Published : 05 Apr 2014 01:00 PM
Last Updated : 05 Apr 2014 01:00 PM
வீடு என்பது வெறும் சொல்லல்ல. அது பலருக்குப் பெரும் கனவு. சம்பாத்தியமே போனாலும் கவலையில்லை நல்ல வீடு கிடைத்தால் போதும் என்பது தான் பலரது எதிர்பார்ப்பு. ஆக அப்படி ஒரு வீடு வாங்கும்போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு வீடு போன்று மற்றொரு வீடு இருக்காது.
எல்லா வீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறானவை. சில சமயங்களில் ஒரே மாதிரி தோன்றும் வீடுகளின் விலை வேறுபட்டிருக்கும். வீடு வாங்கும்போது அதிக விலை கொடுத்தாலும் சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம்.
விலை அதிகம் எனில் எப்படிச் சேமிப்பதாம் எனக் கேட்கிறீர்களா? வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள். வீட்டின் வெளிப் புறத்தைப் போல் உள்புறமும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருக்கிறதா எனச் சோதியுங்கள். வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் தேவையான அளவில் வருவதற்கு வசதியாக வீட்டின் உட்புறம் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.
அறைகளுக்கு அவசியமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் நிறைய வர வேண்டும்.
முறையான வெண்டிலேஷன் அமைந்துள்ள வீட்டில் அநாவசியமாக விளக்கெரிக்க வேண்டாம். குளிர்சாதன வசதியைத் தேவையின்றிப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் கோடையில் மட்டும் தான் அந்த வீட்டிற்கு ஏ.சி. தேவைப்படும். இரவில் மட்டும் தான் விளக்கு தேவைப்படும். தேவையான இடங்களில் தண்ணீர் கிடைக்குப் போதுமான குழாய் வசதி அமைந்திருக்க வேண்டும்.
மின் சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கப் போதுமான சுவிட்ச் போர்டுகளும் சுவிட்சுகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் வீட்டிற்குக் குடிபோகும் முன் கவனிக்கப்பட வேண்டியவை; இவற்றை எல்லாம் கவனிக்காமல் வீட்டிற்குக் குடிபோய்விட்டால் அதனால் அதிகச் சிரமம் ஏற்படும். நமக்குத் தேவையான விதத்தில் வீட்டை மாற்றியமைக்க நேரமும் பணமும் செலவாகும். இவை அநாவசிய விரயங்கள்.
பெரும்பாலும் வீட்டைத் தேர்வு செய்யும் முன்னர் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளதா மார்பிள்ஸா கிரானைட்டா என்பதை எல்லாம் உடனே கவனித்துவிடுவோம். ஆனால் குளியலறையில் தேவையான வாஷ் பேசின் உள்ளதா என்பது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்த விட்டே வீட்டை வாங்க வேண்டும்.
சில ஆயிரங்கள் குறைவு என்பதால் உட்புறம் முறையாக அமைக்கப்படாத வீட்டை வாங்குவது சரியல்ல. ஏனெனில் அவற்றைப் புதிதாக உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். பலர் அவசரப்பட்டு வீட்டை வாங்கிவிட்டு உள் அலங்காரத்திற்கு அதிகச் செலவு செய்து அவதிப்படுவார்கள். அந்தத் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள். வீடு என்பது நிம்மதிக்கானது. எனவே நிதானமாக வீடு வாங்கி நிம்மதியாகக் குடிபோங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT