Published : 31 Mar 2018 10:57 AM
Last Updated : 31 Mar 2018 10:57 AM
ந
ன்கு செழித்துப் படர்ந்துயர்ந்த ஆல மரத்தைப் போன்றவை பாரம்பரியம் மிக்க தொன்மையான கட்டிடங்கள். இடிக்கப்பட்ட பாரம்பரிய கட்டிடங்களின் இடிபாடுகளில் சரிவது வெறும் கல்லும் மண்ணும் மட்டும் அல்ல, அங்கு வாழ்ந்தவர்களுடைய கனவுகளும் நினைவுகளும்தாம். அதன் ஞாபகங்கள் மெல்ல மனிதர்களின் மனதை விட்டுக் காலப்போக்கில் அழிந்துவிடும். ஆனால், சில கட்டிடங்களின் வடிவும் நினைவும் நம் மனதில் என்றும் அழியாமல் நீங்காத வடுவாக உறைந்து நிற்கும். அத்தகைய கட்டிடங்களில் ஒன்று சென்னை மவுன் ரோட்டில் இயங்கிவந்த பாட்டா விற்பனை நிலையக் கட்டிடம். அது தற்போது இடிக்கப்பட்டுவருகிறது.
சென்னையின் அடையாளமாக இருந்த எல்.ஐ.சி. கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பாகவே சென்னையின் அடையாளமாக இது இருந்துள்ளது. பாரம்பரிய கட்டிடமாக அறிவிக்கப்பட்டிருந்த பல கட்டிடங்கள் சென்னையில் கேள்வியின்றி இடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது இந்தக் கட்டிடமும் இணைந்துள்ளது. ஆனால், இதை இடிப்பவர்கள் இதை முன்பக்கமிருந்து இடிக்காமல் பின்பக்கமாக இருந்து இடிக்கிறார்கள். அதன் முகப்புச் சுவர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்தக் கட்டிடம் எந்தச் சுவடுமின்றி முற்றிலும் துடைத்து எறியப்பட்டுவிடும்.
138 வருடப் பாரம்பரியம்
சரியாகச் சொல்வது என்றால், இந்தக் கட்டிடம் 138 வருடப் பாரம்பரியம் கொண்டது. மின்தூக்கியும் மின்விசிறியும் ஐஸ் தயாரிக்கும் இயந்திரமும் சுடுநீர் குழாயும் கொண்ட முதல் கட்டிடம் என்ற பெருமை இதற்கு உண்டு. கோர்சிகாவைச் சேர்ந்த கியாகோமோ டி ஏஞ்சலிஸ் 1880-ம் வருடம் இந்த இடத்தில் மெர்சோன் பிரான்சைஸ் எனும் தின்பண்டங்கள் விற்பனையகத்தை ஆரம்பித்தார்.
முதலில் அவர் அந்த இடத்தில் தின்பண்டங்களும் ஐஸ் கட்டிகளும் உணவு வகைகளும் தயாரிக்கப் போவதற்குத்தான் அனுமதி வாங்கியுள்ளார். அதற்காக அங்கு ஒரு நவீன சமையலறையை நிர்மாணித்தார். அந்த வகைச் சமையலறை அக்காலத்தில் தென்னகத்தில் எங்கும் இல்லை.
அந்தக் கடையின் பெருமையும் சுவையும் விரைவில் சென்னை முழுவதும் பரவியது. அப்போது ஏஞ்சலிஸ், தன்னால் பெரிய விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் கேட்டரிங் சர்வீஸ் செய்ய முடியும் என அறிவித்தார். இது அவர் தொழிலின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல; அந்தச் சிறிய கட்டிடத்தின் விரிவாக்கத்துக்கும் வித்திட்டது. ஏனென்றால், அந்தக் காலத்தில் பெரும் புகழோடு விளங்கிய கன்னிமாரா போன்ற ஹோட்டல்களில்கூட இந்த கேட்டரிங் வசதி கிடையாது.
ஏஞ்சலிஸ் தனது இந்தச் சேவைக்கு ஒரு தலைசிறந்த பிரெஞ்ச் சமையல்காரரைப் பயன்படுத்தினார். அந்தத் தரமான உணவின் வாசனை அப்போது ஆளுநராக இருந்த அம்ப்தில்லின் நாசியை அடைந்தது. அதன்பின் ஏஞ்சலிஸ் ஆளுநரின் நிகழ்ச்சிகளுக்கும் அவர் அளிக்கும் விருந்துகளுக்கும் ஆஸ்தான கேட்டரிங் ஒப்பந்ததாரராக மாறினார். அதனால் அவரது கேட்டரிங் சர்வீஸ் சென்னையில் உள்ள பெரும்புள்ளிகள் அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறியது.
சென்னையின் முதல் ஆடம்பர விடுதி
இந்த அசுர வளர்ச்சி ஈட்டிக்கொடுத்த செல்வத்தால் 1906-ம் வருடம் அந்த இடத்தில் ஒரு சிறிய ஹோட்டலை நிறுவினார். அந்த ஹோட்டல் அடுத்த இரண்டு வருடங்களில் சென்னையின் முதன்மையான ஹோட்டலாக மாறியது. அப்போது மௌண்ட்பேட்டன் பெயரிலிருந்த இந்தச் சாலையைப் பார்த்தவண்ணம் இருந்த அதன் நீண்ட வராண்டா உருக்கிய இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட அலங்கார தோரண வாயில்களைக் கொண்டிருந்தது. இந்த வராண்டாவை அடுத்து மெளண்ட் சாலை, பிளாக்கர்ஸ் சாலை ஆகிய இரு சாலைகளைப் பார்த்த வண்ணம் தங்கும் அறைகள் இருந்தன.
இந்த அறைகள்தாம் சில வருடங்கள் முன்பு வரை சிவா புத்தக கடை போன்று பல சிறு கடைகளாக இருந்தன. இதன் தங்கும் அறைகள் அனைத்தும் குளியலறையையும் கழிவறையையும் கொண்டிருந்தன. அதன் குழாய்களில் எப்போதும் சுடு தண்ணீர் வந்தது அப்போது பெரிதாகப் பேசப்பட்டது.
இதன் அறைகளுக்கும் பிளாக்கர்ஸ் சாலைக்கும் இடையே உருவாக்கப்பட்டிருந்த பார்சியன் தோட்டத்தில் இருந்த ரோஜாக்களும் அங்கு வழங்கப்பட்ட மதுபானமும் சென்னையில் அப்போது மிகவும் பிரசித்தி பெற்றவை. ஷாப்பிங் முடித்துத் திரும்பும் சீமாட்டிகள் அந்த ஹோட்டலில் கிடைக்கும் பிரெஞ்ச் உணவு வகையையும் இத்தாலிய உணவு வகையையும் சுவைக்கத் தவறியதே இல்லை. மின்தூக்கி வசதி இருந்ததால் ஏஞ்சலிஸ் தன்னுடைய ஹோட்டலின் மீது மாடித் தோட்ட வசதியையும் (ரூஃப் கார்டன்) உருவாக்கியிருந்தார்.
80 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட ஒரு பில்லியர்ட் விளையாட்டு அறையும் அந்த ஹோட்டலில் இருந்துள்ளது. பொழுதுபோக்குவதற்கு கிளப்கள் எதுவும் இல்லாத அந்தக் காலகட்டத்தில், இதை விட்டால் வேறு வழியே என்ற நிலைதான் மேல்நாட்டவருக்கு இருந்திருக்கிறது. 1934-ம் வருடம் சென்னைக்கு விளையாட மெரில்போன் கிரிக்கெட் கிளப் அணி (இங்கிலாந்து கிரிக்கெட் அணி அப்போது அப்படிதான் அழைக்கப்படும்) கூட இந்த ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறது.
அந்தக் காலத்திலேயே விருந்தாளிகளை அருகில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து அழைத்து வருவதற்கு மோட்டார் வாகன வசதியை இந்த ஹோட்டல் கொண்டிருந்தது. 1937-ம் வருடம்வரை, அதாவது மறு சீரமைப்பு செய்யப்பட்ட கன்னிமாரா ஹோட்டல் திறக்கப்படும்வரை, சென்னையின் ஹோட்டல்களில் முதலிடத்தில் ஏஞ்சலிஸ் ஹோட்டல் இருந்துள்ளது.
போஸோட்டோ & சன்ஸ் ஆக மாறிய ஏஞ்சலிஸ்
ஏஞ்சலிஸ் ஃபிரான்சிலிருந்து சென்னை வந்ததால் அவர் கோர்சிகாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். ஆனால், அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். அவர் தான் பிரெஞ்சு நாட்டைச் சார்ந்தவராகக் கருதப்படுவதைக் குறித்துப் பெரிதும் அலட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. சொல்லப்போனால் அவர் வீட்டில் கூட இத்தாலியில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடுவதைத்தான் விரும்பியிருக்கிறார்.
ஏஞ்சலிஸ் ஒரு சுவாரசியமான மனிதராக இருந்தவர் எனச் சொல்லப்படுகிறது. அவர் இயந்திரவியலில் நிபுணத்துவம் மிக்கவராகத் திகழ்ந்தார். ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்தில் இருந்து சரியாக எழு வருடங்கள் கழித்து, ஏஞ்சலிஸ் தானே ஒரு வானூர்தியை 1909-ம் வருடம் வடிவமைத்துப் பறந்துள்ளார். பின் 1909-ம் வருடம் பல்லாவரத்தில் பொதுமக்களின் முன்னிலையில் அவர்களிடம் கட்டணம் வசூலித்துப் பறந்துள்ளார்.
இவர் பறந்தது மிகப் பெரிய கண்காட்சி போல் பார்க்கப்பட்டுள்ளது. இவர் பல்லாவரத்தில் பறந்த செய்தி அன்றைய செய்தி நாளிதழ்களில் செய்தியாக வந்துள்ளது. அதைச் செய்தியாக எழுதியவர் சுப்ரமணிய பாரதி. பறப்பதற்குமுன் எப்போதும் கூட்டத்தை நோக்கி, தன்னுடன் விமானத்தில் பயணிக்கும் தைரியம் கொண்டவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என்று கேட்பார். ஆனால், அந்தப் பயணங்களில் ஒருமுறை மட்டும் ஒருவர் தைரியமாக அவருடன் பயணித்துள்ளார்.
அதற்குப் பிறகு ஹோட்டல் தொழிலை அவருடைய மகன் கார்லோ கவனிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அந்த ஹோட்டல் டி ஏஞ்சல்ஸ் & சன்ஸ் என்று அழைக்கப்பட்டுள்ளது. 1920-ம் வருடம் கார்லோ வாத்து வேட்டைக்குச் சென்றபோது துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி இறந்துவிட்டார். அதன் பிறகு அமெரிக்காவில் இருந்த எஞ்சல்ஸின் மற்றொரு மகன் லூயிஸ் சென்னைக்குத் திரும்பி அந்த ஹோட்டலைக் கவனித்துள்ளார்.
ஆனால், லூயிஸுக்கு அந்தத் தொழிலில் பெரிய ஈடுபாடு இல்லை. எனவே, அந்தக் தொழிலைச் சரியாகக் கவனிக்காமல் குறை சொல்லிக் கொண்டே இருந்தார். இறுதியில் அதை விற்று விடுவது என முடிவு செய்து அதை விற்கும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் அந்த ஹோட்டலை சென்னையில் வசித்த இத்தாலியரான போஸோட்டோ என்பவருக்கு விற்றார். அதன் பிறகு அந்த ஹோட்டல் போஸோட்டோ & சன்ஸ் ஆக மாறியது.
ஹோட்டல் விற்கப்பட்டாலும் டி’ ஏஞ்சல்ஸ் தான் மறையும் வரை சென்னையில்தான் வாழ்ந்துள்ளார். ஆனால், 1950-ம் வருடம் இரண்டாம் உலகப் போரின்போது போஸோட்டோ இத்தாலிக்குச் சென்றுவிட்டார். அவர் செல்லும் முன் இப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஹோட்டலை வெறும் 15,000 ரூபாய்க்குப் பால் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த முசுலிபா சௌதரி என்பவருக்கு விற்றுள்ளார்.
1970-களில் பாட்டா நிறுவனத்தின் விற்பனை மையமாக இது மாறியது. இப்போது 2018-ல் எந்த அடையாளமுமின்றி மண்ணோடு மண்ணாகியுள்ளது.
ஏஞ்சல்ஸின் மகன் லூயிசின் பேரன் ஜெஃபர்ரிஸ் ஈவான்ஸ் டி ஏஞ்சலிஸ் தற்போது சிலியில் வசித்து வருகிறார். இந்த நிகழ்வைப் பற்றிக் கேட்கப்பட்தற்கு “நகரங்கள் தங்கள் வரலாற்றை மதிக்க வேண்டும். என் தாத்தாவின் ஹோட்டல் இடிக்கப்படுவது எனக்குப் பெருந்துயரை அளிக்கிறது” என்று சொல்லி மௌனத்தில் ஆழ்ந்தவர், தன் தாத்தா தமிழை நன்கு சரளமாகப் பேசுவார் என்று சொல்லி அவர் நினைவுகளில் மூழ்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT