Published : 29 Sep 2018 11:38 AM
Last Updated : 29 Sep 2018 11:38 AM
லாரி பேக்கர், ஐ.நா.வின் வாழ்விட விருது பெற்ற கட்டிடக் கலைஞர். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியாவில் குறைந்த செலவில் அழகியலுடன், ஆற்றல் திறன் வாய்ந்த கட்டிட வடிவமைப்பில் வீடுகளை உருவாக்குவதற்காக அர்ப்பணித்தவர். மனிதனுக்கும் இயற்கைக்கும் இருக்கும் உறவைப் போற்றும்வகையில், ஒரு தனித்துவமான கட்டிடப் பாரம்பரியத்தை இந்தியாவில் உருவாக்கிய கட்டிடக் கலைஞர்.
பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் பிறந்து வளர்ந்த லாரி பேக்கர், பர்மிங்காம் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சரில் பட்டப்படிப்பு முடித்தவர். அவர் படிப்பை முடித்தவுடன், இரண்டாம் உலகப் போர் மூண்டது. மிஷனரி மருத்துவக் குழு உறுப்பினராக இருந்த அவர், ஆறு ஆண்டுகள் சீனாவில் ஆம்புலன்ஸ் பிரிவில் பணியாற்றினார்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நிலையில், 1943-ம் ஆண்டு மும்பையிலிருந்து பிரிட்டனுக்குச் செல்வதற்கான கப்பலுக்குக் காத்திருக்கும்போது, அவருக்குக் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தச் சந்திப்பு அவரது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
காந்தியின் கொள்கைகள் அவரிடம் பெரிய தாக்கத்தை உருவாக்கின. இங்கிலாந்துக்குச் சென்று கட்டிடக் கலைஞராகப் பணியைத் தொடர விரும்பிய அவர், ஓராண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். பிறகு, அவர் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். இந்திய அரசு அவருக்கு 1989-ம் ஆண்டு இந்தியக் குடியுரிமையை வழங்கியது. 2007-ம் ஆண்டு, திருவனந்தபுரத்தில் அவர் மறைந்தார்.
இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனி வீடுகள், பல தேவாலயங்கள், பள்ளிகள், தொழுநோய் மருத்துவமனைகள், பல மாநிலக் குடியிருப்புத் திட்டங்கள், மீனவ கிராமங்களை அவர் உருவாக்கியிருக்கிறார்.
அவரது கட்டமைப்புகள் உள்ளூர் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றபடி, தண்ணீர், மின்சாரம் என எந்த விஷயத்தையும் வீணடிக்காமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டன. சென்னையின் தக்ஷிண சித்ரா அருங்காட்சியம், கோயம்பூத்தூரில் அமைந்திருக்கும் சாலிம் அலி மையம், வேலூர் கிறிஸ்த்தவ மருத்துவக் கல்லூரி தேவாலயம் போன்றவை தமிழ்நாட்டில் அவர் வடிவமைத்த முக்கிய கட்டமைப்புகள்.
காந்தியின் ஆலோசனை
இந்தியாவில் நாற்பது ஆண்டுகள் குறைந்த செலவில் ஆற்றல் திறன்வாய்ந்த குடியிருப்புகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்கிய லாரி பேக்கர், காந்தி தன்னிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகளைத் தன் எழுபத்தைந்தாவது வயதில் நினைவுகூரும்போது, இப்படிச் சொல்கிறார்,“நம் நாட்டின் கட்டிடத் தேவைகளைப் பற்றித் தொடர்ந்து அறிவார்ந்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஒரே தலைவர் காந்திஜி. பல ஆண்டுகளுக்குமுன், அவர் பகிர்ந்துகொண்ட கருத்துகள் தற்போதும் பொருத்தமானவையாக இருக்கின்றன.
‘ஒரு சிறந்த கிராமத்தின் சிறந்த வீடுகள் அந்த வீட்டைச் சுற்றி 5 மைல் தொலைவில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களை வைத்து உருவாக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்’ என்ற காந்திஜியின் கருத்து என்னில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தக் கருத்தின் வழியாக காந்தி எதைச் சரியான கட்டுமானத் தொழில்நுட்பம் என்று கருதுகிறார் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
மேற்கில் பிறந்து வளர்ந்த ஓர் இளம் கட்டிடக் கலைஞராக, காந்தியின் இந்தக் கருத்தை ஆரம்பத்தில் இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு கருத்தாகத்தான் நினைத்தேன். அந்தக் காலகட்டத்தில், இந்தக் கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று காந்தி சொல்லவில்லை என்று என்னுடன் நானே வாதித்துகொண்டிருக்கிறேன். ஆனால், தற்போது என் எழுபத்தைந்து வயதில், நாற்பது ஆண்டு காலம் இந்தியாவில் கட்டுமானங்களை உருவாக்கியதில், காந்திஜி அன்று சொன்ன கருத்து சரிதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
அவர் கட்டுமானத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு வார்த்தையுடனும் இப்போது நான் உடன்படுகிறேன். ஒருவேளை, ஒரு கட்டிடக் கலைஞராக என் கற்றலின்மீதும், பயிற்சியின்மீதும் பெருமிதம் கொள்ளாமல் இருந்திருந்திருந்தால், இமய மலைப் பகுதிகள், கேரளாவின் பழங்குடி மலைப் பகுதிகளில் நான் வாழ்ந்த காலங்களில் என்னிடம் காந்தியின் ஞானத்தின் அற்புதமான உதாரணங்கள் இருந்ததை அப்போதே உணர்ந்திருப்பேன். ”
தலைமுறைகள் கடந்த கலைஞர்
லாரி பேக்கர் சென்ற தலைமுறை கட்டிடக் கலைஞர்களை மட்டுமல்லாமல் தொலைநோக்குப் பார்வையுடன் இயங்க விரும்பும் இந்தத் தலைமுறைக் கட்டிடக் கலைஞர்களையும் ஈர்த்துவருகிறார். கட்டிடக் கலைக்கு உண்மையாக இருப்பதையும், குறைந்த செலவில் ஆற்றல் திறன்வாய்ந்த கட்டுமான பொருட்களைப் பயன்படுத்துவதற்கும், சிமெண்ட் பயன்பாட்டைத் தவிர்க்கவும், மரங்களை வெட்டாமல் அவற்றையும் உள்ளடக்கிய கட்டுமானங்களை உருவாக்கவும், விலையுயர்ந்த கட்டுமானங்களைத் தவிர்க்கவும் அடுத்தத் தலைமுறைக்குக் அவர் கற்றுகொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
கட்டுமானத்துக்காகப் பணம், பொருட்கள், இயற்கையின் ஆற்றல் போன்றவற்றை வீணாகச் செலவுசெய்வதற்கும், அலுவலகத்தில் தனியாக அமர்ந்து கட்டுமான வடிவமைப்புச் செய்வதற்கும் அவர் முற்றிலும் எதிராக இருந்தார். எந்த இடத்தில் கட்டுமானத்தை மேற்கொள்கிறோமோ, அந்தப் பகுதியில் வசித்துவரும் மக்களுடன் இணைந்து, அவர்களது வாழ்க்கைமுறையைப் புரிந்துகொண்டு அந்தக் கட்டுமானத்தை உருவாக்குவதுதான் சரியானது என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
அவர் எளிய, நடுத்தர, உயர் பிரிவினர் என அனைத்து தரப்பினருக்குமான கட்டிடக் கலைஞராக விளங்கினார். அவரது கட்டுமான வடிவமைப்பு முறை, இந்தியாவுக்கான முன்னுதரணமான கட்டுமான வடிவமைப்பாக வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT