Published : 13 Apr 2019 01:13 PM
Last Updated : 13 Apr 2019 01:13 PM
வீட்டுக் கட்டுமானம் என்பது ஒரு கல்யாணம் முடிப்பதைப் போன்றது எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் வீடு கட்டுவதைத் திட்டமிட்டுச் செய்தால் அந்த வேலை எளிமையானதுதான்.
கட்டுமான வேலைகள், அனுமதி போன்ற வேலைகளை முறையாகப் பிரித்துச் செயல்பட்டால் வீட்டு வேலையைக் குறித்த காலத்துக்குள் முடிக்க முடியும்.
வீடு கட்டுவதற்கு முன்பு வீட்டின் வரைபடத்தை உருவாக்க வேண்டும். இருக்கும் இடத்தில் இவ்வளவு அளவு வீடு கட்டப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எத்தனை படுக்கையறை, சாப்பாட்டு அறை, வரவேற்பறை போன்ற அறைகளின் எண்ணிக்கைகளையும் முடிவுசெய்துகொள்ள வேண்டும்.
இதை முடிவுசெய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து ஆலோசிக்க வேண்டியதுஇ அவசியம். வரைபடத்தை முடிவுசெய்த பிறகு குடும்ப உறுப்பினர்கள் யாராவது மாற்றம் சொன்னால் அதை உட்படுத்துவது சிரமமான காரியமாக இருக்கும்.
அறைகளை முடிவுசெய்த பிறகு அவை எங்கு அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அறைகளில் சுவருடன் அலமாரி அமைக்க வேண்டுமென்றால் அது எத்தனை வேண்டும், எந்தெந்த அறைகளில் அமைக்க வேண்டும் என்பதையும் முடிவுசெய்துகொள்ள வேண்டும். பொருட்களைப் போட்டுவைக்கப் பரண் வேண்டுமென்றாலும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக வீடு அமையவிருக்கும் இடத்தின் மண் தரத்தைப் பரிசோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. கட்டும் இடத்தைத் தேர்வுசெய்த பின்னால் அந்த இடத்தில் உள்ள மண் கட்டுமானத்திற்கு உகந்ததா எனப் பரிசோதனைக்கு உட்படுத்துவது முறையாகும்.
கட்டிடப் பணிகள் தொடங்க இருக்கும் இடத்தில் நான்கு, ஐந்து இடங்களில் துளையிட்டுக் கீழே உள்ள மண்ணை எடுத்து மண் பரிசோதனைக்கென இருக்கும் ஆய்வகங்களில் அதைப் பலவிதமான சோதனைக்கு உட்படுத்துவார்கள்.
உதாரணமாக அந்த மண் எவ்வளவு அளவு எடை தாங்குகிறது என்பதை அழுத்தம் கொடுத்துச் சோதிப்பார்கள். அதன் அடிப்படையில் கட்டிடத்தின் அடித்தளத்தை ஆழப்படுத்தப் பரிந்துரைப்பார்கள். எவ்வளவு ஆழத்திற்குத் துளையிடுவது என்பது இடத்திற்கு இடம் மாறுபடும்.
உதாரணமாகச் சென்னையைப் பொறுத்தவரை அடையார் பகுதியில் 12-லிருந்து 14 மீட்டர் வரை துளையிட்டுச் சோதனையிட வேண்டும். வேளச்சேரி பகுதியில் 8 மீட்டர் ஆழம் வரை துளையிடுவார்கள். மண் பரிசோதனைகளைச் செய்து தருவதற்கு தமிழ்நாட்டில் பல தனியார் ஆய்வகங்கள் இருக்கின்றன.
மண் பரிசோதனை முடிவின் அடிப்படையில்தான் கட்டுமானப் பொறியாளர் கட்டிடப் பணிகளை வடிவமைப்பார். மண் பரிசோதனைதான் கட்டுமானத்திற்கு ஆதாரமானது. மண்ணில் உள்ள ஈரப் பதத்திற்குத் தகுந்தமாதிரி கட்டுமானத்தை ஆழப்படுத்த வேண்டும்.
சில இடங்களில் அடித்தளத்தில் ஈர மண்ணாக இருக்கும் பட்சத்தில் பாறை தட்டுப்படும் வரை முழுவதும் தோண்டி மண்ணை எடுத்துவிட்டுக் கட்டுமான உறுதி தரும் மண்ணை இட்டு நிரப்பிப் பிறகு அடித்தளம் இட வேண்டும்.
கட்டுமானத்தின் முக்கியமான அம்சம் செலவை வரையறுப்பது. இது வீடு அமையப் போகும் பரப்பு, கட்டுமான முறையையும் பொறுத்தது. வீட்டுத் தளத்துக்கு என்ன கல் பயன்படுத்தப் போகிறோம், கதவு, ஜன்னல், நிலைக்கு என்ன மரம் பயன்படுத்தப் போகிறோம் என்பதையும் முடிவுசெய்துகொள்ள வேண்டும்.
இதை எல்லாம் ஓரளவு முன்பே தீர்மானித்தால் பட்ஜெட்டை முடிவுசெய்துகொள்வது எளிது. அதன் மூலம் அதற்கான தொகையை முன்பே நாம் தயார்செய்து கொண்டால் கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடக்கும். திட்டமிடாமல் வேலையைத் தொடங்கினால் பணப் பற்றாக்குறையால் பணிகள் பாதியில் நின்றுவிடும்.
கட்டுமானப் பொருட்களைத் தீர்மானித்த பிறகு தேவைக்குத் தகுந்தாற்போல் வாங்கிக் கொள்ள வேண்டும். சில பொருட்களை மொத்தமாக வாங்கிச் சேமித்துக்கொள்ள வேண்டியிருக்கும். சிலவற்றைச் சேமித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
அதை பகுத்தறிந்து செய்ய வேண்டும். அதுபோல் கட்டுமான நிலைகளுக்குத் தகுந்தாற்போல் கட்டுமானப் பொருட்களை வாங்க வேண்டும். கட்டுமான நிலைகளில் உரிய இடைவெளியும் இட வேண்டும்.
கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே உரிய அரசுத் துறையில் கட்டுமானத்துக்கான அனுமதியை வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் மின்சார வாரியத்தில் விண்ணப்பித்து மின்சார இணைப்பையும் பெற வேண்டும்.
இந்த இரண்டு அனுமதிகளை கட்டுமானத்துக்கு முன்பே பெற்றுவிட வேண்டும். மின்சார வசதி கட்டுமான வேலைக்கு உதவும். கட்டுமான அனுமதி வாங்காவிட்டால் கட்டிக் கொண்டு இருக்கும்போதும் கட்டுமானப் பணிகளிலும் சிக்கல் வர வாய்ப்புள்ளது.
கட்டுமானப் பணிகளை மேற்பார்வைசெய்வது அவசியமான ஒன்று. நேரடிக் கண்காணிப்பில் ஈடுபட முடியாதவர்கள் அதைக் கண்காணிக்க ஆட்களை நியமிக்கலாம். வீட்டின் அடித்தளம், பீம், கான்கிரீட் அமைக்கும்போது தொழில் தெரிந்த ஒருவர் ஆலோசனை அவசியமான ஒன்று.
-பிரம்மா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT