : 08 Sep 2018 11:28 AM
நமது வீட்டில் தினந்தோறும் எவ்வளவோ குப்பை சேகரமாகிறது. அவற்றைப் போட்டுவைக்க நாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குப்பைக் கூடையை வைத்திருக்கிறோம். முன் காலத்திலும் இப்படியான கூடையை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். அது அளவில் பெரியது, அதை எங்கேயும் தூக்கிச் செல்ல முடியாது. ஆனால், அதில் ஏராளமான குப்பையைப் போட முடியும்.
நிலத்தில் ஒரு பெரிய குழியைத் தோண்டி, தமக்குப் பயன்படாத சமையல் கழிவையும் குப்பையையும் அதில் போட்டுவைப்பார்கள். அதன் பெயர் குப்பைக் குழி அல்லது எருக்குழி எனப்பட்டது. தாங்கள் வாழ்ந்த ஒவ்வொரு பொது இடத்திலும், அவரவர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இத்தகைய குழிகள் இருந்தன. அவை பெரும்பாலும் மட்கவைக்கப்பட்டுப் பின் மறு சுழற்சி முறையில் விவசாயத்துக்கான இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படும்.
தற்போதைய சூழ்நிலை
அப்போது பாலிதீன் பயன்பாடோ பிளாஸ்டிக் பயன்பாடோ கிடையாது. தற்போது, உணவைவிட அதிகமான அளவில் கழிவு சேர்ந்துவிடுகிறது. போதாக்குறைக்கு எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களும், பாலிதீன் பைகளும் தவிர்க்க இயலாக் குப்பையாகப் பெருகியுள்ளது.
ஆதிகாலத்து வழக்கம் ஒழிந்துவிட்டது. விவசாயமும் பொய்த்துப்போய்விட்டது. எனவே, குப்பை உரமாகும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனால், வகைதொகையில்லாமல் சிறு, குறு, பெரு நகரங்கள் அனைத்திலும் குப்பை சேர்ந்துகொண்டே போகிறது. மேலும், மின்னணுப் பொருட்கள் காரணமாக உருவாகும் மின் குப்பை வேறு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
வெகுவிரைவில் இந்தியா, மின்குப்பைகள் (e waste) பெருக்கத்தில் சீனாவை மிஞ்சும் என ஆய்வறிக்கைகள் வேறு பயமுறுத்துகின்றன. இந்தக் குப்பையைச் சமாளிப்பது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே மக்களுக்கும் அரசுக்கும் உள்ளது.
அரசும் பல தூய்மைத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இன்னும் நூறு சதவீதம் குப்பையை அகற்ற முடியாமல் போன சூழலில் புதிதாக ஒரு தொழில்நுட்பம் கிடைத்தால் அதுவும் பயன்படுத்திப்பார்க்கப்படுகிறது. அப்படியொரு தொழில்நுட்பத்தைப் பார்ப்போம்.
அதி எரித் தொழில்நுட்பம்
தற்போது ‘இன்சினரேட்டர்’ என்னும் அதிவெப்பநிலை எரித் தொழில்நுட்ப முறை பரவலாகிவருகிறது. ஆனால், இம்முறை சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிப்பதாகவும், குறிப்பாக, காற்றை மாசுபடுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை காரணமாக மதுரைக்கு அருகில் உள்ள காரியப்பட்டி மருத்துவக் கழிவுகள் அழிப்புத் திட்டம் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
இம்முறையில், குப்பையை மட்கச் செய்யாமல் அதை அதி வெப்பநிலைக்கு எரியூட்டி சாம்பலாக்குகிறார்கள். இந்தச் சாம்பலை, கரிம விவசாய (organic manure) உரமாகப் பயன்படுத்தலாம். பெரும்பாலான நகரங்களில் தற்போது குப்பை ஊருக்கு வெளியே திறந்த வெளியில் எரிக்கப்படுகிறது. அப்படி எரித்தால் குப்பையின் அளவு குறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. இது தவறான புரிதல்.
ஆனால் இன்சினரேட்டர் தொழில்நுட்பமானது, படத்தில் உள்ளதுபோல ஒரு மூடிய கலனில், அனைத்துவிதமான குப்பைகளையும் உள்ளே கொட்டி எந்த எரியூக்கியும் இல்லாமல் சாதாரணமாகத் தீப்பற்றவைத்தால் 20-25 நிமிடங்களில் அக்குப்பையானது கிட்டத்தட்ட கொட்டிய எடையிலிருந்து 10-ல் ஒரு பகுதியாகவே மிஞ்சும்.
இந்த எரிகலனானது 4 அடி உயரமும் 2 அடி விட்டமும் அமையப் பெற்றது. இதில் ஒரு தடவை 100 கிலோவுக்கும் மேலான குப்பையைக் கொட்டி எரித்தால் எரித்துமுடித்தபின் ஒரு கிலோவுக்கும் கீழேயே சாம்பல் மிஞ்சும்.
இந்த எரிகலனின் உட்சுவர் செராமிக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டு அதற்கு மேல் செராமிக் பூச்சும் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலைக்கு உட்படுத்தப்படுவதால், குப்பை வெகு விரைவாக எரிந்து சாம்பலாகிறது. மேலும், விரைவில் எரிவதற்காக அதன் அடிப்பகுதியில் காற்று எல்லாத் திசைகளிலும் இருந்து செல்ல துளையும் குழலும் (அடுப்பூதூம் குழல் போல்) உள்ளது. அதற்குக் கீழ் எரிந்த சாம்பல் விழ சிறு கதவும் உள்ளது.
சாதகமான முறை:
மிகக் குறைந்த செலவில் அதிக அளவில் குப்பையைக் குறைந்த கால இடைவெளியில் எரித்துச் சாம்பலாக்க இம்முறையைப் பயன்படுத்தலாம். எரிகலனில் மேலே புகைபோக்கியும் உள்ளது. தூய்மை மற்றும் குப்பை ஒழிப்புத் திட்டம் மூலம் அரசு இத்தொழில்நுட்பத்தைக் குறைந்த செலவில் அமல்படுத்தலாம். அப்படிச் செய்தால் பெருநகரம் மட்டுமல்லாமல், சிறு நகரம் மற்றும் கிராமங்கள் அனைத்தும் ஸ்மார்ட் நகரமாகும் என்பதில் ஐயமில்லை.
மேலும், முக்கியமாக, இதற்கு ஊக்கியாக எந்த எரிபொருளும் தேவையில்லை, ஒரு தீக்குச்சியைத் தவிர! எரிபொருள் இல்லாததால் இது சுற்றுச்சூழலுக்கும் எந்த ஒரு பெருங்கேட்டையும் விளைவிப்பதில்லை. உலர்ந்த பொருட்கள் மட்டுமல்லாமல், சற்றே ஈரப்பதமான கழிவுகளையும் சிறு உலர்வைக்குப் பின் எரித்துச் சாம்பலாக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் உயர் அதி வெப்ப ஆற்றலைத் திருப்பி, நீரைக் கொதிக்கச் செய்து அதன் ஆவி மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் என்பது உபரித் தகவல்!
அரசு மக்களை வலியுறுத்தி, இங்கு தாராளமாகக் குப்பை கொட்டலாம் எனப் பொதுவான ஒரு இடத்தை அமைத்துக் கொடுத்து, பின் அக்குப்பைகளை இன்சிரேட்டர் உள்ள இடத்துக்கு இடம் மாற்றலாம். எல்லாப் பொது இடங்களிலும் இதை வைக்க முடியாது என்ற விஷயத்தைத் தவிர இதில் பாதகம் ஒன்றுமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தனிமனிதப் பொறுப்புணர்வின் மூலமே நாம் குப்பையைக் கட்டுப்படுத்த முடியும்.
- பிச்சுமணி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT