Published : 04 May 2019 10:51 AM
Last Updated : 04 May 2019 10:51 AM
வீட்டுக்கடனை முழுமையாக அடைத்துவிடுவது என்பது அனைவருக்கும் ஒரு பெரும் ஆசுவாசமான விஷயம். சிலர் திட்டமிட்ட காலத்தைவிட முன்பாகவே வீட்டுக்கடனை அடைத்துவிடுவார்கள்.வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை முழுமையாக அடைக்கும்போது நாம் சில விஷயங்களை மனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
வங்கிக்குச் சேர வேண்டிய முழுத் தொகையையும் செலுத்தியவுடன் உங்களிடமிருந்து வீடு தொடர்பாக அவர்கள் பெற்ற அத்தனை அசல் ஆவணங்களையும் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பார்கள். விற்பனைப் பத்திரம், பட்டா, தாய்ப் பத்திரம், வில்லங்கமில்லாச் சான்றிதழ் போன்ற பல ஆவணங்களும் இதில் அடக்கம்.
இவற்றையெல்லாம் பெற்றவுடன் அதற்கான ரிஜிஸ்டரில் நீங்கள் கையெழுத்திட வேண்டியிருக்கும் (வீட்டுக்கடன் மற்றும் வீடு இரண்டு மூன்று பேரின் பெயர்களில் இருந்தால் அத்தனை பேரும் கையெழுத்திட வேண்டும்). அப்படிக் கையெழுத்திடும்போது ‘எல்லா ஆவணங்களையும் பெற்றுக் கொண்டேன்.
அவை நல்ல நிலையில் உள்ளன’ (All documents were received in good condition) என்றும் எழுதிக் கொடுக்கச் சொல்வார்கள். சிலர் அவசரத்தில் ஆவணங்களைச் சரிபார்க்காமல் கையெழுத்திடுவார்கள். சிறிது அதிக நேரம் ஆனாலும் நீங்கள் கொடுத்த அத்தனை ஆவணங்களும் (ரிஜிஸ்டரில் காணப்பட்டுள்ள பட்டியலின்படி) உங்கள் கைக்கு வந்து சேர்ந்ததா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஏனென்றால், கையெழுத்திட்ட பிறகு ஏதாவது ஆவணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படவில்லை என்று நீங்கள் கூறினால் வங்கி பொறுப்பேற்றுக் கொள்ளாது.
“குறிப்பிட்ட வீட்டின் மீது இனி வங்கிக்கு எந்தச் சார்பும் இல்லை’’ என்ற தடையில்லாச் சான்றிதழை உங்கள் வங்கியிடமிருந்து பெறலாம். வங்கிக்குச் சேர வேண்டிய முழுத் தொகையையும் நீங்கள் செலுத்தி விட்டீர்கள் என்பதற்கான சான்றிதழ் இது. இந்தச் சான்றிதழில் உங்கள் வங்கிக் கணக்கையும் வாங்கிய வீட்டின் முகவரியையும் வீட்டுக்கடன் முடிவடைந்த தேதியையும் ஆகியவற்றையும் சேர்க்கச் சொல்லுங்கள்.
நீங்கள் ஒழுங்காக வீட்டுக் கடனைக் கட்டியிருந்தால் உங்கள் சிபில் ஸ்கோர் அதிகமாகும். இதன் காரணமாக வருங்காலத்தில் நீங்கள் வங்கிக் கடன் பெறுவது எளிதாக இருக்கும். சில வங்கிகள் தங்களிடமுள்ள முடிக்கப்பட்ட வீட்டுக்கடன் தொடர்பான விவரங்களைக் கொஞ்சம் மெதுவாகவே சிபில் அமைப்புக்கு அறிவிக்கும். இதனால் உங்கள் CIBIL ஸ்கோர் உடனடியாக அதிகரிக்காது போகலாம்.
நீங்கள் வீட்டுக் கடனைத் திருப்பி அளித்ததை சிபில் அமைப்புக்கு உடனடியாகக் தெரிவிக்க வேண்டுமென்று வங்கிக்கு அழுத்தம் கொடுங்கள். அதுவும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே நீங்கள் வீட்டுக் கடன் முழுவதையும் செலுத்தியிருந்தால் அதை உடனடியாக சிபில் அமைப்புக்குத் தெரியப்படுத்தச் சொல்லுங்கள்.
இப்போதெல்லாம் பல வங்கிகள் வீட்டுக் கடனை வழங்கும்போது வீட்டை அடமானம் வைப்பதற்கு ஒப்பாகப் பதிவாளர் அலுவலகத்தில் இதைப் பதிவுசெய்து கொள்கிறார்கள். இதன் காரணமாக வீட்டின் உரிமையாளர் வங்கிக் கடனையும் பெற்றுக் கொண்டு, அந்த வீட்டை வேறு யாருக்கும் விற்கவும் முடியாது (அசல் ஆவணங்களை வங்கிப் பெற்றுக் கொண்டு விடுகிறது.
என்றாலும் இது அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கை). இந்த நிலையில் வீட்டுக் கடனை முழுவதும் கட்டி முடித்தவர்கள் ஆவணங்களை மட்டும் பெற்றுக் கொண்டு சும்மா இருந்துவிடக் கூடாது. வருங்காலத்தில் நீங்கள் விற்பது தடைபடாமல் இருக்க பதிவு செய்யப்பட்டுள்ள அடமானத்தை நீக்க வேண்டும்.
இதற்கு நீங்களும் வங்கி அதிகாரி ஒருவரும் பதிவாளர் அலுவலகத்துக்கு ஒருமுறை செல்ல வேண்டியிருக்கும் (இந்த அடமானம் அங்கு நீக்கப்பட்டாலும் அது அவர்களது அனைத்து ஆவணங்களிலும் பிரதிபலிக்க ஓரிரு வாரங்கள் ஆகலாம். அதற்குப் பிறகுதான் நீங்கள் வீட்டை விற்க முடியும்).
இப்போதெல்லாம் வழக்கறிஞர் ஒருவரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறது வங்கி. இதற்கான அவசியம் விளக்கப்படவில்லை. வழக்கறிஞருக்கான தொகையை வீட்டின் உரிமையாளர்தான் தர வேண்டியிருக்கும்.
நீங்களும் ஓர் அதிகப்படி பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கலாம். மேற்படி நடவடிக்கைகளெல்லாம் நடைபெற்ற கொஞ்ச காலத்திற்குப் பிறகு ஃப்ரஷ்ஷாக ஒரு ‘வில்லங்கமில்லாப் பத்திரத்தை’ (Non Encumbrance Certificate) சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT