Published : 13 Apr 2019 01:12 PM
Last Updated : 13 Apr 2019 01:12 PM
வீட்டுக் கட்டுமானப் பணிகளுள் முக்கியமானது மேற்புறப் பூச்சு. என்னதான் பார்த்துப் பார்த்துக் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டாலும் இந்த நிலையில்தான் வீடு எழிலுடன் பூர்த்தி அடையும். அந்தப் பூச்சில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றிப் பார்க்கலாம்.
பொதுவாக ஒவ்வொரு பகுதிக்கும் தகுந்தமாதிரி பூச்சு மாறுபடும். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கக் கூடாது. வெளிப்புறச் சுவர், உள்புறச் சுவர் போன்றவற்றுக்கு ஏற்ப சிமெண்ட், மணல் ஆகியவற்றின் விகிதம் வித்தியாசப்படும்.
பொதுவாக ஒரு கட்டிடத்தின் உள்புறச் சுவரின் பூச்சு வெளிப்புறச் சுவரின் பூச்சைவிட அதிகத் தரத்தில் அமைய வேண்டும். வெளிப்புறச் சுவர் சற்று சொரசொரப்பாக இருந்தால்கூடப் போதும்.
ஆனால் உள்புறம் சொரசொரப்பின்றி மிருதுவாக அமைய வேண்டும். ஆகவே அதற்கு ஏற்றபடி மணலையும் சிமெண்டையும் கலந்து கான்கிரீட்டை உருவாக்குகிறார்கள்.
சுவர்களின் உள்புறச் சுவரின் பூச்சுக்கு சிமெண்ட் ஒரு பங்கு என்றால் மணல் நான்கு பங்கு கலப்பதாகச் சொல்கிறார்கள்.
அதே நேரத்தில் வெளிப்புறச் சுவரின் பூச்சுக்கு சிமெண்ட் ஒரு பங்கு போடும்போது மணலை ஐந்து பங்கு போடுவதாகச் சொல்கிறார்கள் இத்தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள்.
அதேபோல் சுவரின் மேலே கான்கிரீட்டால் பூசும்போது கவனமும் அவசியம். அதிக தடிமனுடன் பூசிவிட்டால் சுவருக்குப் பலம் என நினைத்துவிடக் கூடாது.
போதுமான தடிமனைவிட அதிக அளவு தடிமனில் பூச்சு அமைந்தால் அதனால் சுவருக்கு பாதிப்பு தான் ஏற்படும். கான்கிரீட் பூச்சின் தடிமன் அதிகமாகிவிட்டால் நாளடைவில் சுவரில் காற்றுக் குமிழ்கள் காரணமாக விரிசல்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
ஹாலோ பிளாக், ப்ளை ஆஷ் கற்கள் போன்றவற்றால் கட்டப்படும் சுவரின் மேற்பரப்பு சுமார் 10 மி.மீ தடிமனில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவருக்கு இதைவிடச் சிறிது அதிக தடிமனில் பூச்சு போடப்படுகிறது.
ஏனெனில் செங்கற்களின் மேற்பரப்பு மேடு பள்ளங்கள் கொண்டவையாக இருக்கும்போது தடிமன் சிறிது அதிகம் போடுவது அவசியம் என்கிறார்கள். முறையான அளவுகளுடன் பூசப்பட்ட சுவர் சுமார் 20 ஆண்டுகள் எந்தப் பாதிப்பும் இன்றி அப்படியே இருக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்கிறார்கள் கட்டிட நிபுணர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT