Published : 03 Mar 2018 12:57 PM
Last Updated : 03 Mar 2018 12:57 PM

வீட்டுக் கடன் வரிச் சலுகைகள்

ங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி கனவு இல்லத்தை வாங்கிய பின், மாதத் தவணையைச் சமாளிக்க பிற செலவுகளை கட்டுப்படுத்திக்கொள்வதே வழக்கம். வருமான வரியில் சலுகை என்பது வரை மட்டுமே நமது நிதி சார்ந்த சிந்தனை இருக்கும், ஆனால் வீட்டுக் கடன் வாங்கும்போது இதற்கும் மேற்பட்டு பல அறிந்திராத வரிச் சலுகைகள் உள்ளன.

வருமான வரிச் சட்டத்தில் பிரிவு 24, 80C, 80EE ஆகியவற்றின் படி திரும்பச் செலுத்தப்படும் வீட்டுக் கடனில் அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டுக்கும் வரி விலக்கு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்கப்படுகிறது.

இந்த வரிச் சலுகை குடியிருப்பு சொத்து மீது மட்டுமே பெறக் கூடியது. இரண்டு பேர் இணைந்து சொத்து வாங்கும்போது, இருவருமே இணை உரிமையாளர் மற்றும் இணைந்து கடன் வாங்கியவர்களாக இருந்தால் மட்டுமே வரிச் சலுகை பெற முடியும்.

வீட்டில் குடியேறிய பின்பே இந்தச் சலுகையைப் பெற முடியும். அசல் தொகையில் இந்தச் சலுகையைப் பெற முடியாவிட்டாலும், குடியேறும் முன்பு கட்டப்பட்ட வட்டித் தொகையைப் பிரிவு 24-ன் கீழ் ஐந்து தவணையில் திரும்பப் பெறலாம். வரிச் சலுகைப் பயனைப் பெற, ஐந்து வருடத்துக்குள் குடியேறுவது நலம். அவ்வாறு முடியாத தருணத்தில், ஒரு வருடத்துக்கு அதிகபட்ச வரிச் சலுகையாக முப்பதாயிரம் மட்டுமே (2 லட்சத்துக்குப் பதில்) பெற முடியும்.

பிரிவு 24-ன் கீழ் வீட்டுக் கடன் செயலாக்கக் கட்டணத்துக்கு விலக்கும், பிரிவு 80C கீழ் முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்குக்கான அனுமதியும் உண்டு.

வங்கியில் வாங்கப்பட்ட வீட்டுக் கடன் தவிர உறவினர் மற்றும் நண்பர்களிடமும் கடன் பெற்றிருப்போம். வட்டி கட்டியதற்கான சாட்சியைச் சமர்ப்பித்தால், இந்த வட்டியின் மீதும் விலக்கு பெறலாம். ஆனால், திரும்பச் செலுத்தப்படும் அசல் தொகை மீது பிரிவு 80C-ன் கீழ் மட்டுமே விலக்கு பெற முடியும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்து இருப்பின், எத்தனை சொத்துக்கள் வரை இந்த வரிச் சலுகை பெறலாம் என்ற வரையறை அரசங்கத்தால் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துக் கடன் திரும்பச் செலுத்துகையில், கூட்டு வரிச்சலுகையின் மேல் உச்ச வரம்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்தில், அசல் தொகை திரும்பச் செலுத்துகையில், பிரிவு 80C-ன் கீழ் ஒன்றரை லட்சம் வரை சலுகை பெறலாம். தானே குடியிருக்கும் காரணத்துக்காக வாங்கப்படும் வீட்டுக்கு, இரண்டு லட்சம் வரை வரிச் சலுகை உண்டு. இதுவே வாடகைக்கு விடப்படும் போது, வீட்டுக் கடன் மீது கட்டப்படும் வட்டி அனைத்தும் வரிச் சலுகையாகத் திரும்பப் பெற முடியும்.

சிறிது சிறிதாகச் சேமித்து வைத்து கனவு இல்லத்தை வாங்குகையில், சிறு அளவில் சலுகைகள் கிடைத்தால்கூட சந்தோஷத்துக்கு அளவே இல்லைதான். இவ்வளவு சலுகைகள் இருக்க, வீடு வாங்க இதைவிடச் சரியான தருணம் வாய்க்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x