Published : 13 Sep 2014 01:06 PM
Last Updated : 13 Sep 2014 01:06 PM
சென்னை போன்ற பெருநகரில் வசிப்பது ஒருவருக்கு எவ்வளவு வசதி, வாய்ப்புகளை அளிக்கிறதோ, அதே அளவுக்கு போக்குவரத்து நெரிசல், விலைவாசி உயர்வு போன்ற சிக்கல்களையும் சேர்த்தே தருகிறது. குறிப்பாக நகர எல்லைக்குள் சொந்த வீடு வாங்க வேண்டுமென ஒருவர் நினைத்தால் பிளாட் விலையைப் பார்த்தாலே தலை சுற்றிவிடும்.
இது போன்ற சிக்கல்களுக்குத் தீர்வாக சாட்டிலைட் டவுன்ஷிப் எனப்படும் சுற்றுப்புற நகரங்களை உருவாக்கும் திட்டம் தற்சமயம் பிரபலமாகி வருகிறது. ஆனால் இந்தத் திட்டம் சிறப்பான மாற்றமாக இருக்குமா?
சாட்டிலைட் டவுன்ஷிப் திட்டத்தின் வீச்சு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் மலைப்பாய் இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு வருடத்தில் 18 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. அவற்றில் 3 ஆயிரம் வீடுகள் மட்டுமே நகர்ப்புறத்தில் உள்ளன. மீதமிருக்கும் 15 ஆயிரம் வீடுகளோ சாட்டிலைட் டவுன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கட்டப்பட்டிருக்கின்றன.
இந்த அளவிற்கு புறநகர்ப் பகுதிகளில் வீடுகள் பெருகியிருப்பதற்குக் காரணம் நகர்ப்புறங்கள்தான். மக்கள் தொகை பெருக்கத்தால் நகர்ப்புறங்களில் இண்டுஇடுக்குகளில்தான் பலர் வாழ்ந்துவருகிறார்கள். ஏன் நகர்ப்புறத்தில் இப்படி அவதிப்பட வேண்டியிருக்கிறது எனச் சிந்தித்தால் அதற்கான விடை ஒன்றுதான். இன்று நகரங்களின் வளர்ச்சி பெரும்பாலும் சரிவர திட்டமிடப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
சாட்டிலைட் டவுன்ஷிப் இந்த இடப் பற்றாக்குறைக்கான தீர்வாகச் சொல்லப்படுகிறது. ஆனால் புறநகர்ப் பகுதிகளில் வேறு விதமான சிக்கல் நிலவுகிறது. நகரின் எல்லைக்கு அப்பால் குறைந்த விலையில் இடம் கிடைத்தவுடன் சாட்டிலைட் டவுன்ஷிப் என்ற பெயரில் கட்டிடங்கள் எழும்புகின்றன.
ஆனால் அடிப்படை வசதிகளற்று, நகர்ப்புறத்தோடு தொடர்பற்று கடைசியில் இங்கு வசிப்பவர்கள் தன்னந்தனித் தீவில் விடுபட்டவர்களாக மாறிப்போகிறார்கள். எப்படியும் 15லிருந்து 20 வருடங்களுக்குள் நாம் வசிக்கும் இடம் வளர்ச்சி அடைந்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே கானல் நீரைக்கண்டவர் போல வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் சாட்டிலைட் டவுன்கள் தன்னளவில் அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் நிலைக்கு உயர வேண்டும். சொல்லப் போனால் அவை சிறு நகரங்களாக மாற வேண்டும்.
புறநகர்ப் பகுதிகளின் உள்கட்டமைப்பை வளர்க்க அரிசன் பங்களிப்பு மிக அவசியம். பேருந்து போக்குவரத்து வசதிகளை மாநில அரசுகள் அதிகப்படுத்தலாம். மெட்ரோ ரயில் வழி போக்குவரத்தையும் நீட்டிக்க வேண்டும். மேம்பாலங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது முக்கியமல்ல.
அவை செயல்பாட்டளவில் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். தரமான சாலைகள் அமைப்பதுடன் தண்ணீர் வசதி, மின்சாரம், கழிப்பறை போன்ற வசதிகளும் சரிவர செய்யப்பட வேண்டும். நெரிசலான நகர வாழ்கைக்கு சாட்டிலைட் டவுன்கள் மாற்றாக அமைய வேண்டுமென்றால் அது தனியாரின் கையில் மட்டும் இல்லை. புறநகர்ப் பகுதிகளை அனைத்து வசதிகளும் கூடிய சிறு நகர் பகுதிகளாக மாற்ற அரசின் ஒத்துழைப்பு அவசியமானது.
� தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ம.சுசித்ரா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT