Last Updated : 22 Jun, 2019 10:48 AM

 

Published : 22 Jun 2019 10:48 AM
Last Updated : 22 Jun 2019 10:48 AM

இணைக் கடன் வாங்குபவரும் உத்தரவாதம் அளிப்பவரும்

உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரோ நெருங்கிய நண்பரோ ஒரு வங்கிக் கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். “நான் வீட்டுக் கடன் வாங்கப் போகிறேன். எனக்கு இணைக் கடன் வாங்குபவராகவோ (Co Borrower) உத்தரவாதம் அளிப்பவராகவோ (Guarantor) இருக்க முடியுமா?” எனக் கேட்டால்? அது குறித்த அடிப்படை விவரங்களை அறிந்துகொள்ளாமல் “அதனால் என்ன? தயாராக இருக்கிறேன்’’ என்று அவசரப்பட்டு ஒத்துக்கொள்ளாதீர்கள்.

எந்த வங்கியுமே வீட்டுக்கடன் போன்ற பெருந்தொகையை அளிக்க வேண்டுமென்றால் தனிநபருக்கு அளிப்பதைவிட ஒன்றுக்கு மேற்பட்ட நபருக்கு அந்தத் தொகையை அளிக்க ஆர்வம் காட்டும்.

ஏனென்றால் ஏதோ ஒரு காரணத்தால் கடன் வாங்குபவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் ‘கோ-பாரோயர்’ எனப்படும் இணைக் கடன் வாங்குபவரிடமிருந்து அதை வசூல்செய்து கொள்ளும் வாய்ப்பு வங்கிக்கு இருக்கிறது. கடன் வாங்குபவர் கோணத்திலும் இது ஒருவிதத்தில் சாதகமானது. இருவருக்கான வருமானத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது அதிகக் கடன் தொகையை வங்கி அளிக்க வாய்ப்பு அதிகம்.

இப்படி இணைக் கடன் வாங்குபவர் யாரும் இல்லை என்றால் குறைந்தபட்சம் யாரையாவது உத்தரவாதம் கொடுக்கச் சொல்லும் போக்கும் பல வங்கிகளிடம் உண்டு. இணைக் கடன் வாங்குபவரும் உத்தரவாதம் அளிப்பவரும் ஒரேமாதிரி கடமைகளும் உரிமைகளும் கொண்டவர்கள் அல்ல.

நீங்கள் இணைக் கடன் வாங்குபவர் என்கிற விதத்தில் வங்கி ஆவணங்களில் கையெழுத்திட்டால் அந்தக் கடனை உரிய நாளில் உங்களிடமிருந்து வசூல் செய்யும் உரிமை வங்கிக்கு உண்டு. “ஐயோ, நான் சும்மா கூட உடன் கடன் வாங்குபவராக கையெழுத்திட்டேன்.

மற்றபடி கடன் தொகையை வாங்கி செலவழித்ததெல்லாம் கடன் கணக்கில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நபர்தான்’’ என்று உங்களால் தப்பிக்க முடியாது. வங்கியைப் பொருத்தவரை (சட்டத்தைப் பொருத்தவரையும்கூட) நீங்களே அந்தக் கடனை வாங்கியதாகத்தான் அர்த்தம்.

வேறு சிலர் இப்படி நினைத்துக் கொள்வதுண்டு. “வேறொருவர் முக்கியமான கடன் வாங்குபவர். நான் இணைக் கடன் வாங்குபவர். எனவே அளித்த கடனில் அதிகபட்சம் பாதித் தொகையைத்தான் என்னிடமிருந்து வங்கி பெற்றுக் கொள்ள முடியும்’’ என்று. இதுவும் தவறு. முழுப் பாக்கியையும் உங்களிடமிருந்து மட்டுமே வசூலித்துக் கொள்ளும் உரிமை வங்கிக்கு உண்டு.

இப்போது உத்தரவாதம் அளிப்பதைப் பற்றிப் பார்ப்போம். உங்கள் உறவினர் அல்லது நண்பரின் வங்கிக் கடனுக்கு நீங்கள் உத்தரவாதம் அளித்தால் உங்களை ‘Guarantor’ என்பார்கள். பொறுப்புறுதியாளர் என்று கொஞ்சம் கரடு முரடாகவும் குறிப்பிடலாம்.

கடன் வாங்குபவர் பாக்கியைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அந்தத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இணைக் கடன் வாங்குபவரிடமிருந்து நேரடியாக வங்கி, கடனை வசூலிக்க முடியும்.

ஆனால் கடன் வாங்கியவர் பாக்கியைச் செலுத்தத் தவறினால் அவரிடமிருந்து வசூல் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு அது முடியாமல் போனால் மட்டுமே உத்தரவாதம் அளித்தவரை வங்கி அணுகலாம்.

உத்தரவாதத்திலும் இரண்டு வகை உண்டு. ஒன்று பிணை கொண்ட உத்தரவாதம் (அதாவது வங்கிக்குப் பாதுகாப்பு!). இதில் உத்தரவாதம் அளிப்பவர் தன் சொத்து ஒன்றைப் பிணையாக வங்கிக்கு அளிப்பார்.

கடன் வாங்கியவர் பாக்கியைச் செலுத்தாமல் போய் உத்தரவாதம் கொடுத்தவரும் கடன் பாக்கியைச் செலுத்த மறுத்தால் (உத்தரவாதம் அளித்தவரால்) பிணையாக வைக்கப்பட்டுள்ள சொத்தை விற்று வங்கி அதிலிருந்து கடன் பாக்கியை வசூலித்துக் கொள்ள முடியும்.

இரண்டாவது வகையான பிணையற்ற உத்தரவாதம் (Unsecured Guarantee) என்பதில் உத்தரவாதம் அளிப்பவர் தனது எந்தச் சொத்தையும் பிணையாக அளித்திருக்க மாட்டார். அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்து, விற்று வசூலிக்க வேண்டுமென்றால் அதற்கு நீதிமன்றத்திடம் வங்கி அனுமதி பெற்றாக வேண்டும்.

உத்தரவாதம் அளிப்பவர் வங்கி கேட்கும்போது பாக்கியைச் செலுத்திவிட்டால் அந்தப் பாக்கி முழுவதையும் அவர் முதன்மைக் கடன் பெற்றவரிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். இதற்கு நீதிமன்ற அங்கீகாரம் உண்டு. ஆனால் இணைக் கடன் வாங்குபவர் கடன் பாக்கியை வங்கிக்கு அளிக்கும் சூழல் ஏற்பட்டால் அதில் பாதியைத்தான் கடன் வாங்குபவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

காரணம் சட்டத்தின் பார்வையில் கடன் வாங்குபவர், இணைக் கடன் வாங்குபவர் ஆகிய இருவருக்குமாகச் சேர்த்துதான் கடன் தொகை அளிக்கப்பட்டிருக்கிறது (ஆனால் இருவருமாகச் சேர்ந்து ஒரு வீட்டை வாங்கியிருந்தால் அதில் இருவருக்கும் பங்கு உண்டு).

வங்கி விரும்பினால் அது அளித்த கடனில் பெரும் பகுதி வசூலாகும்போது, உத்தரவாதம் அளித்தவர் விண்ணப்பித்தால் அவரை அந்த உத்தரவாதத்திலிருந்து விடுவிக்கலாம். ஆனால் இணைக் கடன் வாங்குபவருக்கு இந்தச் சலுகை கிடையாது.

கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ஒரு சொத்தின் மீது உங்களுக்கும் மற்றவருக்கும் உரிமை இருந்து அந்தச் சொத்துக்கான கடனை நீங்கள் இருவருமாகச் சேர்ந்து அடைக்கவிருக்கிறீர்கள் என்றால் இணைக் கடன் வாங்குபவராக இணைத்துக் கொள்ளுங்கள்.

பாசம் என்பதும் இணைக்கும் பாலமாக இருக்கலாம் (உங்கள் மகனின் கல்விக் கடனுக்காக நீங்கள் இணைக் கடன் வாங்குபவராக இருப்பது). மற்றபடி இணைக் கடன் வாங்குபவராகவோ, உத்தரவாதம் அளிப்பவராக இருப்பதற்கு முன்பு நன்கு யோசித்துவிட்டுக் கையெழுத்திடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x