Published : 26 Jan 2019 01:00 PM
Last Updated : 26 Jan 2019 01:00 PM
2018-ல் சென்னை நகரில் வாடகை விகிதம் 15 சதவீதம் அதிகரித்திருக்கிறது. வாடகை விகிதம் அதிகமாக இருக்கும் நகரங்களில் முதல் இடத்தில் மும்பையும் இரண்டாவது இடத்தில் சென்னையும் இருப்பதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மும்பை, சென்ற ஆண்டில் 18 சதவீத வாடகை உயர்வைச் சந்தித்திருப்பதாக ‘நோபுரோக்கர்’ (NoBroker.com) இணையதளம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னைப் பகுதிகளில் போதுமான ரியல் எஸ்டேட் வளர்ச்சி இல்லாததே இந்த வாடகை விகித உயர்வுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அருகில் வசிக்கும்பொருட்டு குடியிருப்புகளைத் தேர்ந்தெடுப்பதும் இந்த வாடகை விகித உயர்வுக்குக்கான காரணம்.
“நுங்கம்பாக்கம், எழும்பூர், அண்ணா நகர் போன்ற சென்னையின் குடியிருப்புப் பகுதிகளின் வாடகை மதிப்புப் பெரிய அளவுக்கு அதிகரித்திருக்கிறது. நகரின் மையத்தில் சில குடியிருப்புத் திட்டங்களே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் இருப்பதால் இந்தப் பகுதிகளையே வீடு வாங்க நினைப்பவர்கள் அதிகமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால், இந்தப் பகுதிகளின் வாடகை மதிப்பு உயர்ந்துவருகிறது” என்று சொல்கிறார் ரியல்டர்ஸ் இந்தியாவின் தேசிய (NAR-INDIA) ஆலோசனைக் குழு தலைவரும் கிரீன் குளோபல் ரியல்டியின் நிறுவனருமான அப்துர் ரவூஃப்.
தேவையும் விநியோகமும்
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி மதிப்பீடுகளைப் பார்க்கும்போது, நகரின் மத்தியப் பகுதிகளில் குறிப்பிட்ட சில வார்டுகளில் கட்டப்பட்ட புதிய வீடுகளின் எண்ணிக்கை, சோழிங்கநல்லூர், பெருங்குடி, அம்பத்தூர் போன்ற பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளைவிடக் குறைவாக இருக்கிறது.
“2012 முதல் 2018 வரையிலான காலத்தில், புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்திருக்கின்றன. சில பகுதிகளில் விற்பனையாகாத குடியிருப்புகள் இருக்கலாம். ஆனால், வீடுகளுக்கான தேவையும் இருக்கிறது. புதிய அலுவலக இடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால், அந்த இடங்களுக்கு அருகில், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான தேவை உருவாகியிருக்கிறது. ஜிஎஸ்டியில் திருத்தம், பொதுவான கட்டுமான விதிகளைப் புதுப்பிப்பது போன்ற அம்சங்களை ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்க்கிறது” என்கிறார் நகரத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை நிபுணர் என். மாதவன்.
இந்த ஆய்வில், சென்னையிலிருந்து கலந்துகொண்டவர்கள் 49 சதவீதம் பேர், அலுவலகங்களுக்கு அருகில் வாடகை வீட்டில் இருப்பதையே தேர்வு செய்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். குடியிருப்புப் பகுதியின் பாதுகாப்பைக் கணக்கில்கொண்டு வாடகை வீட்டைத் தேர்வுசெய்ததாக 44 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ஆய்வின்படி, சென்னையின் 55 சதவீத வாடகைதாரர்கள் தரகுத் தொகை இல்லாமல் வாடகை வீட்டைத் தேர்வு செய்வதை விரும்புகிறார்கள். 29 சதவீத வாடகைதாரர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் மூலமே வாடகை வீட்டைத் தேர்வுசெய்திருக்கிறார்கள். 19 சதவீதத்தினர், ரியல் எஸ்டேட் இணையதளங்கள் வழியாக வாடகை வீட்டை அடைந்திருக்கிறார்கள். 8 சதவீதத்தினர், தரகர்கள் மூலம் வாடகை வீட்டை அடைந்திருக்கிறார்கள் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகள் தேவையாக இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.
சென்னை வாடகைதாரர்களின் முன்னுரிமைகளில் தண்ணீர் விநியோகம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, சென்னையில் வாடகை வீட்டுக்கு அளிக்கப்படும் முன்பணத்தின் சதவீதம் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. சென்னையில் 57 சதவீத வாடகைதாரர்கள் சொந்த வீடு வாங்க ஆசைப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.
- அலோய்சியஸ் சேவியர் லோபஸ், தி இந்து (ஆங்கிலம்) | தமிழில்: என். கௌரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT