Published : 23 Sep 2017 10:44 AM
Last Updated : 23 Sep 2017 10:44 AM
சென்னை மாநகரத்தின் இதயப் பகுதியான அண்ணா சாலையும், வாலாஜா சாலையும் சந்திக்கும் புள்ளிக்கு அருகில் உள்ளது எல்லீஸ் சாலை. அதன் மறுமுனை திருவல்லிக்கேணி பாரதி சாலைக்கு அருகில் சென்று முடிகிறது. இதற்கு இணையாக காயிதே மில்லத் சாலை வடபகுதியில் செல்கிறது. இந்தச் சாலை மட்டுமல்லாது இந்தப் பகுதியே எல்லீஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது.
யார் இந்த எல்லீஸ்?
கிழங்கிந்தியக் கம்பனி ஆட்சியில் அதிகாரியாகப் பணியாற்றிய பிரான்சிஸ் வைட் எல்லிஸின் (Francis Whyte Ellis) நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயர் இந்தச் சாலைக்குச் சூட்டப்பட்டது. சமீபத்தில் சென்னையில் ஆங்கிலேயர்களின் பெயரிலான சாலைகளின் பெயரை மாற்ற மாநகராட்சி முடிவெடுத்தது. இதற்காக 50 சாலைகள் முதலில் பட்டியலிடப்பட்டன. அவற்றுள் இந்த எல்லீஸ் சாலையும் ஒன்று. அதன்படி சில சாலைகளின் பெயரும் மாற்றப்பட்டன. ஆனால் எல்லீஸ் சாலையின் பெயர் மாற்றும் முடிவே கைவிடப்பட்டது.
காரணம், எல்லீஸ் கிழக்கிந்தியக் கம்பனி அதிகாரி மட்டுமல்ல. அவர் தமிழ் அறிஞர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி. புறநானூறு, நாலடியார், சீவக சிந்தாமணி, பாரதம், பிரபுலிங்கலீலை முதலான நூல்களைக் கையாண்டு அவர் குறளுக்கு விளக்கவுரை எழுதியதாக வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தனது கட்டுரையில் கூறுகிறார்.
1777-ல் இங்கிலாந்தில் பிறந்த எல்லீஸ், 1796-ல் கிழக்கிந்தியக் கம்பெனிப் பணிக்காகச் சென்னை வந்தர். முதலில் எழுத்தராகப் பணியாற்றினார். பிறகு வருவாய்ச் செயலாளர் அலுவலக உதவியாளர், உதவி வருவாய்ச் செயலாளர், வருவாய்ச் செயலாளர் எனப் படிப்படியாகப் பதவியுர்வு அடைந்தார். மாசிலிப் பட்டிணத்தின் ஜில்லா நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 1809-ல் சென்னை மாகாண நிலச் சுங்க ஆட்சியராகவும் 1810-ல் சென்னை மாகாண ஆட்சியராகவும் பதிவியுர்த்தப்பட்டார்.
எல்லீசன் ஆன எல்லீஸ்
எல்லீஸ், சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த காலகட்டத்தில் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டு வந்திருக்கிறது. அதைப் போக்கும் பொருட்டு பல கிணறுகளை வெட்டுவித்திருக்கிறார். அந்தக் கிணறுகளில் ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் வெட்டப்பட்டது. இந்தக் கிணறு 1818-ம் ஆண்டு வெட்டப்பட்டது. கிணற்றின் கைப்பிடிச் சுவரில் அவர் ஒரு கல்வெட்டைப் பதிப்பித்திருக்கிறார். அந்தக் கல்வெட்டில் திருக்குறள் பொருட்பாலில் வரும் கீழ்க் கண்ட குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார் எல்லீஸ். “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்/வல்லரணு நாட்டிற் குறுப்பு”. இதிலிருந்து அவரது தமிழ்க் காதலை உணர்ந்துகொள்ள முடியும். இப்போது இந்தக் கல்வெட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது என்ற கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவனின் குறிப்பைத் தன் கட்டுரையில் மேற்கோள் காட்டுகிறார் வேங்கடாசலபதி.
கேமரா உபகரணங்களின் சந்தை
மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் புனித ஜார்ஜ் கோட்டையில் 'சென்னைக் கல்விச் சங்கம்' என்ற ஒரு கல்லூரியைத் தமிழ்ப் பெயரில் 1812-ல் நிறுவினார். தமிழ் மீதிருந்த பற்று காரணமாகத் தன் பெயரை தமிழ் உச்சரிப்புக்குத் தகுந்தாற்போல் எல்லீசன் என மாற்றிக்கொண்டார். இன்னும் பல தமிழ்த் தொண்டாற்றும் முன்பு தனது 41-வது வயதில் எல்லீஸ் இறந்தது தமிழுக்குப் பெரும் இழப்பு. இந்த முன்னோடியைக் கவுரவிக்கும் ஒரே ஒரு அடையாளம் இந்தச் சாலை மட்டுமே.
இன்று இந்தச் சாலை கேமராக்கள், ஃபோட்டோ ஃப்ரேம்ஸ், விளையாட்டுக் கேடயங்கள் போன்றவற்றுக்கான தமிழ்நாடு அளவிலான சந்தையாக மாறியிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான கேமரக் கலைஞர்கள் இங்கு தங்கள் வேலைக்கான உபகரணங்கள் வாங்குவதற்காக இங்கு வருகிறார்கள். வார நாட்களில் எப்போதும் நெருக்கடியாகவே இந்தச் சாலை இருக்கும். நிறுவனப் பெயர்ப் பலகை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தச் சாலையில் அதிகம். இந்தச் சிறிய சாலைக்குள்ளே விளக்காலான நிறுவனப் பெயர்ப் பலகைகள் வடிவமைப்பு, பிரிண்ட் என முழுமையாகத் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்குத் தரப்படுகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்ட தி இந்து (தமிழ்) அலுவலகமும் இந்தச் சாலையின் தொடக்கத்தில்தான் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT